தாய்லாந்துக் குகையும் சொல்லித்தரும் பாடங்களும். – AanthaiReporter.Com

தாய்லாந்துக் குகையும் சொல்லித்தரும் பாடங்களும்.

Akkapol Chanthawong இது தான் அடுத்துவரும் நாட்களில் உலகைக் கலக்கப்போகும் பெயர். 25 வயது நிரம்பிய ஓர் உதவி உதைப்பந்தாட்டப் பயிற்சியாளர்- இது தான் எமக்குக் கிடைக்கும் அறிமுகம்; ஆனாலும் கதை சற்று ஆழமானது. தனக்குப் 10 வயதாக இருக்கும் பொழுது, தன் குடும்பத்தைத் தொற்றிக் கொள்ளும் ஒரு நோயினால் தனது தாய், தந்தை மற்றும் 7வயது நிரம்பியிருந்த சகோதரன் ஆகிய தனது அனைத்து நெருங்கிய உறவினர்களையும் மரணத்துக்குப் பறி கொடுத்துவிட்டுத் தப்பிப் பிழைத்த சிறுவன் தான் இந்த Akkapol Chanthawong.  அதன் பின்னர், தானே ஒட்டிக்கொண்ட அநாதைப் பட்டத்தோடு ஒரு பெளத்த ஆசிரமத்தில் துறவறம் பூண்டு தன் அடுத்த 10 வருடங்களைக் கழிக்கிறார்.

இங்கு பெற்றுக் கொண்ட அனுபவங்களினூடாகத் தன்னை வளப்படுத்திக் கொண்ட நிலையில்-
துறவறத்தைக் கழைந்துவிட்டு மீண்டும் சமூக வாழ்வுக்குள் பிரவேசிக்கிறார்..இந்த நிலையிலேயே ‘Wild boars'(காட்டுப் பன்றிகள்) எனும் உதைப்பந்தாட்ட அணியில் உதவிப் பயிற்சியாளராக இணைந்து கொள்கிறார்.இந்தக் கழகத்தின் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதிலும் , அவர்களது விளையாட்டை விருத்தி செய்வதற்காக அனுசரணையாளர்களை இணைத்துக் கொள்வதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இதனால் வீரர்களுக்கும் இவருக்குமிடையில் ஒரு நெருங்கிய பிணைப்புக் காணப் பட்டது. தனக்கென்று ஒரு பிரத்தியேகக் குடும்பமில்லாத நிலையில், இந்த உதைப் பந்தாட்டக் கழகத்தையே தன் உறவாகக் கொண்டிருந்தார்..

இந் நிலையிலேயே கடந்த ஜூன் 23ம் தேதி சனிக்கிழமை- பிரதான பயிற்சியாளர் வேறோர் பணி நிமித்தம் சென்ற வேளையில், இந்த அணியின் இளம் வீரர்கள் Akkapol Chanthawong கின் பொறுப்பில் விடப்படுகின்றனர்..அப்போது தான் இந்த விபரீதம் அரங்கேறுகிறது.

‘Tham laung’ எனும் குகை வட தாய்லாந்தின் பர்மாவை அண்டிய பகுதியிலமைந்த உல்லாசப் பயணிகளைக் கவரும் ஒரு முக்கிய இடமாகும். இருந்தும் இது நவம்பர் முதல் மே கடைசிவரையான மழையில்லாத காலப்பகுதியிலேயே பாதுகாப்பானதாகும்.

எனவேதான் இந்தக் குகையின் வாசலில் “பருவ மழைக் காலங்களில் உட்பிரவேசிக்க வேண்டாம்” எனும் வாசகம் பொறிக்கப் பட்டிருக்கிறது. இருந்தும் இந்த அறிவுறுத்தல்கள் எதையும் பொருட்படுத்தாத இளம் வீரர்கள் 12 பேரும், அதன் இளம் உதவிப் பயிற்றுவிப்பாளரும் தமக்கு முன்னால் நிகளவுள்ள சம்பவங்கள் எதனையும் கனவிலும் நினையாதவர்களாகக் குகையினுள் இறங்கிச் செல்கின்றனர்.

