இந்தி கற்பதில் அதிக ஆர்வம் காட்டும் தமிழர்கள்! – AanthaiReporter.Com

இந்தி கற்பதில் அதிக ஆர்வம் காட்டும் தமிழர்கள்!

நம் நாட்டின் வரலாறுப் பக்கத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இன்றளவும் தனிக்கவனம் பெற்றுள்ளது . அதாவது இந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும் மற்றும் இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக் கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக மக்களால் ஜனநாயக வழியில் நடத்தப் பட்டது தான் அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம். 1937ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் பெரியார் தலைமையில் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பலத்த எதிர்ப்பை சமாளிக்க முடியாத சென்னை மாகாண ஆளுநர் எர்ஸ்கின் பிரபு பிப்ரவரி 1940ஆம் ஆண்டில் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கிக் கொண்டார். அதன் பின் பல்வேறு அரசியல் மாற்றங்களினாலும், மத்திய அரசின் நடவடிக்கையாலும் போராட்டங்கள் 1986 வரை தொடர்ந்தது. இந்நிலையில் தென்னிந்திய மாநிலங்களில் நம்ம தமிழ் நாட்டில்தான் திகபட்சமாக ஆண்டிற்கு 2.5 லட்சம் மாணவர்கள் இந்தி தேர்வை எழுதி வருகிறார்கள் என சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் அதிகாரப்பூர்வமற்ற மொழியான இந்தியை பேசாத தென்னிந்திய மாநிலங்களில் இந்தி மொழியை வளர்க்க வேண்டும் என்பதற்காக 1918 ஆம் ஆண்டில் சென்னையில் இந்தி பிரசார சபாவை துவக்கினார் மகாத்மா காந்தி. தற்போது இந்த அமைப்பு நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் தமிழகத்தில் இந்தி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை விட தமிழகத்தில் இந்தி மொழி கற்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் என இரு முறை நடக்கும் தேர்வை மாணவர்கள் அதிகளவில் எழுதுகிறார்கள் என கூறுகிறார் இந்தி பிரசார சபாவின் பொதுச்செயலாளர் ஜெயராஜ். அதே சமயம் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையத்திற்கு அரசு பள்ளிகள் ஒதுக்கப்படுகின்றன எனவும் ஆனால் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் தமிழகத்தில் அரசு பள்ளிகளை மையங்களாக தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆனாலும் மருத்துவர்கள், பொறியாளர்கள், ஐ.டி., துறையில் பணியாற்றும் உயர் அலுவலர்கள் என பல்வேறு துறையினரும் இந்தி மொழியை அதிகம் கற்று வருகின்றனர்.

இது பற்றி நம்மிடம் பேசிய பாஜக நிர்வாகி ஒருவர், “இந்தி திணிப்பு போராட்டத்திற்கு பிறகு 50 ஆண்டுகள் கடந்து வந்து விட்ட நிலையில், இந்தியை அறவே நுழையவிடாமல் தடுத்துவிட்டோமா என்றால் இல்லை. இந்தி பிரச்சார சபா ஒவ்வொரு வருடமும் வகுப்புகள் நடத்துகிறது, மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்தி மட்டும் இல்லாமல் பிற நாட்டு மொழிகள் கற்றுக்கொள்ள கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்தியை கட்டாய பாடமாக்கவேண்டும் என்பதோ மும்மொழிக் கல்வியோ எங்களுடைய நோக்கம் அல்ல. ஜனநாயக நாட்டில் யாவரும் அவர் விரும்பும் மொழியை கற்றுக்கொள்வது அவருடைய உரிமை. இன்று இருக்கக்கூடிய அரசு கல்வி நிலையங்களில் அந்த வாய்ப்புகள் இல்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

இந்தியநாட்டில் இந்தி மொழி பரவலாக பேசக்கூடிய ஒரு மொழியாக இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதை கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வசதியை அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமே தவிர, இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்பது கிடையாது” என்றார்.