இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கிடையே அடிதடி , கலாட்டா! – வீடியோ – AanthaiReporter.Com

இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கிடையே அடிதடி , கலாட்டா! – வீடியோ

கடந்த ஒரு மாத காலமாக அடுத்தடுத்து மாற்றங்களும், குழப்பங்களும் நடக்கும் இலங்கையில் நாடாளுமன்றம் இன்று கூடிய போது, ரணில் விக்ரமசிங்கே ஆதரவு எம்.பி.க்களும், அதிபர் சிறி சேனா, பிரதமர் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்களுக்கும் இடையே அடிதடி நடந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சபாநாயகர் ஜெயசூர்யாவை எம்.பி.க்கள் சுற்றிவளைத்து கெரோ செய்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி அடைந்ததை ஏற்க மறுத்த அவரின் ஆதரவு எம்.பி.க்கள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆவேசமாக கூச்சல் எழுப்பினார்கள்.

இலங்கையில் 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்த அதிபரின் உத்தரவுக்கு அநாட்டு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது. அத்துடன், 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூட்டப்பட்டு , ராஜபக்சேவுக்கு எதிராக, விக்ரமசிங்கே கட்சி சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது வாக்கெடுப்பு நடைபெற்ற சூழலில் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளிக்கு இடையே, ராஜபக்சே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது. அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. லட்சுமண கிரில்லா ராஜபக்சே மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடந்த வேண்டும் என்று சபாநாயகர் ஜெயசூர்யாவிடம் கூறினார்.

அப்போது எழுந்து பேசிய ராஜகபக்சே, ”நான் அதிபராகவும், பிரதமராகவும் இருந்தவன். எனக்குப் பிரதமர் பதவி என்பது ஒரு பொருட்டு அல்ல. 225 எம்.பி.க்களும் என்னுடன் சேர்ந்து புதிதாக தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று கோருகிறேன். எங்களுக்குப் புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதுதான் பிரச்சினைக்கு தீர்வாகும்” என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஜெயசூர்யா, ”சபையில் உள்ள உறுப்பினர்கள் சம்மதித்தால் வாக்கெடுப்பு நடத்தலாம்” என்று தெரிவித்தார். ஆனால், பிரதமர் ராஜபக்சே மற்றும் அதிபர் சிறி சேனாவின் ஆதரவு எம்.பி.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிபர் சிறிசேனா, பிரதமர் ராஜபக்சேவின் ஆதரவு எம்.பி.க்கள் சபாநாயகர் ஜெயசூர்யாவின் இருக்கையைச் சூழ்ந்துகொண்டு அவரைப் பேசவிடாமல் இடையூறு செய்து, சபாநாயகரை தாக்கப் பாய்ந்தனர். ஆனால், சபாநாயகருக்கு ஆதரவாக ரணில் விக்ரமசிங்கே ஆதரவு எம்.பி.க்கள் கேடயம்போல் நின்று மறித்தனர். இதனால், ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே ஆதரவு எம்.பி.க்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு, அடிதடி நடந்தது.

இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது பேசிய சபாநாயகர் ஜெயசூர்யா, ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிவித்தார். ஏறக்குறைய அரை மணிநேரத்துக்கும் மேலாக இந்த அமளி தொடர்ந்ததால், அவையை ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் அறிவித்து இன்றைய களேபரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.