கர்நாடகா சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு! – சுப்ரீம் கோர்ட் ஆர்டர் – AanthaiReporter.Com

கர்நாடகா சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு! – சுப்ரீம் கோர்ட் ஆர்டர்

கடந்த ஓரிரு நாளாக அனல பறக்கும் விவாதமாகி விட்ட கர்நாடக விவகாரத்தில் பாஜக-வின் எடியூரப்ப்பா சட்ட சபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதிரடியாக எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிசேக் சிங்வி, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோர எங்களுக்கு முதலில் வாய்ப்பு தர வேண்டும். காலதாமதமின்றி, ஓட்டெடுப்புக்கு உத்தரவிட வேண்டும். சட்டசபையில் நாளையே நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் தயாராக உள்ளது. அதனிடையே எம்எல்ஏக்கள் அச்சமின்றி ஓட்டுப்போட ஏற்பாடு செய்ய வேண்டும். சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றார்.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைத்தது தன்னிச்சையான முடிவு. யாரை அழைக்க வேண்டும் என முடிவு செய்ய கவர்னருக்கு தன்னிச்சையான அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் நடைமுறைகள், மரபுகளை பின்பற்ற வேண்டும். தற்காலிக சபாநாயகரை நியமிக்க வேண்டும் என்றார்.

அதே சமயம் பா.ஜ.க, சார்பில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு ஒரு வார அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட் நாளை மாலை 4 மணிக்கு சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

அந்தத் தீர்ப்பின் விவரம் இதுதான்:.

“இந்த வழக்கில் எடியூரப்பாவுக்காக ஆஜராகியிருக்கும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கர்நாடக ஆளுநருக்கு மே 15, 16 தேதிகளில் எடியூரப்பா எழுதிய கடிதத்தின் நகல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். அவற்றில் 16 ஆம் தேதி எழுதப்பட்ட கடிதத்தில், தனது கட்சிதான் தனிப் பெரும் கட்சி என்றும் பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினர்களை மற்றவர்களிடம் இருந்தும் தான் பெற்றிருப்பதாகவும், அதன் அடிப்படையில் தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மனுதார்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும்,கபில் சிபலும் இதுபோன்ற கடிதங்களை வைத்துக் கொண்டு ஆளுநர் எடியூரப்பாவை அரசு அமைக்க அழைத்திருக்கக் கூடாது என்றும், இது தொடர்பாக இன்னும் பல ஆவணங்கள் தேவை என்றும் வாதிட்டிருக்கிறார்கள். ஆனால் இதை முகுல் ரோத்தகி ஏற்கவில்லை.

எடியூரப்பாவை ஆளுநர் அரசு அமைக்க அழைத்தது சரியா தவறா என்பதை முடிவு செய்ய விரிவான விசாரணை தேவைப்படுகிறது. இதற்கு கணிசமான காலம் தேவைப்படும் என்பதால் இது தொடர்பான உடனடியான முடிவை இப்போது எடுத்துவிட முடியாது.

இந்நிலையில் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள எவ்வித காலதாமதமும் இன்றி உடனடியாக, சட்ட மன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதே சரியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

கர்நாடக ஆளுநர் தனது 16 ஆம் தேதியிட்ட கடிதத்தில் எடியூரப்பாவை அரசு அமைக்க அழைத்ததோடு அவரது பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருக்கிறார்.

ஆனால் இந்த வழக்கின் அனைத்து சூழல்களையும் கணக்கிலெடுத்துப் பார்க்கையில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான அவகாசம் அவ்வளவு வேண்டாம் என்றும் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த நீதிமன்றம் கருதுகிறது. அந்த வகையில் நாளையே அதாவது மே 19 ஆம் தேதியே கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

அரசியல் அமைப்பின் மூன்றாவது பிரிவின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்காத நிலையும், சபாநாயகர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையும் நிலவுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக இந்த நீதிமன்றம் பின் வரும் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது.

1. தற்காலிக சபாநாயகர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.

2. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் நாளை மே 19 ஆம் தேதி காலையில் இருந்து பதவி ஏற்கத் தொடங்கி, மாலை 4 மணிக்குள் அந்த நிகழ்வு முடிக்கப்படவேண்டும்

3.தற்காலிக சபாநாயகர் மே 19 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சட்டமன்றத்தில் யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்பதை அறிய நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

4. சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக மாநில டிஜிபி மேற்கொள்ள வேண்டும்.

5. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருப்பதால் அதற்குள் முதல்வர் எடியூரப்பா முக்கியமான எவ்விதமான கொள்கை முடிவுகளையும் மேற்கொள்ளக்கூடாது.

6. எதிர்மனு தார்கள் தங்கள் பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய ஆறு வாரங்கள் அனுமதிக்கப்படுகிறது. அதற்குப் பிறகும் யாரேனும் பிற்சேர்க்கை செய்ய வேண்டுமென்றால் நான்கு வாரங்கள் அனுமதிக்கப்படுகிறது’’ என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், கர்நாடக சட்டமன்றத்துக்கு ஆங்கிலோ இந்தியன் நியமன உறுப்பினரை நியமிக்க தற்போது முயற்சிகள் நடைபெறுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் சார்பில் கோரப்பட்டது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை அவ்வாறான நியமன திட்டம் எதுவும் இல்லை என்று மாநில அரசால் தெரிவிக்கப்பட்டிருப்பதால் மனுதாரரின் கோரிக்கைக்கு இதையே பதிலாக்கி அந்த கோரிக்கை முடித்து வைக்கப்படுகிறது என்றும்  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது