ரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்! – AanthaiReporter.Com

ரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்!

இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக மீண்டும் அறிவிக்கக் கோரும் தீர்மானம் இலங்கை பார்லிமென்ட்டில் நேற்று நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 117 பேர் ஓட்டளித்தனர்.

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரம சிங்கேவை கடந்த அக்டோபர் 26ம் தேதி அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். ஆனால், அவரது நியமனத்தை ஏற்க மறுத்த சபாநாயகர் கரு ஜெயசூர்யா, பார்லிமென்ட்டை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தினார். பெரும் போராட்டத்துக்கு பிறகு பார்லிமென்ட்டில் நடந்த 2 ஓட்டெடுப்புகளின்போதும் ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.

இதையடுத்து பார்லிமென்ட்டை கலைக்கும் அதிபர் சிறிசேனா உத்தரவுக்கு இலங்கை சுப்ரீம் கோர்ட் தடைவிதித்ததோடு, ராஜபக்சே மற்றும் அவர் தலைமையிலான அமைச்சர்கள் அவர்களின் பொறுப்புகளை கவனிக்க இடைக்கால தடைவிதித்தது.

இதை எதிர்த்து ராஜபக்சே தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனு மீதான விசாரணை ஜனவரி 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக மீண்டும் அறிவிக்கக் கோரும் தீர்மானம் இலங்கை பார்லிமென்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக 117 பேர் ஓட்டளித்தனர். இலங்கை பார்லிமென்ட்டில் மொத்தமுள்ள 225 எம்பிக்களில் 117 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளித்ததால் தீர்மானம் நிறைவேறியது.

ஏற்கனவே 2 முறை ரணிலுக்கு ஆதரவான தீர்மானத்தை ஏற்க மறுத்த சிறிசேனா இந்த தீர்மானத்தையாவது ஏற்பாரா என்று வழக்கம்போல் குழப்பம் நீடிக்கிறது.