அஸ்ஸூக்கு..புஸ்ஸூகு..அப்பளம்..வடை- நானே இப்பவும் பிரதமர்!- ரணில் அறைகூவல்

அஸ்ஸூக்கு..புஸ்ஸூகு..அப்பளம்..வடை- நானே இப்பவும் பிரதமர்!- ரணில் அறைகூவல்

நேற்று மாலை முதல் ட்ரெண்டிங்கில் இருக்கும் இலங்கை கொழும்பு நகரில் தனது ஆதரவுக் கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கே இன்று காலை ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், யார் இலங்கை பிரதமர் என்பதை இலங்கை நாடாளுமன்றத்தைக் கூட்டும்படி ரணில் விக்கிரமசிங்கே வலியுறுத்தினார்.

கொழும்பு டெம்பிள் ட்ரீ ஹோட்டலில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெண் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். திடீரென கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஆளும் கூட்டணியில் இடம்பெறும் ஜதிக ஹெல உருமயா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதில் ஆளும் கூட்டணியில் இருந்து இலங்கை சுதந்திரக் கட்சி வெளியேறினாலும் எந்தப் பாதிப்பும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி (106 உறுப்பினர்கள்), இலங்கை ஜதிக ஹெலே உருமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆதரவுடன் எளிதாக அரசு அமைக்க முடியும் என்று ஆலோசனையில் கலந்துகொண்ட தலைவர்கள் கூறினார்கள்.

அதாவது 113 உறுப்பினர்களின் ஆதரவு பெரும்பான்மை ஆதரவை ரணிலுக்கு தரும்.ஐக்கிய தேசியக் கட்சியில் 106 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு இன்னும் 7 உறுப்பினர்கள்தான் தேவை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 7 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

இக்கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரணில், “நான்தான் இலங்கை நாட்டின் பிரதமர். என்னை நீக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபருக்கு அதிகாரம் இல்லை. தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன். எனக்கு மட்டுமே பெரும்பான்மை உள்ளது. பிரதமரை மாற்றவேண்டும் என்றால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துதான் மாற்றவேண்டும். இல்லையெனில் நானாக முன்வந்து ராஜினாமா செய்திருக்கவேண்டும். அப்படி இரண்டும் நடக்காத பட்சத்தில் எவ்வாறு என்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முடியும். இது முற்றிலும் சட்டவிரோதமானது

நாடாளுமன்றத்தில் எனக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது. இதனை நாடாளுமன்றத்தைக் கூட்டி உறுதி செய்யலாம். நாட்டைக் குழப்பத்தில் தள்ள வேண்டியதில்லை. இதையொட்டி இங்கு  ஒரு நெருக்கடியை உருவாக்க வேண்டிய அவசியமும் இல்லை. இலங்கையின் பிரதமர் யார் என்பதை இலங்கை நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளவர்களே பிரதமராக இயங்க அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் ”என்றார் ரணில்.

குறிப்பாக இலங்கையின் பிரதமராக தான் நிலைப்பதாகவும் உறுதியாக ரணில் தெரிவித்தார்.

ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க இலங்கை அதிபருக்கு அதிகாரம் இல்லை.

அந்த நியமனம் சட்ட விரோதமானது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

இலங்கை நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று ரணில் வலியுறுத்தினார்.

மேலும் இலங்கை நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கே சபாநாயகருக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.அக் கோரிக்கை குறித்து இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு. ஜெயசூரியா பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.முதலில் அரசியல் சட்ட நிபுணர்களுடன் அவர் கலந்து ஆலோசித்து வருகிறார் என ஜெயசூரியா அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே இன்று அதிபர் சிறிசேனா இரண்டு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளார். முதல் அரசாணையில் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும், இரண்டாவது அரசாணையில் மஹிந்தா ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையையும் , குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Related Posts

error: Content is protected !!