அரசு மெல்லச் சாயும் – அது விரைவுற உதவலாமே! – கமல் ஸ்டேட்மென்ட்!

அரசு மெல்லச் சாயும் – அது விரைவுற உதவலாமே! – கமல் ஸ்டேட்மென்ட்!

தமிழக அரசியல் தனி ஆவர்த்தனம் செய்து வரும் கமல்ஹாசன் வரும் நவம்பர் 7ம் தேதி அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படியெல்லாம் அவசரப்படபடாது என்று சொல்லி விட்டார். அதே சமயம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் , “தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. முழுவிவரம் கீழே” என்று தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள விவரம் இதோ:

கொசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாறைவிட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம்.

வல்லூர் மின் நிலையமும், வடசென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கொசஸ்தலையாற்றில் கொட்டுகின்றன. இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல வருடங்களாக போராடியும் அரசு பாராமுகமாய் உள்ளது. மீனவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெழுப்ப முற்பட்டதும் செவிடர் காதில் ஊதிய சங்குதான்.

பற்றாக்குறைக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும், பாரத் பெட்ரோலியமும் தங்கள் எண்ணை முனையங்களை நட்டாற்றில் கட்டியிருக்கின்றன. காமராஜர் துறைமுகத்தை விரிவுபடுத்துகிறோம் என்ற போர்வையில் கோசஸ்தலையின் கழிமுகத்தின் 1000 ஏக்கர் நிலத்தை சுருட்டும் வேலையும் நடப்பதாக கேள்விப்படுகிறேன். நில வியாபாரிகளுக்குக் கொடுக்கும் முன்னுரிமையையும் உதவியையும் ஏழை மக்களுக்கு கொடுக்காத எந்த அரசும் நல் ஆற்றைப் புறக்கணிக்கும் உதவாக்கரைகள் தான்.

வழக்கமாக வரும் மழை போனவருடம் போல் பெய்தாலே வடசென்னை வெள்ளக்காடாகும். வானிலை ஆராய்சியாளரின் எதிர்பார்ப்புப்படி இவ்வருடம் அதிகம் மழை வரும் பட்சத்தில் 10 லட்சம் வடசென்னை வாழ் மக்களுக்கு பெரும் பொருட்சேதமும் ஏன்? உயிர் சேதமும் கூட ஏற்படலாம் என்பது அறிஞர் அச்சம். 100 வாக்கி டாக்கிகளும், பல படகுகளும் இவ்வருடம் வெள்ளத்தில் தவிக்கப்போகும் மக்களை ஒரு வேலை கரையேற்றலாம்.

அவர்கள் வாழ்க்கையில் கரை ஏற நிரந்த தீர்வு காண்பதே நல்லரசுக்கு அடையாளம். இது நிகழ்து முடிந்த தவற்றி விமர்சனமல்ல. நிகழக் கூடிய ஆபத்திற்கான எச்சரிக்கை. அரசு விளம்பரப்படுத்தும் ஆபத்து உதவி எண்ணுக்கு கூப்பிடலாம். ஆபத்து வந்தபின் கூப்பிட்டுக் கதறாமல் முன்பே அரசையும் மக்களையும் எச்சரிக்கிறோம். மக்கள் செவிசாய்ப்பார்கள் என்று நம்புகிறோம். ஆனால், அரசு அது செவிசாய்க்காமல் மெல்லச்சாயும். அது விரைவுற நாமும் உதவலாமே!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!