சிலை கடத்தல் வழக்குகள்: சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு! – AanthaiReporter.Com

சிலை கடத்தல் வழக்குகள்: சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு!

கடந்த நாலைந்து மாதங்களாக அதிரடி காட்டி வந்த ஐஜி பொன். மாணிக்கவேல் விசாரணையில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சிலை கடத்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் சிலை கடத்தல் சிறப்பு நீதிபதியாக அமர்த்தப்பட்டார். அதன்பிறகு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்புச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து நீதிபதி மகாதேவன் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களின் பாதுகாப்பு குறித்தும் அதன் சிலைகளின் எண்ணிக்கை மற்றும் அதனைப் பாதுகாக்கும் முறைகள் குறித்தும் நடவடிக்கைகள் எடுத்து வந்தார்.

இந்நிலையில் கோயில்களில் சரியான பாதுகாப்பு அறைகள் இல்லை என்றும் சிறப்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தேவையான சில வசதிகளைச் செய்துதர கோரியும் தமிழக அரசிடம் நீதிபதி மகாதேவன் அறிவுறுத்தியிருந்தார். அதற்கு சரியான பதிலளிக்காததால் அவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்படும் என்று நீதிபதி மகாதேவன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளில் ஐஜி பொன். மாணிக்கவேல் விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை என்றும் அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்தது. இதனைக் கேட்ட நீதிபதிகள், மாநில காவல் துறை மீது தமிழக அரசுக்கு நம்பிக்கை இல்லையா என்று கேள்வி எழுப்பினர். “காவல் துறையினர் விசாரணை நடத்தியவரை, ஒழுங்காகப் பணிகள் நடைபெற்றது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்த பிறகுதான் விசாரணை ஒழுங்காக நடைபெறவில்லை; அதன் விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை” என்று தமிழக அரசின் சார்பாகக் கூறினார் அரவிந்த் பாண்டியன்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தன்னிடமுள்ள ஆவணங்களைப் பெற மட்டுமே தமிழக அரசு முயற்சிப்பதாகக் கூறினார் ஐஜி பொன்.மாணிக்கவேல். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தனர். தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள முடிவுகள் தொடர்பான ஆவணங்கள் அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்யப்படுமாம்.