அதிகரித்து வரும் ஆண்மைக் குறைவால் மனித இனம் அழியும் அபாயம்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் – AanthaiReporter.Com

அதிகரித்து வரும் ஆண்மைக் குறைவால் மனித இனம் அழியும் அபாயம்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

கையை மீறி போய் கொண்டிருக்கும் சுற்றுச் சூழல் பாதிப்பு, அதிக ரசாயனங்கள் கலந்த உணவு, மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவது அதிகரித்துள்ள தாக, அவ்வப்போதைய ஆய்வில் தெரிந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் கடந்த 10 ஆண்டுகளாக, 30 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், ஆண்மை குறைவால் பாதிக்கப்படுவது அதிகரித்து இருப்பதும், ரசாயனங்கள் மிகுந்த உணவு தானியங்கள் மற்றும் சுற்றுச் சூழல் மாசு காரணமாக, புற்றுநோய் உட்பட, பல்வேறு உடல் உபாதைகள் அதிகரித்து வருவது நிரூபிக்கப்பட்டிருப்பது போல், ஆண்மைக் குறைவு, மலட்டு தன்மைக்கும், இது முக்கிய காரணமாக உள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே வட அமெரிக்கா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த ஆண்களின் விந்தணு எண்ணிக்கை கடந்த 1973 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 50 முதல் 60 சதவிகிதம் வரை குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஜெருசலேமைச் சேர்ந்த ஹிப்ரூ பல்கலைக்கழகம் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளது. அதில், 42,935 ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கடந்த 1973-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை சுமார் 200 ஆராய்ச்சிகளை விரிவாக மேற்கொண்டதில் தற்போது அதிர்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதாவது, மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஆண்களின் விந்தணு எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுக் குறித்து ஆராய்ச்சியாளரான Dr Hagai Levine கூறுகையில், ‘ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவது எதிர்காலத்தில் மனித இனத்தை அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும். இனப்பெருக்கம் நின்றுவிட்டால் மனித இனம் முற்றிலுமாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது நிலவும் சுற்றுச்சூழல் மாறுபாடே ஆண்கள் விந்தணு குறைபாட்டுக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது. மாசு காரணமாக ஆண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பருமன் மற்றும் விந்தணு குறைபாட்டுக்கு இடையே தொடர்பு உள்ளது. புகை பிடிப்பதை நிறுத்துவது மூலம் விந்தணு குறைபாட்டை ஓரளவு சரிசெய்யலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் கடைப்பிடிப்பதன் மூலம் இந்தப் பிரச்னையின் பாதிப்பைக் குறைக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.