சசி & கோ-வுக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு முழு விபரம் + ஜட்ஜ்மெண்ட் லிங்க்!

சசி & கோ-வுக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு முழு விபரம் + ஜட்ஜ்மெண்ட் லிங்க்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிலைகளில்  நடந்து வந்த சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே.10.32 மணிக்கு நீதிபதிகள் பி.சி.கோஸ் மற்றும் அமிதவ ராய் இருக்கைக்கு வந்தனர். 6-ம் எண் அறையில் நிறைய வழக்கறிஞர்களும் ஊடகவியலாளர்களும் குழுமியிருந்தனர். நீதிமன்ற ஊழியர் மிகப்பெரிய தீர்ப்பு அடங்கிய சீலிட்ட உறையை திறக்க, இரண்டு நீதிபதிகளும் சில கணங்கள் விவாதித்தனர்.பேரமைதி நிலவ நீதிபதி கோஸ், தீர்ப்பை அளிக்கும் முன், “தீர்ப்பின் சுமையை நாங்கள் எடுத்துக் கொண்டோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்” என்றார். உடனேயே நீதிபதி கோஸ், தீர்ப்பின் முக்கியமான பகுதியை வாசிக்கத் தொடங்கினார். 10.40க்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது.தீர்ப்பை நீதிபதி கோஸ் வாசித்தவுடன் நீதிமன்ற அறையின் பேரமைதி கலைந்தது, பத்திரிகையாளர்களும், சில வழக்கறிஞர்களும் தீர்ப்பின் விவரங்களை அளிக்க வேகமாக அறையை விட்டு வெளியேறினர்.இந்த காட்சிகளுக்கிடையே நீதிபதி ராய், “சமுதாயத்தில் அதிகரித்து வரும் ஊழல் என்ற அச்சுறுத்தல் குறித்து நாங்கள் எங்கள் கவலைகளை இந்த தீர்ப்பின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளோம்” என்றார். அத்துடன் தீர்ப்பின் ஹைலைட்ஸ் இதோ:

jud feb 15

வேதனையான மவுனம் வெகுகாலம் நீடித்ததால் கவலை தரக்கூடிய தகவல்களை மேடையேற்ற வேண்டி உள்ளது.

சொத்து சம்பாதிப்பதில் இவர்களுக்கு எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லை.

இவர்களது தந்திரங்களைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.

பணம் சம்பாதிப்பதை அச்சம் இல்லாமல் செய்துள்ளார்கள்.

இவர்களிடம் பேராசை மட்டுமே இருந்துள்ளது.

இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும்.

இவர்களை அனுமதித்தால் நியாய தர்மம் பார்ப்பவர்கள் நாட்டில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள்.

இவர்கள் சமுதாயத்துக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

வருமானத்துக்கு அதிகமாக 211 சதவிகிதம் சம்பாதித்துள்ளார்கள்.

இவர்கள் ஒரே வீட்டில் கூடி இருந்ததே வாழ்வதற்காக அல்ல. சதி செய்வதற்காகத்தான்

மேலும் இந்த சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், மொத்தம் 570 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பில் வழக்கை விசாரித்த நீதிபதி பினாகி சந்திரகோஷ் தன்னுடைய தீர்ப்பில் கூறியதாவது:-

இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் பதில் மனுதாரர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் சட்டப்படி அவர் இந்த வழக்கில் இருந்து விலக்கப்படுகிறார்.

இந்த வழக்கில் ரூ.66 கோடிக்கு வருவாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக தனிக்கோர்ட்டு கணக்கிட்டு உள்ளது.

இதனை கர்நாடக ஐகோர்ட்டு தன்னுடைய தீர்ப்பில் ரூ.2 கோடியே 82 லட்சத்து 36 ஆயிரத்து 812 என்று கணக்கிட்டுள்ளது. இதன் அடிப்படையில் அளவுக்கு மீறிய சொத்து 8.12 சதவீதம் என்று வருகிறது. இந்த கணக்கு தவறானதாகும். இந்த தவறை சரி செய்தாலே வருவாய்க்கு மீறிய சொத்து கணக்கு ரூ.16 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 812 என்று வருகிறது. இது 76.7 சதவீதமாகும். சுப்ரீம் கோர்ட் ஆராய்ந்து பார்த்த சொத்து, வருவாய், செலவு கணக்கின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருவாய்க்கு மீறிய சொத்து 35 கோடியே 73 லட்சத்து 4 ஆயிரத்து 6 ரூபாய் வருகிறது. இது 211.09 சதவீதமாகும்.

