நாட்டாமை.. எஸ்சி,எஸ்டி சட்டத்தின் மீதான தீர்ப்பை மாத்து! – மத்திய அரசு மனு!

நாட்டாமை.. எஸ்சி,எஸ்டி சட்டத்தின் மீதான தீர்ப்பை மாத்து! – மத்திய அரசு மனு!

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், அரசு அதிகாரியை விசாரணையின்றி உடனடியாக கைது செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்தத் தீர்ப்பு அந்த சட்டத்தின் விதிகளை நீர்த்துப்போகச் செய்துவிடும், நாட்டின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய குந்தகத்தை விளைவிக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

 

எஸ்சி, எஸ்டி சட்டத்தின் மீது கடந்த மார்ச் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில், எஸ்சி,எஸ்டி சட்டத்தின் மீது புகார் கொடுத்தால் உடனடியாக யாரையும் போலீஸார் கைது செய்யக்கூடாது. தீவிர விசாரணைக்கு பின்புதான் கைது செய்ய வேண்டும், முன்ஜாமீன் பெறலாம் என்று கூறியது. மேலும், அரசு அதிகாரிகள் மீது புகார் கொடுத்தால், உயரதிகாரிகளிடம் அனுமதிபெற்ற பின்புதான் போலீஸார் கைது செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கடந்த 3-ம் தேதி தலித் அமைப்புகள் சார்பில் வடமாநிலங்களில் பாரத் பந்த் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களில் நடந்த வன்முறையில், 8 பேர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனுவை கடந்த 2-ம் தேதி தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு நீதிபதி ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அரசு சார்பில் எழுத்துப்பூர்வமாக கருத்தை தெரிவித்தார். அதில், “எஸ்சி, எஸ்டி சட்டத்தின் மீது கடந்த மாதம் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பது சட்டத்தின் விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக அமைந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கிறது. இந்த தீர்ப்பினால், எஸ்சி,எஸ்டி சட்டத்தில் ஏற்பட்ட இடைவெளிகளை எந்தவிதத்திலும் நிரப்ப முடியாது. நீதித்துறை, சட்டம் இயற்றுபவர்கள் ஆகியோருக்கு இடையே எந்தவிதமான மீறலும் இருக்கக்கூடாது, ஒவ்வொருருக்கும் தனித்தனி அதிகாரம் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதில் மற்றொருவர் தலையிடக்கூடாது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய எஸ்சி, எஸ்டி சட்டத்தின் மீதான தீர்ப்பினால் தேசத்தின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய குந்தகம் விளையும். மிகவும் உணர்வுப்பூர்வமாக அணுகவேண்டிய விஷயம். ஆனால், இந்த தீர்ப்பு நாட்டில் கொந்தளிப்பான சூழலும், மக்கள் மத்தியில் கோபத்தையும், ஒற்றுமையின்மை யும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆதலால், மத்திய அரசின் சீராய்வு மனுவை ஏற்று அந்த தீர்ப்பில் தேவையான திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.” இவ்வாறு வேணுகோபால் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!