பின்னால் அமர்ந்து செல்லும் பயணியும் கட்டாயமாக தலைக்கவசம் அணியணும்!- இல்லேன்னா..?1

பின்னால் அமர்ந்து செல்லும் பயணியும் கட்டாயமாக தலைக்கவசம் அணியணும்!- இல்லேன்னா..?1

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் மரணங்களை தடுக்கும் விதமாக சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதன்படி விபத்துகளை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை கமிஷனர், தயானந்த் கட்டாரி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டு வோருக்கு, நூதன தண்டனையாக இரண்டு மணி நேரம் விழிப்புணர்வு பாடம் & படங்களை பார்க்கும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதன்படி, சென்னை நகரில், சோழிங்க நல்லுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மேலும் தமிழக அரசு சார்பில் சாலை பாதுகாப்பு ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் மாநில சாலை பாதுகாப்பு குழு கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், உள்துறை, நிதித்துறை, நெடுஞ்சாலை துறை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, போக்குவரத்து துறை செயலாளர்கள், காவல் துறை இயக்குநர், சென்னை பெருநகர காவல் ஆணையர் மற்றும் பிற துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு குழுவின் பரிந்துரையை ஏற்று, வாகனத்தை அதிவேகமாக இயக்குதல், சிவப்பு விளக்கை தாண்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், வாகனத்தை ஓட்டும்போது செல்போனை பயன்படுத்துவது, சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுதல் அல்லது சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களுக்கு சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமங்களை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யுமாறு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், உயிரிழப்பு ஏற்படுத்திய வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமங்களை திரும்பப் பெறுவதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தினரால் நடத்தப்படும் பயிற்சி மையங்களில் இரண்டு நாள் புத்தாக்க பயிற்சியினை அவரவர்களின் சொந்த செலவில் மேற்கொண்டு உரிய சான்றினை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனத்தை ஓட்டும்போது அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும். சோதனை அலுவலர்கள் ஆய்வின்போது அசல் உரிமத்தை கட்டாயம் காண்பிக்க வேண்டும்.

ஹெல்மெட் போடாவிட்டால் 2 மணிநேரம் பாடம் படிக்க வேண்டும்

அத்துடன் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் பயணியும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளை அருகாமையில் உள்ள தாலுகா காவல் நிலையம் அல்லது வட்டார போக்குவரத்து அலுவலகம் அழைத்துச் சென்று குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் விழிப்புணர்வு பற்றிய பயிற்சி கொடுக்கப்பட வேண்டும், அத்துடன் உரிய அபராதத்தையும் வசூலிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!