அமைதிக்கான நோபல் பரிசு: ஸ்வீடன் மாணவிக்கு பரிந்துரை! – AanthaiReporter.Com

அமைதிக்கான நோபல் பரிசு: ஸ்வீடன் மாணவிக்கு பரிந்துரை!

வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக ஜனாதிபதி டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என ஒரு குரல் எழுந்து அடங்கி விட்ட நிலையில் இந்த ஆண்டிற்கான, அமைதிக்கான நோபல் பரிசுக்கு, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சமூக ஆர்வலரான 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க்-ஐ பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

ஸ்வீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பெர்க் (16). இவர் 2018 ஆகஸ்ட் மாதம் பருவ நிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலை தடுக்க வேண்டி, ஸ்வீடன் பாராளுமன்ற வாசலில், சிறிய பதாகையுடன் அமைதியான முறையில் தனி நபராக போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும், உலக தலைவர்கள் அனைவரிடமும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை புறக்கணிக்கவேண்டாம் என கேட்டுக்கொண்டார். இதன் காரணமாக அனைத்து உலக அரசியல் தலைவர்கள், மற்றும் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதையடுத்து கிரேட்டா கடந்த 2018 ஜனவரி மாதம், தாவோஸ் பகுதியில் நடைபெற்ற ஐநா பருவ நிலை உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாடினார். அவரது பேச்சு உலகின் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துகாட்டாக விளங்குகிறது. இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு முதல், ஒவ்வொரு வெள்ளி அன்றும் பள்ளிக்கு செல்வதை விடுத்து, பாராளுமன்ற வாசலில் உலக வெப்பமயமாதலை தடுக்க வேண்டி, அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டார்.

இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிறுமி கிரேட்டா தபெர்க் பரிந்துரை செய்யப் பட்டுள்ளார். இதுகுறித்து கிரேட்டா கூறுகையில், ‘அமைதிக்கான நோபல் பரிசுக்கு நான் பரிந்துரைக்கப் பட்டதை மிகுந்த கவுரவமாகவும், ஆசியாகவும் கருதுகிறேன்’ என கூறினார்.

தேசிய தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசியர்கள் என பலரும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த பரிசுக்கு மொத்தம் 304 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில் 219 தனி நபர்கள், 85 அமைப்புகள் உள்ளதாக நார்வேயைச் சேர்ந்த நோபல் கமிட்டி கடந்த மாதம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.