இலங்கை அதிபர் தேர்தல் : 80 சதவீதம் வாக்குகள் பதிவு! – AanthaiReporter.Com

இலங்கை அதிபர் தேர்தல் : 80 சதவீதம் வாக்குகள் பதிவு!

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக இதுவாக அறியப்படுகிறது. மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இலங்கை அதிபர் தேர்தலில் இம்முறை 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதன் மூலம், இலங்கை தேர்தல் வரலாற்றில் புதியதொரு அத்தியாயம் இது என கருதப்படுகிறது.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. நாளை (நவ.17) முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

ஒன்றரை கோடி வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர், 12 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு 3 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முக்கிய வேட்பாளர்களான பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபட்ச ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா மற்றும் இலங்கை எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிடோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

மாலை 5 மணி நிலவரப்படி 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாவட்ட அளவில் 4 மணி நிலவரப்படி திரிகோணமலை, அம்பாரா மாவட்டத்தில் 70 சதவீதமும், முல்லைத்திவில் 72.5 சதவீதமும், கிளிநொச்சியில் 68 சதவீதமும், வவுனியா மற்றும் பதுளாவில் 72 சதவீதமும், மன்னாரில் 65.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. யாழ்பாணம் மாவட்டத்தில் 64 சதவீதமும், அதிக பட்சமாக ரத்தனபுரா, கண்டி மாவட்டத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக 80% வாக்குகள் பதிவாகியுள்ளது. சுமார் 15.9 மில்லியன் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இத்தேர்தலில் 50%+1 வாக்குகளை பெறுபவரே வெற்றி பெற்றதாக கருதப்படுவர் என அறிவிக்கப் பட்டுள்ளது.  இதன் காரணமாக இத்தேர்தல் முடிவும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது, ஏனெனில் வழக்கம்போன்று யாரும் 50% மேல் பெறமாட்டார்கள் என்ற ஊகம் நிலவி வரும் நிலையில், தற்போது 50%+1 வாக்குகள் என்ற அடிப்படையில் வெற்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

35 வேட்பாளர்கள் களம் காணும் இந்த தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் 50%-க்கு அதிகமான வாக்குகளைப் பெறாவிட்டால் வெற்றியை, விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.