சிரியாவின் பிரச்னையை மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம்!.

சிரியாவின் பிரச்னையை மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம்!.

பெரும்பாலான மக்களுக்கு உலக அரசியல் புரிவதில்லை. புரியவிடாமலேயே தான் ஆளும்வர்க்கம் வைத்திருக்கிறது. அதனால் தான் மோடி வந்தால் மாறிடும், கமல் வந்தால் மாறிடும் நம்பும் கூட்டமாக இருக்கிறார்கள். சிரியாவின் பிரச்னையை மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அதனை மிகவும் சிக்கலுக்குள்ளாக்கி பல குழப்பங்களை உருவாக்கிவைத்திருக்கிறது மேற்குலகம்.

1. மத்திய கிழக்கிலேயே மதச்சார்பற்ற அரசுகளைக் கொண்டிருந்த நாடுகளாக ஈராக்கும், லிபியாவும், (குறைவான காலத்திற்கு) ஆஃப்கானிஸ்தானும், சிரியாவும் தான் இருந்துவந்தன. அந்த நாடுகள் ஒவ்வொன்றிற்கும் இன்று என்ன நடந்திருக்கிறது என்று உங்களுக்கு புரிந்திருக்கும். மதச்சார்பற்ற அரசுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எப்போதுமே ஆபத்துதான். அதனால் அதனைக் கலைத்துவிடுவது அமெரிக்காவின் எப்போதுமான கனவு.

2. மத்திய கிழக்கிலேயே டெக்ஸ்டைல் உற்பத்தியில் கொடிகட்டிப் பறந்த நாடு சிரியாதான். சிரியாவின் உள்ளாடைகள் மிகப்பிரசித்தி பெற்றவை. அதிலும் சிரியாவில் ஒரு மிகப்பெரிய உள்ளாடை சந்தைப்பகுதியே இருந்தது. இவையெல்லாவறின் மீதும் துருக்கியின் டெக்ஸ்டில் உற்பத்தியை கையில் வைத்திருக்கும் துருக்கி அதிகார வர்க்கத்தினருக்கு ஒரு கண் இருந்தது.

3. ஐரோப்பாவுக்கு பெட்ரோலியத்தை ஈரானிலிருந்து கொண்டுசெல்ல ஒரு திட்டம் தயார் செய்யப்பட்டது. இதன்மூலம் ஐரோப்பாவுக்கு குறைந்தவிலையில் பெட்ரோல் கிடைக்கும். ஈரானும் எண்ணை விற்பனையை அதிகரிக்கும். அந்த பைப்லைன் சிரியா வழியாக செல்வதாகத்தான் திட்டம். இதைக்கண்டு, சிலநாடுகள் கடும் அதிர்ச்சியடைந்தன. முதவதாக, சவுதி அரேபியா. தன்னுடைய எண்ணை விற்பனைக்கு இத்திட்டத்தை போட்டியாக நினைத்து, எப்படியாவது இதனை காலி செய்துவிடவேண்டும் என்று துடித்தது. இரண்டாவதாக, இஸ்ரேல். மத்திய கிழக்கில், தனக்கான இடத்தை காலி செய்யும் திட்டமாகப் பார்த்தது. அதனால், சிரியா வழியாக செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்த பைப்லைனை, இஸ்ரேல் வழியாக மாற்றவேண்டும் என்று அமெரிக்கா வழியாக நெருக்கடி கொடுத்தது. ஆனால், ஈரானோ சிரியாவோ அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

4. மேலே மூன்றாவது புள்ளியிலேயே இஸ்ரேல் கோபமடைந்திருந்தது. அதனுடன், சிரியாவுடன் காலங்காலமாக இஸ்ரேலுக்கு இருந்துவரும் பகையும் இணைந்துகொண்டது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உருப்படியாக மத்திய கிழக்கில் உதவிவந்திருக்கும் ஒரேநாடு சிரியா தான். சிரியாவின் கோலன் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அதனை எப்போது சர்வதேசச் சமூகம் பிடிங்கிவிடுமோ என்கிற அச்சமும் இஸ்ரேலுக்கு இருந்துகொண்டிருந்தது. அதனால் சிரியாவை காலி செய்வது இஸ்ரேலுக்கும் முக்கியமாகப்பட்டது.

5. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலகெங்கிலும் இருந்த ரஷ்யாவின் கடல் மார்க்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. எந்த நாட்டிலும் தனது கப்பலுக்கு பெட்ரோல் நிரப்பக்கூட அமெரிக்காவின் அனுமதியில்லாமல் செய்யமுடியாது என்கிற நிலைதான் ரஷ்யாவுக்கு. ஆனால், சிரியாவில் மட்டும்தான் ரஷ்யாவுக்கு இராணுவத்தளவாடம் இருக்கிறது. இதனையும் இல்லாமல் செய்துவிடுவது அமெரிக்காவுக்கு ஆறுதல் தரும். பாலஸ்தீனத்தை முழுவதுமாக ஆக்கிரமிக்க ஒரு பெரிய போரை நடத்துவதாக இருந்தாலும், அதன் அருகிலேயே சிரியாவில் இருக்கும் ரஷ்ய தளவாடத்திலிருந்து தாக்கப்பட்டுவிடுவோமோ என்கிற அச்சம் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இருந்துகொண்டேதான் இருந்தது.

6. இது மட்டுமில்லாமல், சிரியாவிலும் அதன் எல்லைப்பகுதிகளிலும் இருக்கும் பெட்ரோல் கிணறுகளின் மீதும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஆசையும் வெறியும் இருந்து வருகிறது என்று சொல்லாமலே புரியுமென நினைக்கிறேன்.

7. சிரியாவிலும் பல்வேறு காரணங்களுக்காக உள்நாட்டுப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதிகமான ஜனநாயக உரிமைகளுக்காக அரசுக்கு எதிரானவர்கள் போராடினர். சுயநிர்ணய உரிமைகள் வேண்டி, சிரியாவில் வாழும் குர்து இன மக்களும் போராடிக்கொண்டிருந்தனர். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களும், இதர சிறுபான்மையினரும், சில மாநில மக்களும் இந்திய அரசுக்கு எதிராகப் போராடவில்லையா. அதுபோலத்தான், சிரியாவிலும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. அவற்றில் நியாயமான காரணங்களும் இருந்தன.

8. அமைதியாக நடந்துகொண்டிருந்த சிரிய அரசுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறையைக் கலப்பது மூலம், உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்கா முடிவெடுத்தது. அதன்காரணமாகவே, திடீரென வன்முறையும் ஆயுதங்களும் துப்பாக்கிச்சூடுகளும் அமைதிப் போராட்டங்களில் வெடித்தன. பின்னாளில், அவற்றை நிகழ்த்தியது, அரசோ அல்லது அரசுக்கு எதிராகப் போராடியவர்களோ அல்ல என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே பிரச்சனை பலமடங்கு மோசமாகிப்போனது.

9. சிரியா குறித்த செய்திகளைப் பரப்பவே புதிது புதிதாக பல செய்தி நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன. SOHR (Syrian Observatory for Human Rights) என்கிற சிரிய அரசுக்கு எதிரான செய்தி நிறுவனம் தான் சிரியாவைப் பற்றி இன்று நாம் ஊடகங்களில் காணும் அனைத்து செய்திகளையும் தருகிறது. அதனை நடத்தும் ஒசாமா சுலைமான் ஒரு மேற்குலக அடிமை. அவர் நடத்தும் செய்தி நிறுவனம் பிரிட்டனிலிருந்து இயங்குகிறது.

தோழர் சிந்தன்

error: Content is protected !!