நம்முடைய எழுதும் பழக்கத்தை மீட்டெடுங்கள்! – தங்கர்பச்சான்!!

நம்முடைய எழுதும் பழக்கத்தை மீட்டெடுங்கள்! – தங்கர்பச்சான்!!

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கண் விழிக்குக்கும் போதே படுக்கையில் கிடக்கும் கைப் பேசியைத் தான் முதலில் தேடுகின்றோம். கையில் எடுத்த வேகத்தில் யார் யார் நமக்கு என்ன செய்தி அனுப்பி உள்ளார்கள் என்ற ஆவலில் காலை வணக்கம், good morning போன்ற வாழ்த்து செய்திகளை படித்து விட்ட பிறகுதான் படுக்கையை விட்டு எழுகிறோம்.

அப்படி நாம் படிக்கும் வாழ்த்து செய்திகளில் என்ன தான் உள்ளது? யாரோ எழுதிய வாசகங்கள், யாரோ உருவாக்கிய படங்கள், வெளிநாட்டு மனிதர்களின் படங்கள் என்று வரிசைகட்டி நிற்கின்றன.

3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொற்களை உடைய நம் மொழியில் படித்தவர்கள் ஆகிய நாம் நம் வாழ்நாள் முழுவதுமே அதிகபட்சமாக ஆயிரத்திற்கும் குறைவான தமிழ் சொற்களை மட்டுமே பயன்படுத்தி வாழ்கின்றோம். படிக்காத மக்களிடம் மட்டுமே தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

பத்தாயிரம் ஆண்டுகளாக போற்றி, காப்பாற்றப்பட்டு வளர்த்து வந்த தமிழ்மொழி கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் பயன்பாட்டில் அழிந்து தேய்ந்து குறைந்துவிட்டது.

நம்முடைய தலைமுறையே 1000 சொற்களுக்குள் அடங்கி விட்ட நிலையில் நமது அடுத்த தலைமுறை 500 சொற்கள் அதற்கு அடுத்த தலைமுறை 200, 100 சொற்கள் என்று பயன்பாட்டில் குறைந்துகொண்டே வந்து விடும்.

அண்மையில் வெளியான கூகுல் பிபிசி ஆய்வின்படி உலகளவில் அதிக வாழ்த்து செய்திகளை பரிமாறிக் கொள்வது இந்தியர்கள்தான் என்றும், அதிலும் குறிப்பாக தமிழர்கள் தான் என்றும் ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

இந்த வாழ்த்துச் செய்திகளில் உள்ள எதை எதையோ பகிர்வதை விட்டு விட்டு நாமே சிந்தித்து நம் கைகளால் ஒரு வெள்ளைக்காகிதத்தில் எழுதி படமெடுத்து அனுப்பத் தொடங்கும் பொழுது நம்முடைய தமிழ் மொழியானது என்றும் நிலைத்து நிற்கும்.

https://twitter.com/aanthaireporter/status/1089397094534721536

நம்முடைய எழுதும் பழக்கத்தினால் மூளையில் சிந்திக்கும் சொற்களை கைகளால் அந்த வெள்ளை காகிதத்தில் எழுதும் பொழுது சிந்தனை ஆற்றலானது தூண்டப்படுகிறது.

இதன் மூலம் நம்மிலிருந்து மறைந்த, புதைந்து கிடக்கும் அழிந்து போன நம்முடைய சொற்கள் மீண்டும் நம்முடைய பயன்பாட்டுக்கு வரும்.

இதனை ஒவ்வொரு தமிழர்களும் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்.
செய்வீர்களா தமிழர்களே!

இப்படிக்கு
தங்கர் பச்சான்.

error: Content is protected !!