ஸ்ரீரெட்டி மட்டுமில்லை.. நாமும் வெட்கப்பட வேண்டும்! – AanthaiReporter.Com

ஸ்ரீரெட்டி மட்டுமில்லை.. நாமும் வெட்கப்பட வேண்டும்!

தமிழ் சினிமாவுக்கு இது அடுத்து ஒரு ஆசிட் டெஸ்ட்.

முன்பு சுசி லீக்ஸ்..

அடுத்து இப்போது தமிழ் லீக்ஸ்..

’லீக்’ ஆகும் சமாச்சாரம் என்பதால் தற்போது கோடம்பாக்கத்தின் ஸ்டேட்டஸ் பீதியின் ’பீக்’.

அணு குண்டே ஆனாலும் அதை அசால்ட்டாக கேட்ச் பிடித்து, அதை வைத்தே பெளலிங் போட்டு, எதிரியின் விக்கெட்டை வீழ்த்தும் அக்கட தேசத்து பவர்ஃபுல் ஹீரோக்களே ’ஸ்ரீரெட்டி’ என்றால் தெறித்து ஓடினார்கள்.. காரணம் இந்த ’அம்மாயி’ சமூக வலைதளங்களில் போட்ட மேட்டர் அப்படி.

’’வாய்ப்பு கொடுக்கிறேன் என்றார். படுக்கையில் பங்கு கொள் என்றார். எல்லாம் உற்சாகமாக முடிந்தது. படுக்கையில் வாய்ப்பு கொடுத்த எனக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னை அவர்களது சுயநலத்துக்காக பயன்படுத்தி கொண்டார்கள். அவர்களின் பெயர்களை வெளியிடுவேன்’’  என்றுதான் ஆரம்பித்தது அங்கு.

பங்காளிகளாக பிரிந்து சென்ற தெலுங்கானாவும், ஆந்திராவும் மீண்டும் ஒன்றாக உட்கார்ந்து ஸ்மார்ட்ஃபோனில் கிசுகிசுக்க ஆரம்பித்தன.

ஒருவழியாக, ஸ்ரீரெட்டியின் ’ பணிக்காக படுக்கையைப் பகிர்தல்’ பஞ்சாயத்து ஒய்ந்து டோலிவுட் அமைதியாக, இப்போது தமிழ் சினிமாவை தனது டார்கெட் ஆக்கியிருக்கிறார் அதே அம்மாயி. ஃபேஸ்புக்கில் ஸ்ரீரெட்டியின் பேஜ் தற்போது அதிர்கிறது.

இதில்தான், ’’ஒரு தமிழ் இயக்குநரை ஒரு தயாரிப்பாளர் மூலம் ஒரு ஹோட்டலில் சந்தித்தேன். எனக்கு ஒரு ரோல் கொடுப்பதாக வாக்களித்தீர்கள். ஞாபகம் இருக்கிறதா. நீங்கள் ரொம்பர் நல்லவர்’’ என்று தனது தமிழ்லீக்ஸ்-ஐ தொடங்கியிருக்கிறார்.

அடுத்து ஒரு நடிகர். ’பாட்மிண்டன் போட்டிக்காக ஹைதராபாத்தில் சந்தித்த போது, அறிமுகம்.’ அடுத்து அம்மாயி சொல்வது எல்லாம் ஆபாசம்.

மூன்றாவதாக ஒரு நடன இயக்குநர். தற்போது அவர் இயக்குநரும்கூட. ’மீண்டும் ஹோட்டலின் லாபியில் சந்திப்பு. அவரின் அறையில் அளவான பேச்சு. அடுத்து கண்ணாடி முன்னால் ஆபாசநடனம் சொன்னார்’. என தொடர்கிறது.

அடுத்து நடிகர் சங்கத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் ஒரு நடிகரிடமிருந்து அச்சுறுத்தல் வருகிறது. தமிழ்சினிமாவின் இன்னொரு பக்கத்தைக் காட்டாமல் விடப்போவதில்லை’ என்று பதிவிட்டிருக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் ‘பணிக்காக படுக்கையைப் பகிர்தல்’ இருக்கிறது என்பதை உலகுக்கு காட்டதான் அம்மாயி சமூக வலைதளங்களில் பகிர்வதாக அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஸ்டேட்டஸ் குவிகின்றன.

