கர்நாடக முதல்வருக்கு ஸ்டாலின் கண்டனம் – AanthaiReporter.Com

கர்நாடக முதல்வருக்கு ஸ்டாலின் கண்டனம்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டுமென கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது,

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தங்களின் பிரதிநிதியை நியமிப்பதில் காலம் தாழ்த்திவிட்டு, நிதி ஆயோக் மாநாட்டில் பங்கேற்க டில்லி சென்ற கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, காவிரி வரைவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரிடமும், மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடமும் முறையிட்டிருக்கிறேன் என்று, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தேவையில்லாத ஒன்றைப் பற்றிக் கூறியிருப்பதற்கு திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜூன் 12ம் தேதிக்குள் காவிரி ஆணையத்திற்கான பிரதிநிதியின் பெயரைக் கொடுங்கள் என்று மத்திய அரசு உத்தரவிட்ட பிறகும், மேலும் சில விளக்கங்கள் என்ற அடிப்படையில், மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடப் போகிறோம் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்திருப்பதாகக் கர்நாடக முதல்வர் கூறியதாகத் தெரிகிறது.

இப்போது, மத்திய அரசும் கர்நாடகத்திற்கு ஒரு கடிதத்தை மட்டும் எழுதி விட்டு கடமை முடிந்து விட்டதாக எண்ணி, அமைதி காக்கிறது.

தமிழக முதல்வரையும், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளையும் காவிரிப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்கு சந்திக்க மறுத்த பிரதமரும், நீர் வளத்துறை அமைச்சரும் கர்நாடக முதல்வரை சந்திப்பதற்கு மட்டும் நேரம் ஒதுக்கித் தாராளமாக சந்திக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது, தமிழகத்தையும் தமிழக விவசாயிகளையும் பிரதமர் மோடி ஒரு பொருட்டாகவே கருதிடவில்லை என்று புலப்படுகிறது.

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைய மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும்.

இதுவரை தாமதத்திற்கு மேல் தாமதம் செய்தது போதும்; இனியும் எந்தவிதத் தாமதத்தையும் தமிழகம் தாங்கிக் கொள்ளாது.

இவ்வாறு, மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.