கிரிக்கெட்: டி20 போட்டிகளுக்கென ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட பந்து! – AanthaiReporter.Com

கிரிக்கெட்: டி20 போட்டிகளுக்கென ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட பந்து!

இண்டர்நேஷனல் லெவலில் மிகவும் பாப்புலரான கிரிக்கெட் டி20 போட்டிகளுக்கென ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட பந்து ஒன்றை கூக்கபர்ரா நிறுவனம் இன்று (ஜூலை 8) அறிமுகப்படுத்தியுள்ளது.

கிரிக்கெட்டில் தற்போது பயன்படுத்தப்படும் பந்துகள் 10 ஓவருக்குள் அதன் பளபளப்புத் தன்மையை இழந்து விடும். பின்னர் மிடில் ஓவர்களில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறிவிடும். இதற்காக ஒருநாள் போட்டிகளில் ஆட்டத்தின் விறுவிறுப்பை அதிகரிக்க ஒரே இன்னிங்ஸில் இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது அதிக நேரம் அதன் தன்மையை இழக்காத பந்து ஒன்றை கூக்கபர்ரா நிறுவனம் வடிவமைத்துள்ளது. `டர்ஃப் 20′ என்ற பெயர் கொண்ட அந்த பந்து இன்னும் இரண்டு ஆண்டுகளில் சர்வதேச போட்டிகள் மற்றும் மற்ற டி20 லீக் தொடர்களில் பயன்படுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஷானன் கில் கூறுகையில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பந்துகள் 80 ஓவர்கள் வரை தாக்குப்பிடிக்கும். ஆனால் டி20 முற்றிலும் அதிலிருந்து மாறுபட்டது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டைப் போலவே டி20 கிரிக்கெட்டுக்கும் தனிவகை பந்துகளை வடிவமைக்க கூக்கபர்ரா நிறுவனம் முடிவு செய்தது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த பந்து, மற்ற பந்துகளைக் காட்டிலும் நல்ல வேகமும், பவுன்ஸ் ஆகும் திறனும் கொண்டது ” என்று தெரிவித்துள்ளார்.