சென்னையில் சந்திரசேகர ராவ்! – ஸ்டாலினுடன் 3ம் அணி குறித்து அலோசனை! – AanthaiReporter.Com

சென்னையில் சந்திரசேகர ராவ்! – ஸ்டாலினுடன் 3ம் அணி குறித்து அலோசனை!

மக்கள் விரோத போக்கை கையாளும் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சி முன்னணி (பெடரல் பிரண்ட்) என்னும் 3-வது அணியை தேசிய அளவில் அமைப்பதற்கான முயற்சிகளை தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் மேற் கொண்டு வருகிறார். இதற்காக அவர் ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் சந்திரசேகர ராவ், இன்று சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

 

 

 

 

.மோடி தலைமையிலான  பா.ஜ.க. அரசின் பதவிக்காலம் இன்னும் ஒரு வருஷம்தான் உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் அனைத்து கட்சிகள் மத்தியிலும் ஆரம்பித்துவிட்டது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் செயல்பாடுகள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்படவில்லை என்ற குறை மாநில கட்சிகள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பல்வேறு கட்சிகளும் தயக்கம் காட்டுகின்றன. அதே நேரம் பி.ஜே.பி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் மதசார்பற்ற கட்சிகளும், இடதுசாரி இயக்கங்களும் உள்ளது.இந்த நிலையில்தான் காங்கிரஸ், பி.ஜே.பி அல்லாத மூன்றாவது அணி அமைப்பதற்கான கருத்தை தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் முதலில் வைத்தார். அவர் நாடு முழுவதும் உள்ள பிராந்தியக் கட்சிகளிடம் தனது எண்ணத்தை நேரடியாகவே வெளிப்படுத்தி வருகிறார்.

அவரது இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல்  காங் கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியும் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக பல்வேறு தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஷ்ட்ரீய ஜனதாளம் கட்சியின் முக்கியத் தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி உள்ளிட்டோரை கடந்த மாதம் மம்தா பானர்ஜி சந்தித்து 3-வது அணி தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும்  பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் மம்தா பானர்ஜி தொலை பேசியில் ஆலோசனை நடத்தினார். அதையடுத்து மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு திமுக ஆதரவளிக்கும் என நேற்று முன்தினம் ட்விட்டரில் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். அதற்கு உடனடியாக ட்விட்டரில் மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான் இன்று சென்னை வந்த தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், கோபால புரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். முன்னதாக, கோபாலபுரத்தில் சந்திரசேகர ராவை, ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த சந்திப்புக்கு பிறகு, ஸ்டாலினை சந்தித்து அவர் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டப்படி 3வது அணி குறித்து ஆலோசனை நடத்தினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ஸ்டாலின் , ” அரசியல் சூழ்நிலை குறித்தும், எதிர்கால அணுகுமுறைகள் குறித்தும் சந்திர சேகர ராவுடன் ஆலோசனை நடந்தது. மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்பது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்தும், மாநிலங்களுக்கு கூடுதல் நிதி உள்ளிட்டவை குறித்தும் பேசினோம். இது முதல்கட்ட சந்திப்பு தான்.ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இது குறித்து பேச உள்ளேன். ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்தது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கும். தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்”. இவ்வாறு அவர் கூறினார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறுகயைில்;  “எனது சகோதரர் ஸ்டாலினுடன் பல் வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தேன். மத்திய, மாநில அரசு உறவுகள், மாநில சுயாட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது. கல்வி, மருத்துவம், தண்ணீர் உள்ளிட்டவற்றை பொது மக்களுக்கு வழங்குவதில் மத்திய அரசு சரியாக செயல்படவில்லை. 2004ல் இங்கு வந்த போது  நம் திமுக தலைவர் கருணாநிதி அரசியல் நிலவரம் குறித்து எனக்கு கற்பித்தார். தென் மாநிலங்களின் குரலாக ஒலிக்கும் கருணாநிதியை நினைத்து பெருமை. அவரை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. என்னை சந்தித்த போது, புத்தகம் பரிசு வழங்கினார். அரசியலிலும், அரசிலும் மாற்றம் தேவை என நாடு முழுதும் விவாதம் எழுந்துள்ளது. அனைவரும் முடிவெடுக்க 3 மாதங்கள் தேவைப்படுகிறது. 3வது அணியா, 4வது அணியா என்பது கேள்வி அல்ல. ஒரு அணியாக மட்டுமே உருவெடுப்போம். அணி அமைப்பதில் எந்த அவசரமும் இல்லை. இந்த சந்திப்பினை அரசியலாக்க வேண்டாம். தென் மாநிலங்களுக்கான உரிமையை பெறுவோம். அதில், பின்வாங்க போவதில்லை. இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். அதனை நோக்கியே எங்களது பயணம் தொடரும்”. என்று அவர் கூறினார். இன்றிரவு சென்னையில் தங்கும் அவர், நாளை தமிழகத்தில் உள்ள கட்சித் தலைவர்களை சந்தித்து  ஆலோசனை நடத்துகிறார்.

.