தமிழ் படம் 2 – விமர்சனம்! -கண்ணை மூடிக் கொண்டுப் பார்க்கலாம்

தமிழ் படம் 2 – விமர்சனம்! -கண்ணை மூடிக் கொண்டுப் பார்க்கலாம்

நம் சினிமா ரசிகர்கள் குறிப்பாக தமிழ் ரசிகர்கள் அறுசுவை உணவுகளுக்கு அடுத்தபடியாக நகைச்‘சுவை’க்கு விசேஷ அந்தஸ்து கொடுப்பது வாடிக்கைதான். இதனை உணர்ந்தே நமது பழங்கால நகைச்சுவை நடிகர்கள் தமிழ்த் திரையில் மன நிறைவான நகைச்சுவைக் காட்சிகளை நமக்கு அளித்துச் சென்றனர். உதாரணத்துக்கு சிவகவி என்ற பழைய திரைப்படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் நடித்த நகைச்சுவைக் காட்சிகளைக் கூறலாம். கல்யாணப்பரிசு- தங்கவேல், தில்லானா மோகனாம்பாள்- நாகேஷ், சபாஷ் மீனா -சந்திரபாபு , காசேதான் கடவுளடா- தேங்காய் சீனிவாசன் என பலரை உதாரணமாகக் கூறலாம். “முழு நீள நகைச் சுவைப் படங்கள்” என நகைச்சுவைக்கு தனி இடம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களும் உண்டு. உதாரணத்துக்கு ‘டவுன் பஸ்’, ‘தேன் கிண்ணம்’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘கலாட்டா கல்யாணம்’ போன்ற படங்களைக் கூறலாம். ஆனால், இன்றைய தமிழ் சினிமாவில் நகைச்சுவையின் தரம் படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது கசப்பான உண்மை.

நம் மக்கள் நகைச்சுவைப் படப் பிரியர்கள்தான் என்றாலும் அவர்கள் நம்பி திரையரங்கிற்குச் செல்வதற்கு ஒரு நல்ல நகைச்சுவையாளர் தேவைப்படுகிறார். இன்றைய சூழலில் அப்படி யாரும் இல்லை என்பதே கசப்பான உண்மை. ஒரு காலத்தில் கவுண்டமணி-செந்தில் காம்பினேஷன் இருந்தாலே எதைப் பற்றியும் யோசிக்காமல் திரையரங்கிற்கும் செல்லும் வழக்கம் இருந்தது. அதே போல்தான் விவேக்கிற்கும், வடிவேலுவிற்கும். பின் சிறிது காலம் சந்தானம். கவுண்டமணி செந்தில் ஓய்வு பெறும் சூழலில் எப்படி வடிவேலு மற்றும் விவேக் அவர்கள் இடத்தை ஓரளவிற்கு நிரப்ப முயற்சி செய்தார்களோ அதே போல வடிவேலு, விவேக்கின் படங்கள் குறையத் தொடங்கும் நேரத்தில் சந்தானம் அதனை நிவர்த்தி செய்தார். ஆனால் சந்தானத்திற்குப் பிறகு அவ்வளவு பெரிய பொறுப்பை சுமக்கும் அளவுக்கு வேறு நகைச்சுவையாளர்கள் தற்பொழுது இல்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றே.

அதிலும் சமீப காலமாக அடல்ட் காமெடி என்ற பெயரில் ரசிகர்களை கீழ்த்தரமான சிந்தனைக்குட் படுத்துவது அதிகரித்து வருகிறது

இந்நிலையில் காமெடி நடிகர்கள் என்ற பெயரில் உலா வரும் சிலரை வைத்துக் கொண்டு தற்போதை சினிமா மற்றும் அரசியல் சூழ்நிலைகளை பின்னணியாக வைத்து கொண்டு இரண்டு மணி நேர மீம்ஸ் படம் ஒன்றை ‘தமிழ்படம் 2’ என்ற டைட்டிலில் வழங்கி ரசிகர்களை சிரிப்புக் கடலில் ஆழ்த்தி இருக்கிறார் இயக்குநர் அமுதன்.

கதை என்னவென்று கேட்டால் தமி சினிமாவில் வரும் போலீஸ் அதிகாரி கேரக்டர்களை கிண்டலடிக்கும் ஸ்பூஃப் வகை திரைப்படம்தான் ‘தமிழ்ப்படம் 2. தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கலவரம் வெடிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் கமிஷனர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் திணறுகின்றனர். இச் சூழலில் கமிஷனர் கேட்டுக்கொண்டதன் பேரில் போலீஸ் அதிகாரியாக இருந்த சிவா சம்பவ இடத்துக்கு வந்து பிரச்சினையைப் பேசியே தீர்க்கிறார். இதையடுத்து மறுபடியும் போலிசில் சேருமாறு கமிஷனர் அழைப்பு விடுக்க, அதை மறுத்துவிட்டு வீடு திரும்புகிறார்.

