சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு!- தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!!

சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு!- தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!!

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், செம் பரம்பாக்கம் மற்றும் ரெட்ஹில்ஸ் ஏரியில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைவாகவே நீர் இருப்பு உள்ளது. இந்த நீர் 15 நாட்களுக்கு தான் குடிநீர் வழங்க ஏதுவாகும் என அதிகாரிகள்  தெரிவித்து உள்ளனர். தற்போது நாளொன்றுக்கு 675 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த 4 ஏரிகளில் நீர்மட்டம் பாதி அளவுக்கும் மேல் இருக்கும் நிலையில், நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள்   தெரிவித்திருந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட வடதமிழக மாவட்டங்களில் வரும் 20-ம் தேதி முதல் 3 நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “’வங்கக் கடல் பகுதியில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை வரை அடுத்த 3 நாட்களுக்குக் கனமழை இருக்கும். ‘கஜா’ புயலால் மழைகிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்ற மடைந்த வடதமிழக மாவட்டங்களுக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நல்ல மழைகிடைக்கும்.

டெல்டா மண்டலங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அவ்வப்போது இடைவெளிவிட்டு மழை இருக்கும். குறைந்தபட்சம் இரு நாட்களுக்குச் சென்னை யில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை இருக்கும். ஒரு சில இடங்களில் மிக கனமழையும் இருக்கும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுவதற்கான கால சாத்தியம் இல்லை. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகவதற்கே அதிகமான வாய்ப்புள்ளது. இதனால் வடதமிழகத்தில் உறுதியாக நல்ல மிகச்சிறந்த மழையைக் கொடுக்கும். ஆனால், புயலாக உருவாகும் வந்திகளை நம்ப வேண்டாம்”. என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!