விக்கிலீக்ஸ் அசாஞ்சே மீதான பாலியல் வன்கொடுமை விசாரணை தொடரும்? – AanthaiReporter.Com

விக்கிலீக்ஸ் அசாஞ்சே மீதான பாலியல் வன்கொடுமை விசாரணை தொடரும்?

உலகத் தலைவர்கள் பலரின் அடாவடிப் போக்கை ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்திய விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது சூவீடனில் பதிவான பாலியல் வன் கொடுமை வழக்கின் விசாரணையை மீண்டும் துவங்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு நாடுகளின் அரசியல் ரீதியான பல முக்கிய ஆவணங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜே மீது கடந்த 2010ம் ஆண்டு சுவிடனில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஜூலியன் அசாஞ்ஜே மீது சர்வதேச பிடிவாரணட் பிறப்பிக்கப்பட்டது.

அதேநேரத்தில் அமெரிக்க அரசும் ஜூலியன் அசாஞ்ஜே மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அமெரிக்காவின் புலனாய்வு துறை ஊழியர் செல்சா மானிங் என்பவரின் உதவியுடன் சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி இணையத்தில் வெளியிட்டதாக ஜூலியன் அசாஞ்ஜே மீது அமெரிக்க அரசு வழக்கு பதிவு செய்தது. அதை தொடர்ந்து ஜூலியன் அசாஞ்ஜே 2010ம் ஆண்டு பிரிட்டன் காவல்துறையினரிடம் சரணடைந்தார். சில நாட்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து ஜூலியன் அசாஞ்ஜே வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை. உடனே தான் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அங்கு கடுமையான தண்டனைக்கு ஆளாக நேரும் என தயங்கிய ஜூலியன் அசாஞ்ஜே தனது ஜாமீன் நிபந்தனைகளை மீறி 2012ம் ஆண்டு பிரிட்டனில் உள்ள ஈக்குவேடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்தார். சுமார் 7 வருடங்களாக ஈக்குவேடார் தூதரகத்தில் ஜூலியன் அசாஞ்ஜே முடங்கியிருந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஆதரவை ஈக்குவேடார் அரசு திரும்ப பெற்றது.

அதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி ஜூலியன் அசாஞ்ஜே கைது செய்யப்பட்டார். அவர் மீது ஜாமீன் நிபந்தனையை மீறியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் ஜூலியன் அசாஞ்சேவிற்கு 50 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சுவீடன் நாட்டில் ஜூலியன் அசாஞ்சே மீது பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் மீண்டும் விசாரணையை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூலியன் அசாஞ்சே பல வருடங்களாக ஈக்வேடார் தூதரகத்தில் தங்கியிருந்ததால் அவர் மீதான வழக்கை கைவிட சூவிடன் அதிகாரிகள் இரண்டு ஆண்டுகள் முன்பு முடிவு செய்தனர்.ஆனால் தற்போது ஜூலியன் அசாஞ்சே தூதரகத்தை விட்டு வெளியேறி லண்டன் சிறையில் உள்ளதால் அவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக அரசு துணை வழக்கறிஞரான எவா மேரி பெர்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜூலியன் அசாஞ்சே மீதான பாலியல் வழக்கு விசாரணை மீண்டும் துவங்கியுள்ளது குறித்து செய்தி வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனம் தன் மீதுள்ள குற்றச்சாட்டு உண்மையல்ல என நிரூபிப்பதற்கு ஜூலியன் அசாஞ்சேவுக்கு கிடைத்த வாய்ப்பு இது என தெரிவித்துள்ளது.

அதேசமயம் ஜூலியன் அசாஞ்சே மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை மீண்டும் சுவீடனில் துவங்கவிருப்பதால் ஜூலியன் அசாஞ்சேவை எங்கு நாடு கடத்துவது ? சுவீடனுக்கா அல்லது அமெரிக்காவுக்கா ? என்று பிரிட்டன் அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.