எத்தனை இடர்கள் வந்தாலும், யாதும் ஊரே யாவரும் கேளிர் ..!?

எத்தனை இடர்கள் வந்தாலும், யாதும் ஊரே யாவரும் கேளிர் ..!?

இருவேறு இயல்பு கொண்ட, ஏற்றத்தாழ்வான பண்பாடு உடைய இரு இனக்குழுக்கள் முதன்முறையாக சந்திக்கும்போது ஏற்படும் நிகழ்வுகள் மிகவும் வேதனை நிறைந்தவை. கொஞ்சம் வேடிக்கையும் (?) கலந்தவை.

அமெரிக்காவை ஆட்கொள்ள மிகப்பெரிய பாய்மரக் கப்பலில் கொலம்பஸ் வந்திறங்கியபோது, தங்கள் கண்டத்துக்கு வந்த ‘கண்டத்தை‘ உணராமல் அப்பாவி செவ்விந்தியர்கள் இருவர் சிறிய படகில் சென்று கொலம்பஸிடமே வணிகம் செய்ய முயன்றது இதுமாதிரியான ஒரு நிகழ்வுதான்.அதேபோன்ற மற்றொரு நிகழ்வுதான் கேரளத்தில் மது என்ற பழங்குடியின இளைஞர், ‘நாகரீக‘ சமூகத்திடம் மாட்டிக் கொண்டு மாண்டுபோன கதை.

God must be Crazy என்ற ஆங்கில படத்தில் ஒரு காட்சி வரும். அந்தப் படத்தில் நில உடைமை பற்றி எதுவும் தெரியாத ஆப்பிரிக்க புஷ்மன் பழங்குடியின மனிதர் ஒருவர், காட்டின் விளிம்பில் மந்தையாக மேயும் ஆடுகளில் ஒன்றை வேட்டை விலங்காக கருதி அதன்மேல் அம்பெய்வார். அதற்காக சிறைவாசமும் அனுபவிப்பார். ‘சிறை‘ என்றால் என்னவென்று புரியாமல் அவர் அமர்ந்திருக்கும் காட்சி, அவரது கண்கள் இன்னும் எனக்கு நினைவிருக்கின்றன.

ஓர் அளவுகோலின் மறுமுனை, அதாவது Another side of the scale போல, இருவேறு பண்பாட்டு சந்திப்புகளில் இன்னொரு விதமான கோணமும் உண்டு. சிந்துவெளி பண்பாடு செழித்திருந்த காலத்தில் ஹரப்பா அல்லது மொகஞ்சதாரோ நகருக்கு முதன்முறையாக வந்தார் புதியவர் ஒருவர். பசி காரணமாக கடையொன்றில் அவர் இனிப்புகளை எடுத்து உண்கிறார். அவர் திருடி விட்டதால் காவலர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். மொழி பிரச்சினையால் அவருடன் உரையாட முடியவில்லை. தண்டம் செலுத்த அவரிடம் கால்காசு கூட இல்லை, பண்டமாற்று செய்யவும் பொருள் இல்லை. ஆகவே திருடிய குற்றத்துக்காக அவருக்கு மொட்டை அடிக்கப்படுகிறது. நகர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார். பின்னர் இரவில் வைக்கோல் மெத்தையிட்ட கதகதப்பான அறையில் சிறை வைக்கப்பட்டு காலையில் விடுவிக்கப்படுகிறார்.

சிறைமீண்ட அவர், சொந்த நாகரீகத்துக்குத் திரும்புகிறார். தனது கூட்டத்திடம் ‘சிந்துவெளி நாகரீகத்தைப் போல சிறந்த நாகரீகம் இல்லை‘ என்கிறார். ‘அங்கே பசித்தால் எந்தக் கடையிலும் எதையும் எடுத்து உண்ணலாம். கட்டணம் கிடையாது‘ என்கிறார். ‘புதிதாக வருபவர்களுக்கு மொட்டை அடித்து அவரை கனப்படுத்துவார்கள். நகர்வலமாக கொண்டு சென்று அரச மரியாதை தருவார்கள், இரவில் தங்க கட்டணமில்லா அறையும் உண்டு‘ என்கிறார்.

பாவம் சிந்துவெளி மக்கள். முள்ளம்பன்றி கையுறைகளால் அந்த புதியவரை மொத்தவில்லை. மாறாக மெத்மெத்தென மயில் தோகைகளால் அவருக்கு ஒத்தடம் கொடுத்திருக்கிறார்கள். விளைவு? சிந்துவெளி மக்கள் தந்தது தண்டனை என்பதுகூட அந்த புதியவருக்குத் தெரியவில்லை. இதனால், சிந்துவெளி மக்கள் ‘வந்தாரை வாழவைக்கும் மக்கள்‘ என்ற முடிவுக்கு புதியவரும் அவரைச் சார்ந்தவர்களும் வருகிறார்கள். சிந்துவெளி மக்கள் ரொம்ப நல்லவர்கள். அங்கு நாம் படையெடுக்கலாம் என அவர்களுக்குத் தோன்றுகிறது. அவர்கள் படையெடுக்கிறார்கள்.

கொலம்பஸ் அமெரிக்க பெருங்கண்டத்தில் கால் வைக்கும் முன் இஸ்பானியோலா தீவைத் தொட்டான். அங்கிருந்த பழங்குடி மக்களைப் பற்றி ஸ்பெயின் நாட்டு மன்னருக்கு அவன் சொன்ன வரிகள் காவியப் புகழ்பெற்றவை.

‘மாமன்னரே இங்கு வாழும் மக்கள் மிகவும் நல்லவர்கள். இவர்கள் இனிமையானவர்கள், கனவான்கள். எப்போதும் புன்னகை பூத்தபடி இருக்கிறார்கள். ஸ்பெயின் மன்னர் அவர்களே, நான் அறுதியிட்டுக் கூறுகிறேன். உலகத்தில் இப்படியோர் அருமையான நாடோ, மக்களோ இருக்கவே முடியாது‘

கொலம்பஸின் இது போன்ற ஒரு ‘புரிதலுக்கு‘ பிறகுதான் அமெரிக்கப் பழங்குடி மக்கள் குதறப்பட்டார்கள். குருதியில் குளிப்பாட்டப்பட்டார்கள்.

எது எப்படியோ, எத்தனை இடர்கள் வந்தாலும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டு விழுமியத்துடன் வாழும் ஓர் இனத்தில் பிறந்திருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். பழங்குடியின இளைஞர் மதுவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
‘அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு‘.

மோகஹ ரூபன்

error: Content is protected !!