மெட்ரோவில் இலவச பயணமா? வேணாம்!- மெட்ரோமேன் ஸ்ரீதர் வேண்டுகோள்!

மெட்ரோவில் இலவச பயணமா? வேணாம்!- மெட்ரோமேன் ஸ்ரீதர் வேண்டுகோள்!

இந்திய தலைநகரையே ஆளும் ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ள பெண்களுக்கான இலவச மெட்ரோ ரயில் பயண திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கூடாது என்று வலியுறுத்தி டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் முன்னாள் தலைவர் இ.ஸ்ரீதரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..

டெல்லியில் பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டத்தை அமல்படுத்த ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது.இதற்குதான் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் முன்னாள் தலைவர் இ.ஸ்ரீதரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தற்போது டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் தலைமை ஆலோசகராக ஸ்ரீதரன் பணியாற்றி வருகிறார்.ஆம் ஆத்மி அரசின் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கூடாது என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை ஸ்ரீதரன் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், ”டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சம பங்குதாரர்களாக உள்ளன. இந்நிலையில் ஒரு பங்குதாரர் மட்டும் குறிப்பிட்ட பிரிவினருக்கு சலுகை அளிக்க முடிவு செய்ய முடியாது. இந்த திட்டம் டெல்லி மெட்ரோவை திவாலாக்கிவிடும். டெல்லி மெட்ரோவின் பணிகளில் நான் தலையிடக் கூடாது என்று தான் இருந்தேன். ஆனால் டெல்லி அரசின் இந்த முடிவால் நான் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் ஏற் பட்டுள்ளது.முதன்முதலில் டெல்லி மெட்ரோ துவக்கப்பட்ட போது யாருக்கும் அதில் பயண சலுகை வழங்கக்கூடாது என்ற உறுதியான முடிவை எடுத்தேன். ஏனென்றால் டெல்லி மெட்ரோ வின் வருவாய் அதிகரித்தால் தான் அதன் கட்டணம் குறைவாக இருக்கும். ஏழை எளிய மக்களும் டெல்லி மெட்ரோவை பயன்படுத்த முடியும். அதேசமயம் டெல்லி மெட்ரோவால் தன் கடனையும் அடைக்க முடியும்.

கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி டில்லி மெட்ரோ துவங்கப்பட்ட போது அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களும் டிக்கெட் வாங்கி தான் மெட்ரோ ரயிலில் பயணித்தார்.இந்த சூழ்நிலையில் பெண்களுக்கு மட்டும் கட்டணத்தை ரத்து செய்தால் அது மற்ற மாநில மெட்ரோக் களுக்கும் ஆபத்தான முன் உதாரணமாகிவிடும். இந்த திட்டத்தால் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு ஏற்படும் இழப்பை மாநில அரசு ஈடுகட்டும் என்பதை ஏற்க முடியாது. டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. மெட்ரோ நெட்வர்க் விரிவடையும் போதும் கட்டணம் உயர்த்தப்படும் போதும் வருவாய் மேலும் அதிகரிக்கும். எனவே இந்த பயண சலுகை திட்டத்தால் ஏற்படும் இழப்பை மாநில அரசால் ஈடுகட்ட முடியாது. டெல்லி அரசு பெண்களுக்கு பயண சலுகை வழங்குவதற்கு பதிலாக அதற்கான தொகையை பெண்களுக்கு மானியமாக நேரடியாக வழங்கலாம்” என்று ஸ்ரீதரன் தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!