ஸ்ரீரெட்டி சாட்டையைச் சுழற்றும் இப்பிரச்னையை ’ஆசைக் காட்டி, படுக்கைக்கு அழைத்து, ஏமாற்றிய ஒரு பரிதாப பிரச்னையாக பார்ப்பது சரியானதா’ என்ற ஒரு கேள்வி எழுகிறது.

சரி விஷயத்துக்கு வருவோம்…

ஒரு அழகானப்பெண் நடிக்க விரும்புகிறாள். வாய்ப்புகளுக்காக சினிமா சம்பந்தபட்டவர்களைச் சந்திக்கிறாள். அதில் நல்ல ஆண்களும் இருக்கிறார்கள். கெட்ட ஆண்களும் இருக்கிறார்கள். நல்லவர்களின் கண்கள் ப்ரேக் இல்லாத ஃபெர்ரார்ரி போல எங்கும் முட்டவும் இல்லை. பாயவும் இல்லை. ஆனால் சிலரது கண்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேனர் போல் இன்ச் பை இன்ச் அளவெடுக்கிறது.

அடுத்து என்ன நடக்கும்?

உங்களது உள்ளூணர்வு சட்டென்று விழித்துக்கொண்டு, பட்டென்று மூளைக்கு ஒரு அலார்ம் அடிக்கும்.

அந்நிலையில், உங்களுக்கு இருப்பது இரண்டே இரண்டு வாய்ப்புகள்தான்.

ஒன்று… அப்படியொரு வாய்ப்பு வேண்டவே வேண்டாம். திறமைக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தால் போதும் என அந்த அறையை விட்டு வெளியேறுவது.

இரண்டு…வாய்ப்பை எப்படியாவது வாங்கியே தீருவது. முடிந்தவரை இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென முடிவு செய்வது.

ஸ்ரீரெட்டி முன்வைக்கும் அனைத்தும் இரண்டாவது வகையில்தான் வருகிறது.

தெரிந்தே, சினிமா வாய்ப்புகளுக்காக முயற்சித்திருக்கிறார். விருப்பத்துடன் தொடர்ந்திருக்கிறார். குறிப்பாக…. அதில் அவர் பாதிக்கப்பட்டும் இருக்கிறார்.

நீங்கள் ஒரு முறை ஏமாறலாம். இரண்டு முறை ஏமாறலாம். மூன்று முறை ஏமாறலாம். இன்னும் ஒரு சில முறை கூட ஏமாறலாம். ஆனால் தொடர்ந்து ஏமாந்துகொண்டே இருப்பேன் என்றால்……….???????

’வாய்ப்புக்காக என்னால் ஒத்துழைக்க முடியாது.’ என்று இவர் பட்டியலிட்டும் சினிமா புள்ளிகளிடம் ஏன் சொல்லவே இல்லை. சிலர் இவரை வளைக்கும் விதமாக பேசிய வாட்ஸ் அப் சாட்டின் ஸ்கிரீன் ஷாட்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து இருக்கும் இவர், வாய்ப்பு வேண்டுமென்றால் படு என்ற சொன்னவர்களிடம் அதற்கு மறுப்பு தெரிவித்த சாட்களின் ஸ்கிரீன் ஷாட்களை ஏன் பகிரவில்லை என மனம் ஒரு கணம் யோசிக்கவே செய்கிறது.

இந்த கண்றாவியை ரசிக்க நாக்கில் எச்சில் ஒழுக, ஸ்மார்ட்ஃபோனை நோண்டிக்கொண்டிருப்பவர் களின் எண்ணிக்கை இந்த கட்டுரையை நான் எழுதிய அந்நேரத்தில் 6,033,351 பேர் ஸ்ரீ ரெட்டியின் ஃபேஸ்புக் பேஜ்ஐ லைக் செய்திருக்கிறார்கள். 6,009,733 பேர் ஃபாலோ செய்கிறார்கள். இந்த பேஜ்ஜில் தற்போது தமிழில் தட்டச்சு செய்யப்பட்ட கமெண்ட்கள் அதிகமிருக்கின்றன. இவற்றில் பல கமெண்ட்கள் ஆபாசத்தின் உச்சக்கட்டம். கமெண்ட் என்கிற பேரில் ஸ்ரீரெட்டியை படுக்கைக்கு அழைக்கும் இவர்கள்தான் அவருக்கு நியாயம் வாங்கி கொடுக்க போகிறார்களா?

