நீர்மை, பெருந்தொண்டர் ஆவணப்பட திரையிடல் : நாளை மாலை 5.30 மணி!

நீர்மை, பெருந்தொண்டர் ஆவணப்பட திரையிடல் : நாளை மாலை 5.30 மணி!

புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல புகைப்படக்கலைஞர் புதுவை இளவேனில் தயாரித்து இயக்கியுள்ள ஓவியர் மனோகர், பெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோ ஆகிய இருவரைப் பற்றிய நீர்மை, பெருந் தொண்டர் ஆவணப்படங்கள் சென்னையில் வெளியிடப்படுகின்றன.

பிப்ரவரி 1 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கே.கே. நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் திரையிடப்படுகிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் ஓவியர் ஆர். எம். பழனியப்பன், இயக்குநர் சரவண ராஜேந்திரன், ஆய்வாளர் ரெங்கையா முருகன், ஓவியர் இளையராஜா ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

புதுவை இளவேனில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக விருப்பத்துடன் தேடிச் சென்று எழுத்தாளர்கள், ஓவியர்கள் என கலை இலக்கிய ஆளுமைகளை ஒளிப்படங்கள் எடுத்து ஆவணப் படுத்திவருபவர். எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி, பிரபஞ்சன், ஆதிமூலம், வண்ணதாசன் எனப் பல எழுத்தாளர்களை புகைப்படப் பதிவுகள் செய்த அனுபவம் கொண்டவரான இளவேனில், சில புகைப்பட நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

ஆவணப்படங்கள் பற்றிப் பேசும் அவர், “எனக்குள் ஓர் ஆசை இருந்துகொண்டே இருந்தது. பெருங் கலைஞர்களையும், சமூகத்திற்காகப் பணியாற்றி அடையாளம் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிற எளிய மனிதர்களையும் ஆவணப்படமாக உருவாக்கவேண்டும் என்பதுதான் அது. ஏற்கெனவே எழுத்தாளர் கி.ரா, கம்யூனிஸ்ட் தோழர் பாலமோகன் ஆகியோரைப் பற்றிய ஆவணப்படங்களை எடுத்திருக்கிறேன். தற்போது ஓவியர் மனோகர், பெரியார் தொண்டர் ஒளிச்செங்கோ பற்றிய படங்களையும் அந்த வரிசையில் உருவாக்கியதை பெருமையாக நினைக்கிறேன்” என்கிறார்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், “பாண்டிச்சேரி போவது என்றாலே இளவேனிலுடன் சுற்றுவது என்று தான் அர்த்தம். எப்போது பாண்டிச்சேரி சென்றாலும் புகைப்படக்கலைஞர் இளவேனிலைச் சந்தித்துவிடுவேன். தேர்ந்த வாசகர். எழுத்தாளர்களை நேசிக்கும் ப்ரியத்துக்குரிய தம்பி.இள வேனில் கிராவைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். மிகச்சிறந்த படமது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி மீது மிகுந்த அன்பு கொண்டவர். இவர் எடுத்த சுந்தர ராமசாமியின் புகைப்படங்கள் அற்புதமானவை” என்று பாராட்டி எழுதியுள்ளார்.

நீர்மை 39 நிமிடங்களும் பெருந்தொண்டா் 22 நிமிடங்களும் ஓடக்கூடியவை. இரு ஆவணப்படங் களையும் ரத்தினம் ஸ்டில்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில்

நீர்மை

காக்கைகள், மாடுகள், வயல்வெளிகள், சிதைந்த ஓட்டு வீடுகள், திண்ணைகள், தாழ்வாரங்கள், கிராமிய சாலைகள், பனைமரங்களை மனோகரின் நீர்வண்ணத்தில் பார்க்கவேண்டும். உலகம் எங்கும் பணியாற்றுகிறார்கள் மனோகரின் மாணவர்கள், தொப்பியில் சிரிக்கும் மனோகர் என்ற இந்த எளிமையான ஓவியரின் தூரிகைப் பொழுதுகளை நீர்மை என்ற பெயரில் ஆவணப் படமாக உருவாக்கியிருக்கிறார் இளவேனில்.

பெருந்தொண்டர்

கிராமத்தில் வாழும் பெரியார் தொண்டராக  பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் அப்பாவின் திராவிடர் கழக மற்றும் பத்திரிகை அனுபவங்களை விஷூவலாக பதிவு செய்யும் சிறு முயற்சி. இளவேனில் வரைந்துள்ள இந்த சித்திரத்தின் வழியாக அன்றைய. சமூக அரசியல் பாதையைப் புரிந்துகொள்ளலாம்.

error: Content is protected !!