புலனாய்வு இதழியலின்முன்னோடி விசிட்டர் அனந்து காலமானார்! – AanthaiReporter.Com

புலனாய்வு இதழியலின்முன்னோடி விசிட்டர் அனந்து காலமானார்!

இன்றைய புலனாய்வு இதழின் டாப் பொசிசனில் இருப்போர் தொடங்கி, குற்றம் நடந்தது என்ன? என்று காட்சி ஊடகங்கள் மூலமாக துப்பறிகிறோம் என்ற பெயரில் மைக் பிடித்து பேசும் சிலர் மட்டுமின்றி இன்றைய அரசியல்வாதிகள் சகலரின் மச்சங்களையும் அறிந்து வைத்திருப்பதாக சொல்லும் நிஜ டமில் மீடியாமேன்களுக்கே விசிட்டர் அனந்து பற்றி அறிந்திருக்கவில்லை என்பது தமிழ் ஜர்னலிஸத்துக்கே அவமானம்தான். ?

♻நம் தமிழ் பத்திரிகைகளில் சிறுகதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், கிசுகிசுக்கள் அடங்கிய பொழுதுபோக்கு இதழ்கள் மட்டுமே வந்து கொண்டிருந்த சூழலில் 1969-ல் முழுக்க முழுக்க அரசியல் பார்வையோடு ‘கிண்டல்’ எனும் மாதமிரு இதழைக் கொண்டுவந்தார் அனந்து. அப்போது அவருக்கு வயது 26. பச்சையப்பன் கல்லூரி மாணவனாக இருந்ததால் அரசியல் விமர்சனம், நையாண்டி, சமூகப் பிரச்சினைகள், அரசுத் துறை அத்துமீறல்கள் மட்டுமே கொண்டது அந்த இதழ்

வழக்கமான தமிழ் இதழ்களிலிருந்து மாறு பாதையில் போன கிண்டல் ஒவ்வொரு இதழும் பத்தாயிரம் வரை விற்பனை ஆனது.
அந்த காலகட்டத்தில்தான் விகடன் நிறுவனத்திலிருந்து ‘சோ’வை ஆசிரியராகக் கொண்டு ‘துக்ளக்’ இதழ் வெளியானது. கிட்டத்தட்ட ‘கிண்டல்’ இதழின் பாணியில் அது வெளியானதால் கிண்டலுக்கு கிடைத்த வரவேற்பு படிப்படியாகக் குறைந்து, ஒரு கட்டத்தில் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. கடைசியாக வெளியான ‘கிண்டல்’ இதழில் அனந்து இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “கிண்டலை நிறுத்துகிறேன். இது தோல்வியல்ல, கிண்டலின் தாக்கம் அதைப் போன்ற ஒரு இதழ் வருவதற்கு காரணமாயிருந்திருக்கிறது என்ற வகையில் வெற்றியே”.

தன் இதழியல் பயணத்தை மீண்டும் தொடர யாராவது வசதியான பதிப்பாளர்கள் கிடைப்பார்களா என்ற தேடலில் ஓரிரு வருடங்கள் அவர் அலைந்து கொண்டிருந்த தருணம் பால்யூ மூலம் ‘சோ’விடமிருந்தே அழைப்பு வர உடனே ‘துக்ள’க்கில் சேர்ந்துவிட்டார்.

நாடகம், திரைப்படங்கள், அரசியல் மேடைகள் என ‘சோ’ பரபரப்பாக இயங்கிய அந்தக் காலகட்டத்தில் ‘துக்ள’க்கில் பல்வேறு பொறுப்புகளையும் ஏற்று திறம்பட நிர்வகித்தார் அனந்து. அப்போது அரசுத் துறைகளுக்கு, அலுவலகங்களுக்குச் சென்றுவந்து பல தரப்பிலும் தீரவிசாரித்து புலனாய்வுக் கட்டுரைகளை எழுதினார். ‘விசிட்டர் அனந்து’ என்ற பெயரில் வெளியான அந்த கட்டுரைகள் அந்நாளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. அதிகாரிகள், அமைச்சர்கள் தொடங்கி முதலமைச்சர் வரை அதற்கு உடனுக்குடன் ரியாக்ட் செய்தார்கள்..

அந்தக் கட்டுரைகள் இதழியல் துறையிலும், சமூக தளத்திலும் இன்றளவும் தனி முத்திரை ஏற்படுத்தின. அந்த வகையில் தமிழ் இதழியல் தளத்தில் புலனாய்வு அல்லது துப்பறியும் ஜர்னல் என்னும் புதிய போக்கை அவர்தான் தொடங்கிவைத்தார் என்று சொல்லலாம்.

