புத்தகப் புழுக்களுக்கு உதவும் தளம்!

புத்தகப் புழுக்களுக்கு உதவும் தளம்!

சிறந்த புத்தகங்களின் பட்டியல் எப்போதுமே சர்ச்சைக்கும், விவாதத் துக்கும் உரியவையாக இருந்தாலும், படிக்க வேண்டிய புத்தகங்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்க‌ இத்தகைய பட்டியல்கள் சிறந்த வழி என்பதை மறுப்பதற்கில்லை. விடுபடல்கள் மற்றும் அளவுகோல் தொடர்பான கேள்விகளை மீறி, இந்தப் பட்டியல்கள் கவனிக்க வேண்டிய நூல்களை முன்னிறுத்தத் தவறுவதில்லை. இத்தகைய பட்டியல்களின் அடிப்படையில் உலகின் சிறந்த புத்தகங்களின் பட்டியலைத் தொகுத்தளித்து வாசகர்களுக்கு வழிகாட்டுகிறது ‘தி கிரேட்டஸ்ட் புக்ஸ்.ஆர்க்’ இணையதளம்.

book feb 14a

இந்தத் தளத்தில் பிரதானமாக, உலகின் சிறந்த நாவல்களின் பட்டியல் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. பல்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ப இந்தப் பட்டியலை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இதே போல புனைகதை வரிசையில் சிறந்த புத்தகங்களின் பட்டியலும் தனியே இடம்பெற்றுள்ளது.

சிறந்த நூல்களுக்கான நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியல்களை ஒருங்கிணைத்து அவற்றில் இடம்பெற்றுள்ள பரிந்துரை மற்றும் புத்தகங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியல் மென்பொருள் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூலப் பட்டியல்களும் தனியே தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன‌.

இவை தவிரப் பலவிதமான புத்தகங்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளன. 2014-க்குப் பிறகு இந்தத் தளம் புதுப்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றாலும், இதில் உள்ள புத்தகப் பட்டியல்கள் வாசகர்களுக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளன. நிச்சயமாகப் புத்தகக் காதலர்களுக்கு சுவாரசியம் அளிக்கக்கூடிய இணையதளம். தீவிர வாசிப்புப் பழக்கம் கொண்டவர்கள் தாங்கள் தவறிவிட்ட பொக்கிஷங்களை இதன் மூலம் அறியலாம். புதிய வாசகர்கள் அடுத்து படிக்க வேண்டிய முக்கியமான புத்தகங்களை இங்கு அடையாளம் காணலாம்.

இணையதள முகவரி: http://thegreatestbooks.org/

சைபர்சிம்மன்

error: Content is protected !!