தாய்லாந்து சூப்பர் மார்கெட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குப் பதில் வாழை இலை!

தாய்லாந்து சூப்பர் மார்கெட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குப் பதில் வாழை இலை!

சகலருக்கும் தெரிந்த விஷயம்தான்.. வாழை மரத்தின் அடி முதல் நுனி வரை அனைத்துமே நமது வாழ்வியலோடு கலந்த பயன்பாடுகள். வீட்டு விழாக்களில் வாழைக்கன்று மற்றும் வாழைக்கம்பங்களை நடுவதில் தொடங்கி, விருந்து பரிமாற வாழை இலையைப் பயன்படுத்துவது வரை எல்லாவற்றுக்குப் பின்பும் மருத்துவக் காரணங்கள் இருக்கின்றன அல்லவா?பாலித்தீன் பைகளுக்குப் பதிலாக வாழை இலையைப் பயன்படுத்தும் தாய்லாந்து சூப்பர் மார்க்கெட் ஒன்று அந்நாட்டில் பிரபலமடைந்து வருகிறது.

உலகம் முழுவதும் கரியமில வாயுக்கள் வெளியீடு அதிகரித்து வருவதால் உலகின் வெப்பநிலை அதிகரித்து பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தாய்லாந்தைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் ஒன்று பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக வாழை இலையை அறீமுகப்படுத்தி இருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் விற்கும் பொருட்கள் அனைத்தும் குறிப்பாக பழங்கள், காய்கறிகள் அனைத்து வாழை இலையால் பேக் செய்து தரப்படுகின்றன.

விழாக்களில் விருந்தினருக்கு உணவு பரிமாற வாழை இலையைத்தான் இன்றளவிலும் பயன்படுத்தி வருகிறோம். ‘‘உணவுச் சங்கிலியில் முதல் உணவே இலைகள்தான். எல்லாத் தாவரங்களும் இலைகளை உடையவை. இலைகள் உயிரினங்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இலையில் உள்ள பச்சையம் சூரிய ஆற்றலை உள்வாங்கி அதனை உயிராற்றலாகவும் உணவாகவும் மாற்றுகிறது. அனைத்து எரிபொருட்களுக்கும் இலைகள்தான் மூலப்பொருளாக இருக்கிறது.

நமது முன்னோர் உணவு பரிமாறுவதற்கு வாழை இலையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் அது பெரிதாக இருக்கிறது என்பது மட்டுமல்ல… வாழை இலையில் ஆன்டி ஆக்‌சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். அதோடு மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன. வாழை இலையில் இருக்கும் Polyphenol, செல்களில் உள்ள டிஎன்.ஏவை கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது. சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வாழை இலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது.

சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத் தில் உள்ள Polyphenol சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள விட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன. வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மை தான். மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழைஇலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும்.  வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது.

தீக்காயங்களுக்கு ஆளானவர்களை வாழை இலையில்தான் படுக்க வைப்பார்கள். வாழை இலையின் குளிர்ச்சியும் அது வெளியிடும் ஆக்சிஜனும் தீப்புண்ணுக்கு இதமாகவும், விரைவாக காயங்களை ஆற்றக் கூடியதாகவும் இருக்கிறது. வாழை இலை சருமத்தில் ஒட்டாது மற்றும் நோய்த்தொற்று ஏற்படுத்தாது என்பதால் தீக்காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு அருமருந்து.

வாழை இலையில் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்பதோடு மட்டுமல்லாமல், சாப்பிட்டு முடித்த பின் வாழை இலை கால்நடைகளுக்கு உணவாகவோ, நிலத்துக்கு உரமாகவோ மாறிவிடுகிறது. இந்நிலையில் தாய்லாந்தில் பிரபலமாகும் இந்த இலை பயன்பாட்டை அங்குள்ள வாடிக்கையாளர்களும் வரவேற்று தங்களது ஆதரவை சூப்பர் மார்கெட்டுக்கு வழங்கியுள்ளனர்.மேலும் இந்த சூப்பர் மார்க்கெட்டை புகைப்படம் எடுத்தும் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

error: Content is protected !!