சிறுகதைக்கான இடம் குன்றிவிட்டது,..ஏன்?வாசிப்புக் குறைந்துவிட்டதா? – AanthaiReporter.Com

சிறுகதைக்கான இடம் குன்றிவிட்டது,..ஏன்?வாசிப்புக் குறைந்துவிட்டதா?

வேறு ஒரு இழையில் நடந்து கொண்டிருக்கும் உரையாடல்கள் எனக்குள் சில கேள்விகளை எழுப்பின. இன்று வெகுஜன இதழகளில் சிறுகதைக்கான இடம் குன்றிவிட்டது, .ஏன்? கதை வாசிப்புக் குறைந்துவிட்டதா? புனைவுகள் தேவையற்ற சமூகமாக ஆகிவிட்டோமா? காத்திரமான கதைகள் எழுதும் எழுத்தாளர்கள் அருகிவிட்டார்களா?

70களின் மத்தியில் இலக்கியச் சிற்றேடுகளில் எழுதுவோர், வெகுஜன இதழ்களில் எழுதுவோர் என இரு வகைப்பாடுகள் இருப்பதாக ஒரு கற்பிதம் ஏற்பட்டது. வெகுஜன இதழ்களில் எழுதிப் பிரபலமடைந்த பலர் இலக்கியச் சிற்றேடுகளில் தொடங்கியவர்கள்தான். ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன், மட்டுமல்ல, இலக்கியச் சிற்றேடுகளால் கொண்டாடப்பட்ட லாசரா, தி.ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், ஆதவன், வண்ண நிலவன், பிரபஞ்சன், போன்றோரும் வெகுஜன இதழ்களில் எழுதினார்கள். தங்கள் பாணிகளை மாற்றிக் கொள்ளவில்லை. வெகுஜனப் பத்திரிகை ஆசிரியர்களும் இரு வகையான எழுத்தாளர்களையும் ஒன்றாகவே, நன்றாகவே நடத்தினார்கள்

அனைவருக்கும் அழுத்தமாகக் கதை சொல்வது என்பதிலேயே கவனம் இருந்தது. வாசகனைத் தொடும் கதையாக இருக்க வேண்டும் எனபதால் அவர்கள் வாழ்க்கையிலிருந்து கதைகளை அகழ்ந்தெடுத்தார்கள். வாழ்வின் யதார்த்தம் 60, 70 சதவீதமும் புனைவு ஒரு 30 சதவீதம் அளவிலும் கலந்திருந்தன.’கதைகளில் காணப்படும் பெயர்கள் சம்பவங்கள் யாவும் கற்பனையே’ என்று ஒரு பொறுப்புத் துறப்பு வேறு இடம் பெற்றிருக்கும். அது பொய் என்றாலும் வழக்குகளை எதிர் கொள்வதைத் தவிர்க்க ஒரு கேடயம்.

யதார்த்த வாதக் கதைகள் மறைந்ததுதான் சிறுகதைகள் காணாமல் போனதற்குக் காரணமா? சிறுகதைகள் இழந்த இடத்தை இன்று எது கைப்பற்றியிருக்கிறது? வெகுஜன இதழ்களில் சினிமா. இலக்கியச் சிற்றேடுகளில் இணை சினிமா. அதற்கு அடுத்தபடியாக அரசியல். அரசியல் செய்திகளில் கற்பனைகள் விரவியிருப்பதை உணர முடிகிறது. சமூகம் தனக்கான புனைவை அரசியலில் தேடுகிறதோ?

இலக்கிய உலகில் ஒரு விவரிக்க முடியாத சுழற்சி இருக்கிறது. முப்பதுகளில் புதுமைப்பித்தன், மணிக்கொடி எழுத்தாளர்கள். பின் இருபதாண்டுகளுக்குப் பின் ஐம்பதுகளில் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, ஜானகிராமன் என்று அடுத்த தலைமுறை. 70களில் ஆதவன், வண்ண நிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன் என்று ஒரு விளைச்சல். 90களில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இன்ன பிறர். அப்புறம்?

சிறுகதைகளை மீட்டெடுக்க முடியுமா? முடியும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

இல்லை, அதை கிராமபோன் ரிகார்ட், ஆர்மோனியப் பெட்டி, அலாரம் கடிகாரம்,குதிரை வண்டி, கார்பன் பேப்பர் வரிசையில் சேர்த்துவிடத்தான் வேண்டுமா?

மாலன்