ஊடகங்களுக்கு பேச்சு & கருத்து சுதந்திரத்தை முழுமையாக அளிக்க வேண்டும்! – AanthaiReporter.Com

ஊடகங்களுக்கு பேச்சு & கருத்து சுதந்திரத்தை முழுமையாக அளிக்க வேண்டும்!

உண்மையை வெளிக்கொண்டு வருவதில் பத்திரிகைகளுக்கு முழு சுதந்திரம் உண்டு. செய்தி வெளியிடுவதில் சிறு தவறு நேர்ந்தால் அல்லது அந்த செய்தியை வெளியிடுவதில் காட்டப்படும் ஆர்வத்தை தடுக்கும் வகையில் அவதுாறு வழக்கு தொடர முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

அண்மையில் ரூ.500 அளித்தால் ஆதார் விவரங்களை தரகர் மூலம் 10 நிமிடங்களில் பெற்றுவிடலாம்” என்று சண்டிகரில் இருந்து வெளியாகும் ‘தி டிரிபியூன்’ பத்திரிகையில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து ஆதார் ஆணையம் அளித்த புகாரின்பேரில் அந்த பத்திரிகையின் பெண் நிருபர் ரச்னா கைரா மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.. இதுகுறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஆதார் ஆணையம் அளித்த புகாரின்பேரில் எந்தவொரு தனிநபர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அடையாள தெரியாத நபர்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அதேநேரம் நாட்டின் வளர்ச்சியை கருத்திற் கொண்டு ஆதார் தகவல்களின் ரகசியத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட பத்திரிகை நிறுவனம், நிருபர் ஆகியோர் போலீஸாரின் விசாரணைக்கு முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுகுறித்து பத்திரிகை நிறுவனம், நிருபரிடம் ஆதார் ஆணையம் வேண்டுகோள் விடுக்க அறிவுறுத்தியுள்ளேன்”இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே பீகாரை சேர்ந்த பெண்ணுக்கு, உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை துவக்க மாநில அரசு நிலம் ஒதுக்கியது. அவரது தாய் பீகாரில் அமைச்சராக இருந்தவர். தந்தை மூத்த அரசு அதிகாரியாக பணியாற்றியவர். எனவே அந்த நிலம் ஒதுக்கப்பட்டது குறித்து இந்தி டி.வி. சேனல் ஒரு செய்தி வெளியிட்டது. அந்த செய்தி தன்னை அவதூறாக சித்தரிப்பதாகவும், உண்மைகளை அறியாமல் தவறாக வெளியிட்டதாக கூறி கூறி அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். அதை எதிர்த்து பாட்னா ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், கீழ் கோர்ட் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த பெண் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு இதோ:

ஜனநாயகம் உள்ள நாட்டில் வாழும் போது சகிப்புதன்மையை கற்றுக் கொள்ள வேண்டும். அவதூறு என்பது அரசியல் சட்டப்படி சரியானதாக இருக்கலாம். ஆனால், ஊழல் முறைகேடு குறித்து வெளியான தவறான செய்தியை அவதூறாக கருத முடியாது. அப்படி செய்தி வெளியிடும் போது அதில் சிறு தவறு நடந்து இருக்கலாம். அல்லது அந்த செய்தியை வெளியிடுவதில் கூடுதல் ஆர்வம் காட்டப்பட்டு இருக்கலாம். ஆனால் நாம், ஊடகங்களுக்கு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை முழுமையாக அளிக்க வேண்டும். செய்தி வெளியானதில் தவறு இருந்து இருக்கலாம். அதற்காக அதை அவதூறாக கருத கூடாது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.