அப்போது கூரியர் பார்சலில் வரும் போனை சிவாவின் மனைவி திஷா பாண்டே எடுக்க, போன் வெடித்து சம்பவ இடத்திலேயே அவர் பலியாகி விடுகிறார். உடனே மனைவியின் மரணத்துக்குக் காரணமானவனைப் பழிவாங்கும் நோக்கத்துடன் காவல் துறையில் பணியாற்ற விரும்புகிறார். சிவா காவல் துறையில் சேர்ந்தாரா, எதிரியை எப்படிக் கண்டுபிடிக்கிறார், அதிகாரியாகத் தன் கடமையைச் செய்தாரா என்ற கேள்விகளுக்கு கிண்டலும் கிண்டல் நிமித்தமுமாகப் பதில் சொல்கிறது ‘தமிழ்ப்படம் 2’.

முன் ஒரு முறை தமிழ் திரைப்படங்களை மட்டுமே ஸ்பூஃப் வகையில் கிண்டல் செய்து ‘தமிழ்ப்படம்’ எடுத்த இயக்குநர் சி.எஸ்.அமுதன் இந்த முறை ஆங்கிலப் படங்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு நையாண்டி செய்திருக்கிறார். அதிலும் சூப்பர் ஸ்டார் தொடங்கி, சினிமா, அரசியல் என சகல துறையினரின் டாப் பர்சனாலிட்டிகளை விட்டு வைக்காமல் கிண்டல் செய்யும் இயக்குநரின் டயலாக்குகளுக்கு ரசிகர்களின் கைத்தட்டல் தியேட்டரை கிழிக்கிறது.

ஸ்பூஃப் வகை படம் எடுப்பது ஒரு கலை. அதை மூன்று விதமான அடுக்குகளாகப் பிரித்து ரசனைக்கு அழகு சேர்த்திருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். கதாநாயகி லூஸுப் பெண்ணாக மட்டுமே இருக்க வேண்டும், பார்வையற்றவர் சாலையைக் கடக்க உதவ வேண்டும், மழையில் நனைந்தபடி ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் போன்ற தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் அபத்தங்களைத் தோலுரித்திருக்கிறார்.

கூவத்தூர் விடுதி, தர்மயுத்தம், சமாதியில் சத்தியம், ஆன்ட்டி இந்தியன், சிஸ்டம் சரியில்லை, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று சமகால அரசியல் நகர்வுகளை புகுத்தி ஏளனம் செய்திருக்கிறார்.

முன்னணி நடிகர்கள், முன்னணி இயக்குநர்கள் என யாரையும் விட்டு வைக்காமல் பட்டியலிட்டுக் கொண்டு கலாய்ப்பில் உச்சம் தொட்டிருக்கிறார். ‘தேவர் மகன்’, ‘விஸ்வரூபம்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘பதினாறு வயதினிலே’, ‘தளபதி’, ‘கபாலி’, ‘காலா’, ‘சத்ரியன்’, ‘வால்டர் வெற்றிவேல்’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘பைரவா’, ‘பில்லா’, ‘மங்காத்தா’, ‘வேதாளம்’, ‘வீரம்’, ‘விவேகம்’, ’24’, ‘வாரணம் ஆயிரம்’, ‘சாமி’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘ரெமோ’, ‘ரஜினிமுருகன்’, ‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’, ‘ஆம்பள’, ‘துப்பறிவாளன்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘இரும்புத்திரை’ ‘பாகுபலி’ என கலாய்க்கப்பட்ட படங்களின் பட்டியல் பெரிது.

எச்.பி.ஓ, நேஷனல் ஜியாகிராபிக் சேனல்களில் உள்ளூர் கலவரம் குறித்து செய்திகள் ஒளிபரப்புவது, மல்லையா சர்பத் கடை, மல்லையா ஏடிஎம், சத்யராஜ் அல்வா கடை குறியீடுகளிலும் அசர வைக்கிறார்.

படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதிவரை ரசிகர்கள் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைத்திருப்பதில் முழு வெற்றி அடைந்திருக்கிறார்.. பொழுது போக்க ஒரு சினிமா பார்க்க விரும்புவர்கள் கண்ணை மூடிக் கொண்டு இப்படத்தைப் பார்க்கலாம்

மார்க் 5 / 3

error: Content is protected !!