பெண்களுக்கான 181 ஹெல்ப் லைன் இப்போது தமிழகத்திலும் அமலுக்கு வந்தாச்சு! – AanthaiReporter.Com

பெண்களுக்கான 181 ஹெல்ப் லைன் இப்போது தமிழகத்திலும் அமலுக்கு வந்தாச்சு!

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒருதலைக் காதலால் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டில் 6,940 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை, 2012 ஆம் ஆண்டில் 7192 ஆகவும், 2013 ஆம் ஆண்டில் 7475 ஆகவும், 2014 ஆம் ஆண்டில் 7980 ஆகவும், 2015 ஆம் ஆண்டில் 8,000 ஆகவும் அதிகரித்து இருக்கின்றன. 2012-16 வரையிலான 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 37,577 ஆகும். இவற்றில் பாலியல் சீண்டல்கள், வரதட்சனைக் கொடுமை, குடும்ப வன்முறை, பெண்களின் உறுப்புகளை சிதைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் அடங்கும். இப்படி பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை, வரதட்சணைக் கொடுமை, குழந்தை திருமணம், பாலியல் சீண்டல் போன்ற புகார்களைத் தெரிவிப்பதற்கு வசதியாக 181 என்ற இலவச தொலை பேசிச் சேவையை இன்று (டிசம்பர் 10) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரத்துக்கு பலியானது நாட்டையே உலுக்கியது. இதையடுத்து பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி பெண்கள் பாதுகாப்பிற்காக 181 என்ற இலவச தொலைபேசி எண்ணை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சேவை நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இனி வரதட்சணை, பாலியல் சீண்டல், சட்ட ஆலோசனைகள், உளவியல் ஆலோசனைகள் போன்ற உதவிகளுக்கும், ஆபத்துக் காலங்களில் காவல்துறையின் உதவிபெற, பெண்களுக்கெதிரான சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளின் மீது புகார் அளிக்க, மனரீதியான குழப்பங்களுக்கு ஆலோசனை பெற, பெண்கள் நலத்திட்டங்கள் குறித்து தெளிவு பெற, போன்ற உதவிகளுக்கும் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 இலவச தொலைபேசி எண் மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த மையத்தை நிர்வகிக்க 5 வழக்கறிஞர்கள், 5 மனநல ஆலோசகர்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எந்த பகுதியில் பெண்ணுக்கு உதவி தேவைப்படுகிறதோ, அந்த எல்லையில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு உடனடியாக உதவிகள் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த எண்ணிற்கு வரும் புகார்களைச் சேவை மைய அதிகாரிகள் முறையாகப் பதிவு செய்து வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரச்சினைக்குத் தீர்வு கண்டவுடன், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் அந்த பெண்ணின் நிலை என்னவென்பதை ஆராய்ந்து பிரச்சினைகள் தீர்ந்து விட்டதை உறுதி செய்ய வேண்டும் என்று சமூகநலத் துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.