சின்னத்திரை சீரியல்களில் அதிகரிக்கும் மூட நம்பிக்கைகள்!

சின்னத்திரை சீரியல்களில் அதிகரிக்கும் மூட நம்பிக்கைகள்!

தமிழில் நேற்று வரையிலான   கணக்கெடுப்பின்படி 49 டி வி சேனல்கள் இருக்கின்றன. பொழுதுபோக்கு, செய்திகள், நகைச்சுவை, பாடல்கள், சினிமா, குழந்தைகள், மதம், விளையாட்டு… என இந்த 49ஐப் பலவாறாகப் பிரிக்கலாம். இன்னும் மூன்று – நான்கு மாதங்களில் மேலும் 13 சேனல்கள் வரவிருக்கின்றன. இவற்றில் சன் டிவியில், வார நாட்களில் நாளொன்றுக்கு 18 தொடர்கள் ஒளிப்பரப்பாகின்றன. அதாவது 24 மணி நேரங்கள் கொண்ட ஒரு நாளில் 9 மணி நேரங்களை இந்தக் கதைத் தொடர்களே ஆக்கிரமிக்கின்றன. காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலும், பிறகு மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் அரை மணி நேரத்துக்கு ஒரு தொடர் வீதம் ஒளிபரப்பாகின்றன. இது போலவே பெரும்பாலான சேனல்களும் சீரியல்களையே ஒளிப்பரப்பி வரும் நிலையில் சமீப காலமாக தொலைக்காட்சி களில் மூடநம்பிக்கையை வளர்க்கும் தொடர்கள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசிடம் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன. இவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, அப்புகார்களை ஒலிபரப்பு உள்ளடக்கம் புகார்கள் கவுன்சிலுக்கு (பிசிசிசி) மத்திய அரசு அனுப்பியுள்ளது.

tv sep 5

தொலைக்காட்சிகளில் வரும் தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் மீதான புகார்கள் மொத்தம் 10 வகையாக பிரிக்கப்படுகின்றன. சமூகநலன், மதச்சார்பின்மை, குழந்தைகளுக்கு எதிரானவை, தேசவிரோதம், நிறவேற்றுமை, ஆபாசம், முத்தக்காட்சிகள், நிர்வாணம், கலவரம், கிரைம் என இவை அனைத்தின் மீதும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு புகார்கள் வருகின்றன. இப்புகார்களில் பெரும்பாலும் ஆபாசம் மற்றும் கலவரம் தொடர்பான புகார்கள் இதுவரை அதிகம் இருந்தன. ஆனால் தற்போது திகில், மந்திர தந்திரங்கள், பேய், பில்லி சூனியம், பாம்புக் கதைகள் என மூடநம்பிக்கையை வளர்க்கும் தொடர்கள் மீது தற்போது புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

இந்த வகையில் ஆகஸ்ட் 31 வரை அரசுக்கு வந்த 1,850 புகார்களில் 1,250 புகார்கள் மூடநம்பிக்கை தொடர்பாக உள்ளன. இதையடுத்து இவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்படி பிசிசிசி-க்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அனுப்பியுள்ளது. ஆனால் இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பிசிசிசி-க்கு அதிகாரம் இல்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, “பிசிசிசி அமைப்பானது தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களால் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. தங்களுக்குள் ஒழுங்குபடுத்திக் கொள்ளும் அமைப்பாக இது இருந்தாலும் அதற்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கிடையாது. எனவே மூடநம்பிக்கை தொடர் களை தடை செய்வது மிகவும் கடினம். மேலும் இந்த விஷயத் தில் அரசு இதுவரை சட்ட ரீதியிலான நடவடிக்கை எதுவும் அமல்படுத்தவில்லை. அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி களுக்கு கூட எவ்வித சட்ட திட்டங்களும் வகுக்கப்படவில்லை. ஆனால் காஷ்மீர் போன்ற இடங்களில் வன்முறையை தடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பை தடை செய்து வருகிறது. மற்ற விஷயங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படுவதில்லை” என்று தெரிவித்தனர்.

மூடநம்பிக்கை தொடர்கள் மீதான புகார்கள் அனைத்து மொழி தொலைக்காட்சிகள் மீதும் உள்ளன. இத்தொடர்கள் அனைத்தும் பிரபலமானவையாக, அதிக பார்வையாளர்களை கொண்டவையாக உள்ளன.தமிழில் பைரவி, நாகினி உள்ளிட்ட தொடர்கள் மீது அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. இந்தி தொலைக்காட்சியான ஜி சேனலில் வெளியாகும் தொடர்கள் மீதே அதிக புகார்கள் உள்ளன. இந்த தொடர்கள் பல்வேறு மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு மாநில மற்றும் பிராந்திய தொலைக்காட்சிகளிலும் வெளியாகி வருகின்றன.

தொலைகாட்சி தொடர்கள் மீது அரசுக்கு புகார்கள் வருவது இது புதிதல்ல. இதற்கு முன் கடந்த 2014, ஜூலை 3 முதல் 2015, ஆகஸ்ட் 22 வரை 4,545 புகார்கள் பெறப்பட்டன. பிசிசிசிக்கு அனுப்பப்பட்ட இவற்றில், 11 சதவீதம் மட்டுமே மூடநம்பிக்கை தொடர்களுக்கு எதிரானவை. இப்புகார்கள் மீது சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளுக்கு அறிவுறுத்தி பிசிசிசி அமைப்பு பொதுவான அறிவிக்கை மட்டுமே வெளியிட்டுள்ளது. பிசிசிசி சார்பில் இதுபோன்று இதுவரை பத்துக்கும் மேற்பட்ட அறிவிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், யார் மீதும் இதுவரை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

error: Content is protected !!