தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 29ஆம் தேதி தொடக்கம்! – AanthaiReporter.Com

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 29ஆம் தேதி தொடக்கம்!

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த மார்ச் 15ம் தேதி, 2018 – 19ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அந்த பட்ஜெட் மீதான விவாதம் முடிந்த பின் சட்டசபை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே சட்டசபையில் பட்ஜெட் நிறைவேறிய பின்பு, அரசின் ஒவ்வொரு துறைகளும் அவற்றின் திட்டங்களை நிறை வேற்றுவதற்கு தேவையான நிதியைப் பெறவேண்டும்.இதற்கு சட்டசபையில் விவாதிக்கப்பட்டு, அவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதற்காக துறை வாரியான நிதி ஒதுக்கீடு தொடர்பான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றும் வகையில், சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, சட்டசபை கூட்டத்தொடரை வரும் மே 29ஆம் தேதி தமிழக சட்டசபை கூடுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டத்தை வரும் 29-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு தலைமைச் செயல்கத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார் என்று அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் நீர்வளத்துறை செயலர் காவிரி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளார். அதில், சில யோசனைகளும், கருத்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் காவிரி வரைவுத் திட்டம் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் எதிர்கட்சி சார்பில் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு, காவிரி பிரச்சினை, நீட் தேர்வு குளறுபடிகள், குட்கா விவகாரம், அரசு ஊழியர்கள் போராட்டம், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமைகள் உள்ளிட்டவை குறித்து குரலெழுப்பத் ஆயத்தமாகி வருகிறது