மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் இணைந்தது தமிழக அரசு காப்பீடு! – AanthaiReporter.Com

மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் இணைந்தது தமிழக அரசு காப்பீடு!

சென்னைத் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் முன்னிலையில் தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா(ஆயுஷ்மான் பாரத்) திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்:

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் 2008-ஆம் ஆண்டு தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் துவக்கப்பட்டது. வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கும், ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்களுக்கு, அமைப்புசாரா தொழிலாளர்கள் கொண்ட 11 பிரிவு களுக்கு எந்தவித பிரீமியமும் செலுத்தாமல் ஆண்டுக்கு ₹30 ஆயிரம் வரை பயன்பெறும் வகை யில் இந்தத் திட்டம் துவக்கப்பட்டது. மத்திய அரசு ஒருங்கிணைந்த சுகாதார இயக்கத்தில் தொலை நோக்குத் திட்டமாக தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை, சுகாதாரத் திட்டத்துடன் இணைத்து செயல்படுத்தியது இந்தத் திட்டம் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டது. 2016-17-ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 278 மாவட்டங்களில் 3 கோடியே 63 லட்சம் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன. நாடு முழுவதும் உள்ள 8,697 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மூலம் இந்தக் குடும்பங்கள் மருத்துவ சிகிச்சை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அமைச்சகங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் மூலம் இந்த சுகாதாரத் திட்டம் பயனளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக “நாட்டில், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும், 10 கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்” என மத்திய அரசு தாக்கல் செய்த, 2018-19-ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, மருத்துவ காப்பீடு பெற முடியும். பணம் செலுத்தாமலேயே, நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள, தனியார் மற்றும் அரசு மருத்துவமனை களில் சிகிச்சை பெறலாம். வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பற்றிய ஆவணங்களில் இருந்து, பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ், 100 நோய்களுக்கு மேல் சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தடுக்கக் கூடிய, 70 நோய்களுக்கும், புற்றுநோய், இதய நோய் போன்ற, ஆபத்து மிக்க, 30 நோய் களுக்கும் சிகிச்சையளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், கிராமங்களில் வசிப்பவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வெகுதொலைவு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பிரச்சினை யைத் தீர்க்க நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார மையங்களை புதிதாக திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

குறிப்பாகக் கிராமப் புறங்களிலும் நோய் ஆபத்துள்ள இடங்களிலும் அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்பை விரிவாக்குவதற்காக இந்திய அரசாங்கம் ஆயுஷ்மான பாரத் திட்டத்தை தொடங்கி யுள்ளது. இத் திட்டத்தின் இரு தூண்கள் மூலம் நாடு முழுவதும் முக்கிய சேவைகள் வழங்கப்படும். முதல் முன்முயற்சி மூலம் 1,50,000 சுகாதாரம் மற்றும் நல மையங்களை அமைத்தல். இதன் மூலம் ஆரம்ப சுகாதாரம் மக்களுக்கு நெருக்கமாக எடுத்துச் செல்லப்படும்.

இரண்டாவது முன்முயற்சி, தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம். இது 10 கோடி ஏழை மற்றும் நலிந்த குடும்பங்களை(சுமார் 50 கோடி பயனர்கள்) சென்றடையும். இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவமனை சிகிச்சைகளுக்காகக் குடும்பத்துக்கு ₹5 லட்சம் வரை இதன் மூலம் வழங்கப்படும். இதுவே உலகில் ஓர் அரசால் ஏற்று நடத்தப்படும் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் ஆகும். இதில் தற்போது தமிழகமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.