எல்லாம் தெரிந்தே ஏமாந்துப் போன ஒரு பெண்ணை ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ‘உங்களுக்கு நாங்க இருக்கோம்’’ என்று மார்தட்டுகிறது சமூகம்.

உண்மையாகவே சமூகத்திற்காக உழைக்கும் எந்த லட்சியப் பெண்ணுக்கும் இல்லாத அளவு சமூக வலைதளங்களில் இவருக்கு அவ்வளவு ஃபாலோயர்கள். லைக்குகள்.

ஸ்ரீரெட்டி விஷயத்தில் மட்டுமல்ல… இன்றைய இளைய தலைமுறையினரிடமும் பொதுவாகவே ஒரு தவறானபோக்கு உருவாகி வருகிறது.

தினமும் நியூஸ் பேப்பரை எடுத்தால், ”திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மோசம் செய்தவர் கைது!’ என்ற செய்தி ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும்.

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறும் அந்த ஆண் மகனின் அந்த நிமிட அவசரத்திற்கு, அந்தப் பெண்ணும் விருப்பப்பட்டுதானே இணங்குகிறாள். அந்த நிமிடம் என்ன நடக்கப்போகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதை இருவரும் அறிந்தேதானே தொடர்கிறார்கள். வாழ்க்கையின் அடுத்த நொடி என்ன நடக்குமென்பதை அறிய முடியாத நம்மால், நம்முடைய கேரியரில், வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை எப்படி தீர்மானிக்க முடியும்?

அந்த ஒரு நிமிடம், அந்தப் பெண், ‘’எதுவாக இருந்தாலும், திருமணத்திற்கு பிறகு பார்க்கலாம்’’ என்று சிம்பிளாக ஒதுங்கினால், எந்த ப்ளே பாய்களாலும் ஒன்றும் செய்யமுடியாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

ஆணுக்குப் பெண் சமம் என்று பேசுவதில் மட்டும் அர்த்தமில்லை. பெண்கள் தங்களது கருத்துகளில், எண்ணங்களில் உறுதியாக இருக்கும் பட்சத்தில், ஆணாதிக்கவாதிகள் எல்லை மீறுவதைத் தடுக்கமுடியும்.

ஆனால் தான் தெரிந்தே ஒப்புக்கொண்டு இணங்கிய கமிட்மெண்ட்களை எல்லாம் பட்டியலிடுவதும், செய்வதை எல்லாம் செய்து விட்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று பொதுவெளியில், சமூக வலைதளங்களில் ஆபாசமான வார்த்தைகளுடன், நாகரீகமில்லாமல் பதிவிடுவது, பேசுவது என்பது கண்டிக்கத்தக்கதே. இந்த போக்கு அடுத்த தலைமுறைக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாகி கொண்டே வருகிறது

இன்னும் நாட்கள் சென்றால், ஸ்ரீரெட்டி லீக் செய்யவிருக்கும் பட்டியல் ஒரு திருமணத்துக்கு போடும் பட்டியலைவிட நீண்டாலும் கூட ஆச்சர்யமில்லை. இதற்கு ஸ்ரீரெட்டி மட்டுமில்லை நாமும் வெட்கப்பட வேண்டும்.

திறமையை நம்பு. கொள்கையில் உறுதியாக இரு. தாமதமானாலும் வெற்றி நிச்சயம் என்ற பாஸிட்டிவான என்ணங்களை இளையதலைமுறையினரிடம் விதைப்பதை விட்டுவிட்டு……

கொள்கையில் வளைந்து கொடு. அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள். வெற்றி நிச்சயம் என்று சொல்பவர்கள் தாங்கள் நினைத்து நடக்காவிட்டால் ’என்னைப் போல் யாரும் இந்த சமூகத்தில் இனி பாதிக்கப்படக்கூடாது. அதற்காக போராடுவேன்’ என்று பரபரப்பை கிளப்பபுவதும், தங்களது முழு மனதோடு தெரிந்தே செய்த தவறுகளையும் முன்வைத்து பரிதாபத்தைத் தேடுவதும் இனி அரங்கேறகூடாது.

இந்த வெட்கக்கேடான கோல்மாலுக்கு சமூக வலைதளங்களில் வரிந்துக்கட்டும் so called ‘virtual activists’ கொடுக்கும் முக்கியத்துவம் கலாச்சார சீரழிவின் உச்சக்கட்டம்.

claythoughts