ஜெயலலிதா விடுவிப்பு

இந்த கணக்கீடு மட்டுமே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்ய போதுமானது. இதனடிப்படையில் தனிக்கோர்ட்டு மிக சரியாக கணக்கீடு செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது என்று தெரிய வருகிறது. ஆகவே தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

இந்த வழக்கில் குற்றவாளி1 (ஜெயலலிதா) மரணம் அடைந்ததால் அவர் விலக்கப்பட்டாலும், மற்ற குற்றவாளிகளான மூவரும் (சசிகலா, சுதாகரன், இளவரசி) தனிக்கோர்ட்டு விதித்த தண்டனைக்கு உரியவர்கள் ஆகிறார்கள். இவர்கள் மூவரும் முதல் குற்றவாளியுடன் கூட்டு சதியில் ஈடுபட்டவர்கள் என்று தெரிய வருகிறது,

தனிக்கோர்ட்டு தீர்ப்பில், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் பொது ஊழியர்கள் மட்டுமின்றி தனி நபர்களும் தண்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது மிகவும் சரியானது.

இந்த வழக்கில் அளிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இவர்கள் மூவரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளது, தனிக்கோர்ட்டின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள கீழ்கண்ட காரணங்களால் நிரூபணம் ஆகிறது.

(1) ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் தொடர்பாக சசிகலாவின் பெயரில் மறைந்த ஜெயலலிதா பவர் ஆப் அட்டார்னி ஒன்றை அளித்து இருக்கிறார். இந்த நிறுவனம் தொடர்பான சட்டரீதியான சிக்கல்களில் இருந்து தன்னை முற்றிலும் விலக்கி வைத்துக்கொள்ளவே ஜெயலலிதா இப்படி செய்திருக்கிறார் என்று தெரிகிறது.

(2) ஒரே நாளில் 10 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்பது சாட்சியங்கள் மூலம் தெரிய வருகிறது. இதுதவிர சசிகலா, சுதாகரன் ஆகியோர் தனியாகவும் நிறுவனங்களை தொடங்கி இருக்கின்றனர். இந்த நிறுவனங்கள் அனைத்துமே நமது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனங்கள் தொடர்பான கிளை நிறுவனங்களாகவே இருப்பதாக சாட்சியங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

(3) இந்த நிறுவனங்கள் அனைத்துமே மறைந்த ஜெயலலிதாவின் வீட்டு முகவரியில் தான் இயங்கியிருக்கிறது. எனவே இவை குறித்து அவருக்கு எதுவும் தெரியாது என்று கூறமுடியாது. இவர்கள் மூவருக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையில் எந்த வகையிலும் ரத்த சொந்தம் இல்லையென்றாலும் இவர்கள் மூவரும் அவருடன் சேர்ந்து வசித்துள்ளனர்.

(4) சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் வருமானம் உள்ளது என்று கூறியிருந்தாலும், ஜெயலலிதாவின் பணத்தில் இருந்து பல்வேறு நிறுவனங்களை தொடங்கியது, பெருமளவிலான நிலங்களை விலைக்கு வாங்கியது ஆகியவை இந்த மூவரும் அவருடைய வீட்டிலேயே அவருடன் தங்கியிருந்து ஜெயலலிதாவின் சொத்துகளை பராமரித்ததற்கும், கூட்டுச்சதியில் ஈடுபட்டதற்கும் தேவையான ஆதாரமாக இருந்திருக்கிறது.

