உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை இல்லை! – சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை இல்லை! – சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

திமுக சார்பிலும் திருமா சார்பிலும் எப்படி எல்லாமோ வாதாடியும் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை இல்லை என்றும், 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அடிப்படையில் நடத்தலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி திமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் சுப்ரீம் கோர்ட் மனு தாக்கல் செய்தன. இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என மனுவில் கூறியிருந்தனர். இதேபோல் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி திருமாவளவனும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி களுக்கான தேர்தல் நடவடிக்கை தொடங்கி விட்டது என்றும், எனவே இனி நீதிமன்றம் தலையிட இயலாது என்றும் கூறப் பட்டிருந்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளில் எஸ்.சி.எஸ்.டி. மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே தி.மு.க. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு விளக்கத்தை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்டது. தி.மு.க. உள்ளிட்ட 6 கட்சிகளின் வழக்குகளை ஒன்று சேர்த்து விசாரணை தொடங்கியது. முதலில் வாதாடிய தி.மு.க. தரப்பு வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் சுழற்சி முறையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு செய்ய வேண்டிய இடஒதுக்கீடு 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி செய்யப்படவில்லை என்றார். குறிப்பாக பெண்களுக்கு மேற்கொள்ள வேண்டிய இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படவில்லை என்ற அவர், இடஒதுக்கீடு செய்யப்படாமல் நடத்தப்படும் தேர்தலுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

இதையடுத்து வாதிட்ட தமிழக அரசு வழக்கறிஞர், “ஊராட்சி தேர்தல் நடத்துவதை தி.மு.க. விரும்பவில்லை என்றார். தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்ட பிறகு இத்தகைய விசாரணை தேவையில்லை என்ற அவர், தி.மு.க. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பாப்டே, தி.மு.க. வழக்கறிஞரிடம், “2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஊரக உள்ளாட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு தேர்தல் நடத்தினால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதற்கு சம்மதமா?” என்றார்.

அதற்கு பதில் அளித்த தி.மு.க. தரப்பு வழக்கறிஞர், ஆரம்பத்தில் இருந்தே இதைத்தான் வலியுறுத்தி வருவதாகவும், முறையாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தீர்ப்பளித்த தலைமை நீதிபதி பாப்டே, தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தடை இல்லை என்றார். தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பாணையின்படி தேர்தலை நடத்தலாம் என்றும், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

ஊராட்சி தலைவர் உள்பட அனைத்து பதவிகளுக்கும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தான் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங் களிலும் 3 மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தலைமை நீதிபதி பாப்டே உத்தரவிட்டார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 15 மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை மாநகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வேலூர் மாநகராட்சி பட்டியலினத்தை சேர்ந்த பெண்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சி பட்டியலினத்தவர்கள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15 மாநகராட்சி மேயர் பதவிகளில் 9 மாநகராட்சிகள் தவிர மீதமுள்ள 6 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பொது பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை, ஆவடி, திருப்பூர், தஞ்சை, சேலம், ஓசூர் ஆகிய மாநகராட்சி மேயர்பதவிகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!