குறிப்பாக அன்றைய மெட்ராஸ் கார்ப்பரேசந்னில் நடந்த ‘மஸ்டர்ரோல் ஊழல்’ வெளியானது தொடர்பான செய்திகள் இன்றும் பலருக்கு நினைவிருக்கும்!

இத்தனைக்கும் நெருக்கடி நிலை காலகட்டத்தில் அகில இந்திய அளவில் ரவுண்டு கட்டி பணியாற்றினார் அனந்து. ஆனால அவை அனைத்தையும் ‘துக்ளக்’கில் எழுத வாய்ப்பில்லாததால் தன் பார்வைகளையெல்லாம சிறு புத்தகங்களாக மலிவு பதிப்பாக (ரூ.2, ரூ.3-க்கு) வெளியிட்டார். நெருக்கடி நிலையின்போது நிகழ்ந்த அத்துமீறல்கள், பத்திரிகைகள் சந்தித்த அடக்குமுறைகள், சஞ்சய் காந்தியின் செயல்பாடுகள், ஜெயப்பிரகாஷ் நாராயணன் தோற்றுவித்த தேசிய எழுச்சி ஆகியவற்றைப் பதிவுசெய்தார். இதனால் மாநில எல்லை கடந்து தேசிய அளவில் அரசியல்வாதிகளை நன்கு தெரிந்துவைத்திருந்த இதழியலாளராகவும் அவர் இருந்தார்.

இதனிடையே தனது காட்டுத்தனமான இதழியல் செயல்பாடுகளால் ‘துக்ளக்’ சோ-வுக்கு அனந்து மேல் கொஞ்சம் ஜெலசி வந்தது போன்ற சுழலில் துக்ளக் அனுபவம் போதும் என்று கருதிய, அனந்து அதிலிருந்து வெளியேறி 1980-ல் ‘விசிட்டர்’ இதழைத் தொடங்கினார். ‘விசிட்ட’ரின் வீச்சு அபாரமாகத்தான் இருந்தது! தமிழகத் தலைவர்கள் தொடங்கி அகில இந்திய தலைவர்கள் வரை அன்று அனந்து எடுத்த நேர்காணல்கள், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், புறக்கணிக்கப்பட்ட கிராமத்து அவலங்கள் பற்றிய பதிவுகள் அந்த இதழில் வெளியாகின. கூடவே அன்று கவனம் பெறத் தொடங்கிய நா.காமராஜன், வைரமுத்து, மு.மேத்தா போன்றோரின் கவிதைகள் என பன்முகம் காட்டியது ‘விசிட்டர்’.

அன்றைய பத்திரிகைகள் ஆசிரியர்(குழு) சென்னையைத் தாண்டி காலடி எடுத்து வைப்பதில்லை என்ற சூழலில், மாவட்டவாரியாகத் தேதி குறித்து வாசகர்கள் சந்திப்புகளை நடத்தி தமிழகத்தின் பல தரப்பட்ட பிரச்சினைகளை தன் விசிட்டரில் பதிவுசெய்தார்.

ஏராளமான புதியவர்களுக்கு எழுத வாய்ப்பளித்தார். அன்று வளர்ந்து வந்துகொண்டிருந்த இளம் எழுத்தாளர்கள் பலர் ‘விசிட்ட’ரால் கவனம் பெற்றனர். விசிட்டர் 70,000 பிரதிகளை எட்டிய நிலையில் பதிப்பாளரின் நிர்வாகச் சிக்கல் காரணமாக நின்றுவிட்டது. இதற்கு விகடன் நிர்வாகத்தின் நெருக்கடி என்போருமுண்டு. அப்பாலே விகடன் குரூப்-பில் இருந்து ஜூனியர் விகடன், அதையடுத்து தராசு.. இன்னபிற இன்வெஸ்டிகேட்டிவ் இதழ்கள் வந்ததால் அனந்து அவுட் ஆஃப் போகஸ் ஆனார்.

ஆனாலும் சும்மா இருக்காமல் ‘செவன்த் சேனல்’ நாராயணன், புகைப்பட நிபுணர் சுபாசுந்தரம் ஆகியோர் துணையுடன் ‘வானவில்’ என்ற தமிழின் முதல் ‘வீடியோ இதழை’ வெளிக்கொண்டு. இதையொட்டியே கலாநிதி மாறனின் ‘பூமாலை’வீடியோ இதழ் வெளியானதும் அதன் தொடர்ச்சியாக ‘சன்’ என்ற தமிழின் முதல் தனியார்த் தொலைக்காட்சியாக மலர்ந்ததும் நிஜ வரலாறு.

ஆக, தமிழகத்தில் அச்சு & காட்சி ஊடகத் துறையின் முக்கியப் புள்ளியாக அனந்து இருந்துள்ளார்.

அவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்தனைகள்

அகஸ்தீஸ்வரன்