(5) மறைந்த ஜெயலலிதாவின் சார்பாக வருமான வரித்துறைக்கு அளித்த வாக்குமூலம் ஒன்றில் மறைந்த ஜெயலலிதா, சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு ரூ.1 கோடியை பங்கு மூலதனமாக அளித்து உள்ளார். அந்த ஒரு கோடியை பிணையாக வைத்து அந்த நிறுவனத்துக்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நிறுவனத்துடன் மறைந்த ஜெயலலிதாவுக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறமுடியாது.

(6) ஒரு வங்கி கணக்கில் இருந்து இன்னொரு வங்கி கணக்குக்கு பணம் மாறி இருப்பது இவர்களுக்கு இடையே தவறாக பெறப்பட்ட பணத்தை பரிவர்த்தனை செய்து கொள்ளும் வகையில் கூட்டுச்சதி இருப்பதை நிரூபிக்கிறது.

(7) குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு இடையிலான கூட்டுச்சதியானது தேவையான சாட்சியங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, தனிக்கோர்ட்டு இந்த வழக்கில் சரியான காரணங்களின் அடிப்படையில் சரியான முடிவை எடுத்துள்ளது. இந்த காரணங்களால் கீழ்கோர்ட்டு விதித்த தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து கர்நாடகா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நிலையில், இவர்களுக்கு எதிராக தனிக்கோர்ட்டு இவர்களுக்கு வழங்கிய சிறைதண்டனை மற்றும் இதர அபராதங்கள் அனைத்தும் உறுதி செய்யப்படுகின்றன.

இவர்கள் மூவரும் விசாரணை கோர்ட்டு முன்னிலையில் உடனடியாக சரணடைய வேண்டும். இவர்கள் மூவருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றும் வகையில் விசாரணை கோர்ட்டு சட்டத்தின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல் நீதிபதி பினாகி சந்திரகோஷ் தன்னுடைய தீர்ப்பில் கூறினார்.

court feb 15 a

நீதிபதி அமிதவ ராய்

இந்த விசாரணையில், மற்றொரு நீதிபதியான அமிதவ ராய், முதல் நீதிபதியின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அம்சங்களை ஏற்றுக்கொண்ட அதே நேரத்தில், கூடுதலாக தன்னுடைய கருத்தையும் கூடுதல் தீர்ப்பு வடிவில் சுருக்கமாக 6 பக்கங்களில் வெளியிட்டார். நீதிபதி அமிதவ ராய் தன்னுடைய கூடுதல் தீர்ப்பில் கூறியதாவது:-

மனதளவில் அமைதியைக் குலைக்கும் ஒருசில சிந்தனைகள் மனதில் கிளர்ந்ததால் அக்கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த கூடுதல் தீர்ப்பை பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடங்கிய 34 நிறுவனங்களில் பெரும்பாலானவை பெயர் அளவிலான நிறுவனங்கள் ஆகும். சட்டத்தை ஏமாற்றி, கணக்கில் காட்டாத வருவாயை நியாயப்படுத்தவே இவை தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், பெரிய அளவில் சொத்து குவிப்பதற்கு ஆழமான சதி நடந்து இருப்பது தெளிவாகிறது.

சமுதாயத்துக்கு சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்ட மக்கள் பிரதிநிதிகள், தங்களின் நலனுக்காக செயல்படுவது, அவர்கள் மீது சமுதாயம் வைத்த நம்பிக்கையை கெடுப்பது மட்டுமின்றி, அரசியல் சட்டப்படி அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கும் துரோகம் விளைவிப்பதாகும்.

சமூகத்தில் ஊழல் கொடூரமானது. இது சமூகத்தை அரித்து அழிக்கும் நோயைப் போன்றது. பல கொடூரமான கரங்களைக் கொண்ட ஊழலின் அனைத்து வகைகளும் சமுதாயத்தில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். நம் சுதந்திர இந்தியாவை உருவாக்கிய முன்னோர்களின் தன்னலமற்ற, கணக்கற்ற தியாகங்களை மதிக்கும் வகையில் இதனை நாம் ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஊழல் தடுப்பு சட்டத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் நீதிமன்ற தீர்ப்புகள் இருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இவ்வாறு நீதிபதி அமிதவ ராய் தனது கூடுதல் தீர்ப்பில் கூறியுள்ளார்.

error: Content is protected !!