டிக்டாக் செயலிக்கான ஐகோர்ட் இடைக்காலத் தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு! – AanthaiReporter.Com

டிக்டாக் செயலிக்கான ஐகோர்ட் இடைக்காலத் தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்தோனேசியா, அமெரிக்கா வில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளளது போல் இந்த டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.

கடந்த 4-ம் தேதி சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளையில் டிக் டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறி அந்தச் செயலிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அதிலும் இந்த டிக்டாக் செயலி மூலம் ஆபாச வீடியோக் கள் பகிரப்படுவதால் அந்த செயலியை ரத்து செய்ய கோரப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை யின் போது கடந்த ஏப்ரல் 3ம் தேதி டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் டிக்டாக் செயலியில் உள்ள வீடியோக்களை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்றும் கோர்ட் ஆணையிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 16ம் தேதி (நாளை) நடைபெறுகிறது.

இதற்கிடையில் சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்ய கோரி டிக்டாக் செயலியை உருவாக்கிய சீன நிறுவனமான பைட் டான்ஸ் சுப்ரீம் கோர்ட்டி மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது பைட் டான்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு எந்த நோட்டீஸும் அனுப்பவில்லை. தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துவிட்டதாக அபிஷேக் குற்றம்சாட்டினார். விசாரணை முடிவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும்படி சென்னை ஐகோர்ட் அளித்த உத்தரவை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

சென்னை ஐகோர்ட் டிக்டாக் செயலிக்கு இடைக்கால தடை தான் விதித்துள்ளது. அந்த வழக்கின் விசாரணை நாளை நடைபெறவுள்ளது. அதேசமயம் இந்த வழக்கை நாங்கள் முடிக்க விரும்பவில்லை. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.