தூத்துக்குடியில் இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு இடமில்லை! – கலெக்டர் நத்தூரி திட்டவட்டம்! – AanthaiReporter.Com

தூத்துக்குடியில் இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு இடமில்லை! – கலெக்டர் நத்தூரி திட்டவட்டம்!

இந்தத் தூத்துக்குடியில் இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு இடமில்லை: தூத்துக்குடி மக்கள், பொது அமைப்புகள் எல்லாம் கருத்தை உறுதியாகத் தெரிவித்தனர். மக்களின் உணர்வை ஏற்றுக்கொண்ட மாநில அரசும் இக்கருத்தில் உறுதியாக இருப்பதாக செயதியாளர்களிடம் வியாழனன்று மாலை மாவட்ட ஆட்சியர் நந்தூரி தெரிவித்தார்.

 

 

பெரும் கலவர பூமியாக மாறிவிட்ட தூத்துக்குடியில் உடனடியாக அமைதியை உருவாக்க புதிய மாவட்ட ஆட்சியர், புதிய காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தமிழக சிறப்பு உயர் அதிகாரிகள் டேவிதார், ககன்தீப் சிங் பேடி மற்றும் தென் மண்டல டிஐஜி சைலேஷ் குமார் ஆகியோரை தூத்துக்குடிக்கு அனுப்பியது. இவர்கள் அனைவரும் தூத்துக்குடிக்கு விரைந்து சென்று, இன்று அதிகாலையில் இருந்தே தங்கள் பணியை மேற்கொண்டனர். மாலையில் தங்கள் கருத்துகளை செய்தியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிப்பதற்காக செய்தியாளர்களுடன் பேசினர்.

பொதுவான தகவல்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். அதாவது, “தூத்துக்குடி போராட்டத்தின் போது, 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் பெண்கள் என நந்தூரி தெரிவித்தார். போராட்டத்தின் போது 19 பேர் மிகவும் கடுமையான காயமடைந்துள்ளனர். 83 பேர் சிறுகாயங்களைப் பெற்றுள்ளனர். இவர்களுக் கெல்லாம் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காவல்துறையை சேர்ந்த 34 பேரும் காயமடைந்துள்ளனர். போராட்டத்தின் போது மொத்தம் 98 வாகனங்கள் தீக்கி ரையாக்கப் பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 11 மோட்டார் சைக்கிள்கள் கொளுத்தப்பட்டுள்ளன. கொளுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ.33 லட்சமாகும். மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் கடுமையான சேதமடைந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் மொத்தம் ரூ.29 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன” என நந்தூரி கூறினார்.

மேலும் அவர் பேசிய போது, “மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளைத் தவிர அவர்களின் உறவினர்கள், வெளியூரில் இருக்கும் உறவினர்கள் என தினந்தோறும் ஏராளமான பேர் வருகின்றனர். அவர்களுக்கு தண்ணீர் உள்பட உணவு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்கு தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினருடன் பேசியதில் எல்லோரும் தூத்துக்குடியில் விரைவில் அமைதி திரும்ப வேண்டுமென்று விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

கடைகள் மூடி கிடப்பதாலும் பேருந்துகள் இயங்காமல் இருப்பதாலும் தூத்துக்குடி நகரில் உள்ள மக்களுக்கு காய்கறி கிடைப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனை எல்லோரும் தெரிவித்தனர். எனவே இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட உடனடியாக மதுரையில் இருந்து காய்கறிகளை தூத்துக்குடி கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 180 பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் ஆலை இருக்கவே கூடாது என்று எங்களுடன் பேசிய அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்தார்கள். இதே கருத்தை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழக முதல்வர் இன்று காலையில் பேசும் பொழுது இதே கருத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் இன்று பேசும் போது இதே கருத்தை உறுதியாக எங்களிடம் கூறினார். ஸ்டெர்லைட் ஆலைக்கு 100 சதவீதம் மின்சாரம் இன்று காலை நிறுத்தப்பட்டு விட்டது. எனவே, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கான ஏற்பாடுகளை அந்த நிறுவனத்தால் இனி செய்ய இயலாது. இப்போது இருக்கும் பகுதியும் இனி இயங்க வழியில்லை.

இங்குள்ள மக்களின் கருத்து முழுக்க இந்த ஆலைக்கு எதிராக உள்ளது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவை எதிர்த்து ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்யலாம். ஆனால் மக்கள் கருத்து 100 சதவீதம் எதிர்ப்பாக இருக்கும் போது எந்த அமைப்பும் அதற்கு எதிராக முடிவெடுக்க வாய்ப்பில்லை” என்றும் மாவட்ட ஆட்சியர் நந்தூரி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு டேவிதார், பேடி, சைலேஷ் குமார் ஆகியோர் பதில் அளித்தனர். தூத்துக்குடி போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாரும் கைது செய்யப்படவில்லை. போராட்டத்துக்கு பின்னர் இரண்டு கட்டமாக 65, 68 ஆகிய எண்ணிகைகளில் பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றும் சில பகுதிகளில் வன்முறை வெடித்தது. வாகனங்கள் எரிக்கப்பட்டன. ஆனால் அவை உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டு அமைதியான நிலை ஏற்படுத்தப்பட்டது. கமாண்டோ படையும் அதன் சிறப்பு வாகனமும் நகரில் ரோந்து சுற்றி வந்தது.

கல்வி, வர்த்தகம், கல்லூரிகள், பள்ளி கூடங்கள், அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பை சேர்ந்த அமைப்புகளின் நிர்வாகிகளுடன் இன்று பேசினோம். நகரில் அமைதி திரும்ப அவர்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் எங்கள் வசம் உள்ளன. பலர் விரிவான குறிப்புகளைத் தந்துள்ளனர். அவற்றை நாங்கள் நிச்சயம் பயன்படுத்துவோம். எல்லோரும் தூத்துக்குடியில் விரைவில் அமைதி திரும்ப வேண்டுமென்று விரும்பினர். இதைத்தான் அரசும் நாங்களும் விரும்புகிறோம். பொதுமக்கள் இதற்கு முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்க விரும்புகிறோம் என மாவட்ட ஆட்சியர் நந்தூரி, காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா மற்றும் தமிழக உயர் அதிகாரிகள் டேவிதார், ககன்தீப் சிங் பேடி மற்றும் தென் மண்டல டிஐஜி சைலேஷ் குமார் ஆகியோர் விருப்பம் தெரிவித்தனர்.