ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் மறைந்தார்; ஆனால் வாழ்கிறார்!

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் மறைந்தார்; ஆனால் வாழ்கிறார்!

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் முடங்கினாலும் தன்னுடைய இயற்பியல் ஆய்வில் தொய்வு காணாத மிகப்பிரபல விஞ்ஞானி. தன்னம்பிக்கையின் நாயகனாகவும் விளங்கிய இந்த விஞ்ஞானி இன்று உலகை விட்டு மறைந்து விட்டார். நரம்பியல் சார்ந்த ALS பாதிப்புக்கு உள்ளானவர்கள் 5 ஆண்டிற்கு மேல் உயிர்வாழ்வது சாத்தியமில்லை என்று பொதுவாக மருத்துவம் கூறிவரும் போதிலும், தனது 21 வயதில் ALS பாதிப்பிற்கு உள்ளாகிய ஸ்டீபன் ஹாக்கிங் 50 ஆண்டுகளுக்கும் அதிகம் உயிருடன் இருந்துவரும் அதிசய மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரும் படிக்க வேண்டிய பாடம் ஸ்டீபன் ஹாக்கிங். குறிப்பாக எதுவுமே செய்யாமல் அல்லது செய்ய முடியாமல் முடங்கிப் போகும் மனிதர்களுக்கு மத்தியில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய உந்து சக்தியாக திகழ்ந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

அது 2005-ம் ஆண்டு. வீல் சேரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு நர்சுகள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப்பாகமுமே செயல்படாத நிலை.

அவரது வீல் சேரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கம்ப்யூட்டரும், வாய்ஸ்ஸின்தைசரும் இருந்தது. பிரிட்டிஷ் டே டைம் டாக் ஷோ நிகழ்ச்சி நடத்திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.

‘‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர்,அண்ட வெளியில் என்ன இருந்தது?’’ என்று கேட்டார் ரிச்சர்ட்.

‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது!’’என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும் அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள்,

‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னைவிட சுவாரஸ் யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது’’ என்றார்.

‘‘இந்த உடல்நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்கள்.

‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’’ என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.

பிரிட்டனில் 1942-ம் வருடம் பிறந்த ஸ்டீபன், படிப்பில் படுசுட்டியாக இருந்தார். ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டு இ-ருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21-வது வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும், மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.

துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர் வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாட்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், ஸ்டீபனுக்கு பயம் தருவதற்குப் பதிலாகத் தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவிட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார். வீல் சேரில் இருந்தபடியே பல்கலைக் கழக ஆய்-வினை முடித்துப் பேராசிரியர் ஆனார்.

திருமணம் முடிந்து, இரண்டு குழந்தைகளும் பிறந்தன. ஏ.எல்.எஸ். எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985ம் வருடம் அவரது உடல் முழுமையாகச் செயலிழந்தது. ஆனாலும், நம்பிக்கை இழக்காமல் வலக்கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார்.

‘எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கண்டு-பிடித்து, வீல் சேரில் பொருத்தித் தர, சிரமம் குறைந்து அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.

ஆம்.. மரணத்துக்கே தண்ணி காட்டி வாழ்ந்து சாதித்தவர். அசாத்தியமான புத்திசாலி. மரணம் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது நிச்சயம் ஒரு நாள் வரும். ஆனால் அது வருமே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை. எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று கூறியவர் ஹாக்கிங். மறு பிறவி. சொர்க்கம், நரகம்..இவையெல்லாம் நிஜமா.. நாம் இறந்த பின்னர் என்ன ஆவோம்.. எங்கு போவோம்… நமது உயிர் என்னாகும்.. ஆவி, பேய் உண்டா.. இதற்கெல்லாம் விடை தெரியாமல் அத்தனை பேருமே அலை பாய்ந்தபடிதான் உள்ளோம். ஆனால் இது எதுவுமே கிடையாது. இறப்போடு எல்லாம் முடிந்து போய் விடும் என்று தெளிவு படக்கூறியவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

உண்மைதான்.. மரணம்தான் இறுதியானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம் என்பதோ கிடையாது என்றும் ஹாக்கிங் திட்டவட்டமாக கூறியவர். அதெல்லாம் ஜாலிக்காக பரப்பப்பட்ட கட்டுக்கதைகள் என்றும் ஹாக்கிங் கூறியுள்ளார். மக்களின் மரண பயத்தை போக்கவே இதுபோன்ற கதைகளை சிலர் கிளப்பி விட்டதாகவும், அதுவே வழி வழியாக மக்களின் நம்பிக்கையாக மாறிப் போய் விட்டதாகவும் தெரிவித்தார் ஹாக்கிங்.

இது குறித்து ஹாக்கிங் ஒரு முறை, ‘மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது. நான் கடந்த 49 வருடமாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. ஆனால் மரணிக்க நான் அவசரப்படவில்லை. நிறைய செய்ய வேண்டும் நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை. அதையெல்லாம் செய்ய வேண்டும்.

மேலும் மூளையும் ஒரு கம்ப்யூட்டர் போலத்தான். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் அது செயலிழந்து போகுமோ அது போலத்தான் மூளையும். மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும். அதன் பிறகு எதுவுமே இல்லை. மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது.

ஆக, மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையானது. கட்டுக்கதை அது. மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் அவை என்றவர் ஹாக்கிங். இதுகுறித்து தனது The Grand Design என்ற நூலிலும் விரிவாகப் பேசியுள்ளார் ஹாக்கிங்.

மனிதர்கள் பலருக்கு மன தைரியத்தைக் கொடுத்த ஹாங்கிங் நம்புகிறாரோ.. இல்லையா? அவர் ஆராய்சிகள் பல்வற்றின் மூலம் வாழ்ந்து  கொண்டிருக்கிறார் என்றாலும் மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதே பலரின் அவா.

error: Content is protected !!