அச்சச்சோ.. உங்க உப்புலே பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்காம்!- அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு

அச்சச்சோ.. உங்க உப்புலே பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்காம்!-  அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் உப்பு நல்லதா.. கெட்டதா எனும் விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. மனித நாகரீகத்தின் முதல் அடியே ருசியில்தான் துவங்குகிறது. ருசிக்கு மனிதன் அடிமையாகி போனதன் விளைவே அது. உப்பு சப்பில்லாத விஷயங்களையெல் லாம் பேசி பேசி தீர்த்திருக்கிறோம். ஆனால் உப்பைப்பற்றி எப்போதாவது பேசியிருக்கிறோமா?. மனிதனுக்கு உப்பு என்ற ஒன்றை தெரிந்திருக்காவிட்டால் அவன் நாடோடி வாழ்க்கையை அவ்வளவு சுலபமாக விட்டிருக்க மாட்டான் என்கிறார்கள் பரிணாம ஆய்வாளர்கள். அதாவது மனிதன் சாப்பிட கிடைத்த தானியங்களுடன் சேர்த்துக்கொள்ள தேவையான உப்பு எங்கெல்லாம் கிடைத்ததோ அங்கெல்லாம் புதிய மனித குழுக்கள் தங்கி மனித குடியேற்றங்கள் உருவாகியிருக் கின்றன. கடற்கரை பகுதியில் தோன்றிய மனித நாகரீகங்கள் எல்லாம் பெரும்பாலும் உப்பை அடிப்படையாகக் கொண்டவை என்கிறார்கள். அவ்வளவு ஏன் உயிர்கள் முதலில் தோன்றியதே உப்பு நீரில் இருந்துதான் என்று அறிவியல் அடித்துச் சொல்கிறது. இப்படி உப்புக்கு பெரிய வரலாறே இருக்கிறது.

இப்போது சர்வதேச அளவில் உப்பு என்பது சமையலில் அத்தியாவசியப் பொருளாகவே பயன் படுத்தப்படுகிறது. உலக அளவில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உப்பை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. ஒரு வருடத்தில் அளவிற்கு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உப்பின் அளவு 26 மில்லியன் மெட்ரிக் டன்கள். இதுதான் உணவுக்காகவும், தொழிற்சாலை பயன் பாட்டுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனிடையே இந்த உப்பில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மும்பை ஐஐடி கல்வி நிலைய பேராசிரியர்கள் நடத்தி ஆய்வில்தான் உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள், டூத் பேஸ்டுகள் உள்ளிட்ட பொருட்களில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன. இவை மட்டுமல்லாமல் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களால் ஆண்டுதோறும் 50 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் சேர்கின்றன. இதனை கடல் வாழ் உயிரினங்கள் உண்பதால் கடல் ஆமைகள், கடல் பறவைகள் மற்றும் திமிங்கலங்களின் உடல்களில் பிளாஸ்டிக் காணப் படுகிறது. உலகின் பல நாடுகளின் கடற்கரை மணலிலும் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதாக ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்தான் ஒரு கிலோ உப்பில் 63.76 மைக்ரோ கிராம் அளவில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் எட்டு முன்னணி நிறுவனங்கள் விற்பனை செய்யும் உப்புகளில், ஒவ்வொரு நிறுவனத்திலிருந்து மூன்று பாக்கெட் டுகள் சூப்பர் மார்க்கெட்களில் இருந்தும், உள்ளூர் கடைகளில் இருந்தும் பெறப்பட்டன. அவை யனைத்துமே வெவ்வேறு தயாரிப்புத் தேதி மற்றும் தயாரிப்பு எண்களைக் கொண்டவை. தேர்ந் தெடுக்கப்பட்ட ஆறு நிறுவனங்களில் ஆறு குஜராத்தைச் சேர்ந்தவை; மீதமுள்ள இரண்டும் கேரளா மற்றும் மகாராஷ்டி ராவைச் சேர்ந்தவை. இவற்றைக் கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் அந்த மாதிரிகளில் மைக்ரோபிளாஸ்டிக் பைபர்கள், PET, பாலி எத்திலீன் எனப் பல்வேறு வகையான பிளாஸ்டிக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாள் ஒன்றுக்கு ஒரு நபர் சராசரியாக 5 கிராம் அளவுக்கு உப்பை உட்கொண்டால் ஆண்டிற்கு 117 மைக்ரோ பிளாஸ்டிக் நுண் துகள்களை உட்கொள்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் நுண் துகள்களை உட்கொள்வது அதிகரிப்பதால் உடல்நல கோளாறுகள் ஏதும் ஏற்படுமா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று மும்பை ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!