உங்கள் இல்லத்தில் இருந்தபடியே இன்டர்நெட்டில் கோபுர தரிசனம் செய்யலாம்! – AanthaiReporter.Com

உங்கள் இல்லத்தில் இருந்தபடியே இன்டர்நெட்டில் கோபுர தரிசனம் செய்யலாம்!

தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் அதிகமான முக்கிய கோயில்களுக்கு வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், இணைய சுற்றுலா என்ற பெயரில் திருக்கோயில்களின் நிகழ்வுகளை ஆவணப்படுத்திட அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, இணைய சுற்றுலா சேவையை அறநிலையத்துறை தொடங்கியுள்ளது.

temble mar 15

அதன்படி முதல்கட்டமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், நாகை திருமணஞ்சேரி கோயில், நெல்லை கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில் உட்பட 10 கோயில்களின் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த போட்டோக்கள் அந்த கோயிலை பற்றி முழு விவரங்களுடன் இணையத்தில் உள்ளன. இதிலுள்ள காட்சிகளை 360 டிகிரி கோணத்தில் நாம் விரும்பும் வகையில் தத்ரூபமாக காணலாம். கோயில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளை பெரிதுபடுத்தி ‘குளோஸ் அப்’ செய்தும் பார்க்க முடியும்.

இந்த வசதியை அறநிலையத்துறை www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் பார்க்க முடியும். தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் உட்பட பிரதான கோயில்கள் எல்லாம் இந்த வசதியில் விரைவில் இடம் பெற உள்ளதாக அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.