அகலமான மற்றும் ஒடுங்கிய அதுபோல் உயரமான மற்றும் பள்ளமான பல பகுதிகளையும் தாண்டிய ஒரு திகில் பயணம் ஆரம்பித்த புள்ளியிலிருந்தும் 3 கிலோமீட்டர்களையும் தாண்டியதாய்ப் போனது.

வெளிச்சம் தொடாத ,ஆழ் குகையில் தம் பெயர்களைப் பதிவு செய்துவிட்டு வர நினைத்தவர்களை, வரலாற்றில் தம் பெயர்களைப் பதிவு செய்யும் விதமாக வந்து சேர்ந்தது பருவமழை!

உயர்ந்து வந்த நீர் மட்டத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ள உயரமான பகுதியில் அடைக்கலம் புகுந்தது அணி..இருந்தும் தாமிருப்பது நில மட்டத்திலிரிந்தும் 800மீட்டருக்குக் கீழ் என்று அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

12 மாணவர்களுமே 11 தொடக்கம் 16 வயதுக்குட்பட்டவர்கள்! எல்லோருக்குமே அங்கு பொதுவா யிருந்தது சுற்றிவர இருளும், முன்னால் ஆழம் தெரியாத நீரும்!! குகைக்கு வெளியே அல்லோல கல்லோலம்! பயிற்சிக்குச் சென்ற மாணவர்கள் வீடு திரும்பவில்லை..!

பயிற்சிக்குச் சென்று குகைக்குச் செல்லாமல் வீடு திரும்பிய ஒரேயொரு 13வயது மாணவனின் வாக்குமூலம் அதிகாரிகளைக் குகையடிக்கு இழுத்துச் சென்றது. தேடுதல் பல முனைகளிலிரிந்தும் முடிக்கிவிடப்பட்டாலும் ,குகையினுள் ஒரு குறிப்பிட்ட தூரத்தைத் தாண்டிச் செல்லும் அளவுக்கு சூழ் நிலை இருக்கவில்லை. நிரம்பி நின்ற நீர்மட்டம் சுழியோடிகளின் தயவை வேண்டி நின்றது..
செய்தி உலகெங்கும் பரவ -உலகெங்கிலுமிருந்தும் சிறப்புப் பயிற்சி பெற்ற சுழியோடிகள் உதவிக்கு விரைகின்றனர்.

29ம் தேதியளவில் சர்வதேச சுழியோடிகளும் தேடுதலில் இணைந்து கொள்கின்றனர்..நீரோடும் சுவாசத்தோடும் போராடுவதென்பது எப்படிப் பயிற்சி பெற்றவருக்கும் சவாலான விஷயமே!

காரணம் -தான் சுவாசிப்பதற்காக  ஆக்ஸிஜனைச் சுமந்து செல்ல வேண்டும்..அது நிறைவடையும் தருவாயில் ஆக்ஸிஜனைப் பிரதியீடு செய்யும் பொறிமுறை இருக்க வேண்டும்..அது சாத்தியமில்லாத சூழலில் நீரின் மேற்பரப்பை அடைந்து இயல்பாகச் சுவாசிக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்..அவ்வாறு சுவாசிக்கும் நிலை ஏற்படும்போது அந்தச் சூழலில் போதுமான அளவு ஆக்ஷிஜன் இருப்பதோடு, கார்பன் மொனோ ஆக்ஷைடும் அளவுக்கதிகம் இல்லாதிருக்க வேண்டும்..

ஒரு குகையைப் பொறுத்த வரையில், நீர் நிரம்பிய நிலையில் மேற்குறிப்பிட்ட எல்லா அம்சங்களும் உறுதிப் படுத்திக் கொள்ள மிகச் சிரமமான விஷயங்களாகும் .இவ்வாறான ஒரு பின்புலத்தில் -தமக்கும் சிக்கியுள்ளவர்களுக்கும் போதுமபோதுமானளவு ஆக்க்ஷிஜன் கிடைக்கக் கூடியவிதமாக ஒரு சூழலைப் படிப்படியாக ஏற்படுத்திக் கொண்டே குகையினுள்- குறிப்பாக நீர் நிரம்பிய பகுதிகளைக் கடந்த பயணத்தைத் தொடர முடியும்.

