இலங்கை பார்லிமெண்ட் முடக்கம்!

இலங்கை பார்லிமெண்ட் முடக்கம்!

நம் அண்டை நாடான இலங்கையில் கூட்டணி ஆட்சியில் இருக்கும் பிரதமருக்கும் , அதிபருக்கு மான மோதல் போக்கு அதிகரித்து அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதால், பார்லிமென்டை முடக்கி, அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலங்கையில் அதிபராக மைத்ரிபால சிறிசேனாவும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவும் இருந்து வருகிறார்கள். மைத்ரிபால சிறிசேனா இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர். இரு கட்சிகளும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. சமீபகாலமாக இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
இதனிடையே இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து அவர் பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா வலியுறுத்தியும் மறுத்து விட்டார்.

அதே சமயம் கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பிரதமர் ரணிலிடம் இருந்து சட்டம்- ஒழுங்கு துறையை அதிபர் சிறிசேனா பறித்தார். இதனால் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்கும், சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது ராஜபக்சே கட்சி (இலங்கை மக்கள் முன்னணி) பார்லிமென்டில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானமும் தோல்வியடைந்தது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் வாக்களித்தனர். இருப்பினும் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததால், பிரதமர் பதவியில் ரணில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.

இதனிடையே இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த 6 எம்.பி.,க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். இதனால் இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்த சிறிசேனா, அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டார். சிறிசேனா கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் பிரதமர் ரணிக்கு எதிராக செயல்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.

இப்படி அங்கு அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இலங்கை பார்லிமெண்டை முடக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். வரும் மே 8ம் தேதி வரை பார்லிமென்ட் முடக்கப்படுவதாக அறிவித்த அதிபர் சிறிசேனா, பதவியில் இருந்து ராஜினாமா செய்த அமைச்சர்களின் துறைகளை கவனிக்க, பிற அமைச்சர்களுக்கு பொறுப்பு வழங்கியுள்ளார். இலங்கையில் பார்லிமென்ட் முடக்கப்பட்ட சம்பவம் சர்வசதேச அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதாக தகவல் வருகிறது.

Related Posts

error: Content is protected !!