நிதிப் பற்றாக்குறையாம்! – டாஸ் மாக் சரக்குகள் விலையேற்றம்! – AanthaiReporter.Com

நிதிப் பற்றாக்குறையாம்! – டாஸ் மாக் சரக்குகள் விலையேற்றம்!

அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விற்பனை வரி மற்றும் சில வரிகள் ஜிஎஸ்டி வரியோடு இணைக்கப்பட்ட காரணத்தினால் வரி மூலம் கூடுதல் வருமான உயர்வுக்கு மாநில அரசுகளுக்கு வழியில்லாமல் போய்விட்டது. அதனால் மாநில அரசுகள் பெட்ரோல், மதுபான வகைகள் மூலமாகவே கூடுதல் வருமானத்தைப் பெறமுடியும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக ஏற்கனவே அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடும் ஆட்சேபனை தெரிவித்து இரண்டு நாள் வேலை நிறுத்தமும் நடத்தி உள்ளது. ஆக, கை வசமுள்ள ஒரே ஒரு துருப்புச் சீட்டை பயன்படுத்தி வருமானத்தை பெருக்கும் வகையில் மதுபான வகைகளின் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.பீர் ரகங்களுக்கு ரூ.10 ரூபாயும். மற்ற மதுபான வகைகளில் குவார்ட்டர் அளவுள்ள புட்டி ஒன்றுக்கு ரூ.12 ரூபாயும் உயர்த்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்பட்டது.

வர இருக்கும் தீபாவளி தினத்தன்று குடிமகன்களுக்கு தட்டுப்பாடின்றி சரக்கும் கிடைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் 15 நாட்களுக்கு தேவையான சரக்குகளை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள எல்லா கடைகளுக்கு சப்ளை செய்ய 60 சதவீதம் கூடுதலாக சரக்குகள் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 15 நாட்களுக்கு தேவையான சரக்குகள் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கடைக்கும் குறைந்தது, ரூ.20 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் மதிப்புள்ள சரக்குகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று சூப்பர்வைசர்கள், ஏரியா சூப்பர்வைசர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில்தான் தமிழக அமைச்சரவையின் கூட்டம் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடை பெற்றது. தமிழகத்தை தற்போது அச்சுறுத்தி வரும் டெங்கு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப் பட்டதாக தெரிகிறது. 11.15 மணி அளவில் ஆரம்பித்த இக்கூட்டம் பகல் 1 மணி வரை நடைபெற்றது. தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய பிரச்சனை குறித்து ஆய்வு செய்து 7-வது ஊதியக்குழு அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப் பட்டதாக தெரிகிறது. அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வை தீபாவளி பரிசாக அளிக்க தீர்மானிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் நிதிப்பற்றாக்குறை இருப்பதால் அதனை சமாளிக்க டாஸ் மாக்கில் விற்கப்படும் மது வகைகளின் விலையை உயர்த்த தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒரு பாட்டில் பீருக்கு 10 ரூபாயும், குவார்ட்டர் பிராந்தி, விஸ்கிக்கு ரூ.12-ம் உயர்த்த ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.5000 கோடி அளவுக்கு கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.