விட்டுச் செல்லப்பட்ட தடயங்களை மட்டும் வைத்துக் கொண்டு ,எப்படியும் இவர்கள் உள்ளேதான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தம் தேடுதல் பயணத்தைத் தொடர்ந்தனர் சுழியோடிகள்…
அப்போதுதான் அந்த 9 வது நாளில் (02/07) இரு பிரிட்டானிய குகை விற்பன்னர்களால் இந்தப் 13 பேரும் குகையின் நுழைவாயிலிலிருந்து 3.2கி.மீ. கப்பால் கண்டுபிடிக்கப் படுகின்றனர்.

இவர்களைக் கண்டவுடன் அவர்களுக்கு மகிழ்ச்சி ஒருபுறம்..ஆச்சரியம் மறுபுறம்..

9 நாட்களைக் கடந்த நிலையிலும் இந்தச் சிறுவர்களை இவ்வளவு தெம்போடும் எதிர்பார்ப்போடும் வைத்திருந்தது யார்?

ஆபத்தான ஓரிடத்தில், இருள் சூழ்ந்த ஒரு சூழலில், உணவுமில்லாமல், சுத்தமான நீருமில்லாமல்,
அசைந்து திரிய இடமும் இல்லாமல் -ஒரு குழந்தைக்குக் கூட மனச்சோர்வினால் விரக்தி ஏற்பட்டு ஏதும் விபரீதங்கள் இடம்பெறாமல் அந்த 9 நாட்களையும் நகர்த்திச் சென்றது யார்??

இங்கு தான் நாம் Akkapol Chanthawong ஐ மெச்ச வேண்டும்.

தன்னால் இக்குழந்தைகளுக்கு ஒரு ஆபத்து நேர்ந்துவிட்டதை உணர்ந்து கொண்ட பயிற்றுவிப் பாளர் , நிலமையின் விபரீதத்தைப் புரிந்து கொண்டு செயலில் இறங்கினார்.”எப்படியும் எமக்கு உதவி செய்ய யாராவது வருவார்கள் ” என்று தொடர்ந்தும் அவர்களுக்குத் தெம்பூட்டினார்.

தான் துறவறத்தின் போது பெற்ற ஆன்மீகப் பயிற்சிகளை சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து நம்பிக்கையைக் கொடுத்தார்.உடல் அசைவுகளைக் குறைத்து சக்தி விரயத்தைக் கட்டுப்படுத்தி உடற் சோர்வை அல்லது பலவீனத்தைக் குறைக்க முனைந்தார்.தாம் கைவசம் வைத்திருந்த சொற்பத் தீன் பண்டங்களை சிறுவர்களுக்குக் கிடைக்கும்படியாகப் பகிர்ந்துவிட்டு மிகச் சொற்பமாகவே தான் உட்கொண்டார்…

இப்படியானதோர் சிறப்பு வழிகாட்டல் இல்லாது போயிருந்தால் சிறுவர்கள் வேறுவிதமான விபரீதங்களில் சிக்கியிருப்பார்கள் என்பது மக்களின் யூகமாகும்.

‘காணாமற் போன அனைவரும் 9 நாட்களின் பின் உயிருடன் இருக்கிறார்கள்’ என்ற செய்தி உலகெங்கும் தலைப்புச் செய்தியானது.

இதன் பிற்பாடு மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப் பட்டதும் , ஏற்கனவே நேற்று (08/07) 4 பிள்ளைகள் பாதுகாப்பாகக் கரை சேர்க்கப்பட்டதும் அதன் தொடர்ச்சியாக இன்று(09/07) மேலும் 9 பிள்ளைகள் மீட்கப்பட்டதும் மீண்டும் மீட்புப் பணிகள் நாளை தொடரும் என்பதுவும் மகிழ்ச்சியான தகவல்கள்.

மீட்புப் பணியாளர்கள் எதிர்கொண்ட சவால்கள் பற்றி அடுத்த பகுதியில் பேசுவோம்..

எஞ்சியுள்ள அனைவரும் ஆரோக்கியமாக வெளியே கொண்டுவரப்படுவதற்கு இறைவன் துணை புரிவானாக!