ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 104 வயது விஞ்ஞானி சுவிட்சர்லாந்தில் சட்டபூர்வமாக தற்கொலை! – AanthaiReporter.Com

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 104 வயது விஞ்ஞானி சுவிட்சர்லாந்தில் சட்டபூர்வமாக தற்கொலை!

கொடுமையான அல்லது கடுமையான நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டு துன்புறுவோரையும் இனி பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கருதப்படும் நோயாளிகளையும் அவர்களது உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நோயாளிகளை துன்பம் இல்லாமல் கொல்வது கருணைக் கொலை எனப்படுகிறது. கருணைக் கொலை செய்வதை அதற்காக, நடவடிக்கை எடுப்பது, நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்று இருவகையாக பிரித்துள்ளனர்.

நடவடிக்கை எடுப்பது: மருத்துவர்களோ அல்லது வேறு நபர்களோ (மருத்துவ உதவியாளர்கள்) நோயாளி மரணமடைவதற்காக திட்டமிட்டு (விஷ ஊசி போடுவது) செய்வது.

நடவடிக்கை எடுக்காமல் இருப்பது: நோயாளி உயிர் வாழ்வதற்காக செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருப்பது அல்லது செய்து கொண் டிருப்பதை நிறுத்துவது. செயற்கை சுவாசத்தை நிறுத்துவது. இந்த டைப்பில் சூசை செய்து கொள்ள சட்டப்படி அனுமதி வழங்கும் நாடான சுவிட்சர்லாந்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கருணை கொலை, தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 297 ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து ஆயிரத்தை தாண்டி விட்டது. 65 வயதுக்கு உட்பட்டோரும் விருப்பத்துடன் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று அரசு தெரிவித்திருந்த நிலையில் ஆஸ்தி ரேலியாவைச் சேர்ந்த 104 வயது விஞ்ஞானி சுவிட்சர்லாந்தில் சட்டபூர்வமாக தற்கொலை செய்து கொண்டார்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியராக பணி யாற்றியவர் டேவிட் குட்ஆல் (104). அந்த நாட்டின் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவராகவும் திகழ்ந்தார். பணி ஓய்வுக்குப் பிறகும் தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார். 100 வயதுக்கு பிறகு முதுமை அவரை வாட்டியது. இதன்காரணமாக “தன்னை கருணை கொலை செய்ய வேண்டும் அல்லது தற்கொலைக்கு உதவ வேண்டும்” என்று ஆஸ்திரேலிய அரசிடம் அவர் முறையிட்டார். இதற்கு சட்டத்தில் இடமில்லை என்று அரசு மறுப்பு தெரிவித்தது.

அதே சமயம் சுவிட்சர்லாந்தில் கருணை கொலை மற்றும் தற்கொலைக்கு உதவுவது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. அங்கு சட்டபூர்வமாக தற்கொலை செய்து கொள்ள டேவிட் குட்ஆல் முடிவு செய்தார். அதன்படி அண்மையில் அவர் சுவிட்சர்லாந்து சென்றார். அங்குள்ள பேசல் நகரில் கடந்த 9-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியபோது, “ஆஸ்திரேலியாவில் மரணமடைய விரும்பினேன். அதற்கு சட்டம் அனுமதிக்க வில்லை. எனவே சட்டபூர்வமாக தற்கொலை செய்து கொள்ள சுவிட்சர்லாந்து வந்துள்ளேன். முதியவர்கள் உயிர் துறக்க விரும்பினால் அதற்கு அனுமதி வழங்குவது குறித்து ஆஸ்திரேலியாவும் இதர நாடுகளும் பரிசீலிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

கடந்த 10-ம் தேதி பேசல் நகர் மருத்துவமனையில் விஷ ஊசி செலுத்தப்பட்டு டேவிட் குட்ஆல் மரணமடைந்தார். சாகும்போது பீத்தோவனின் 9-வது சிம்பொனியை ரசித்துக் கொண்டே அவர் உயிர் துறந்தார். அவரது விருப்பப்படி மருத்துவ ஆய்வுக்காக உடல் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.