ஸ்பெஷல் டயட் ; டெய்லி 2 கிலோ விமர்சனங்களை எடுத்துக் கொள்வதே ஆரோக்கியத்தின் ரகசியம்!~- மோடி பேட்டி – AanthaiReporter.Com

ஸ்பெஷல் டயட் ; டெய்லி 2 கிலோ விமர்சனங்களை எடுத்துக் கொள்வதே ஆரோக்கியத்தின் ரகசியம்!~- மோடி பேட்டி

”நம் மகள் தாமதமாக வீட்டுக்கு வந்தால் ஏன் என கேட்கும் நாம், மகன்கள் தாமதமாக வந்தால் இதே கேள்வியை கேட்கிறோமா? இந்த பலாத்காரத்தை செய்த பாவிகள் யாரோ ஒருவருடைய மகன்கள். இதனிடையே நாட்டில் நடக்கும் பாலியல் பலாத்கார நிகழ்வுகளை அரசியலாக்கக் கூடாது’’ என பிரதமர் மோடி இங்கிலாந்தில் இந்தியர்களிடம் பேசிய போது வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடி நான்கு நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்நிலையில் லண்டனில் ஐரோப்பா – இந்தியா கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று பேசினார். மோடிக்கும், இந்திய வாழ் மக்களுக்கும் இடையே கேள்வி பதில்கள் பாணியிலான இந்நிகழ்ச்சி  ‘பாரத் கி பாத், சப்கே சாத்’ என்ற பெயரில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பிரசூன் ஜோஷி.

இதில் 1,700 பேர் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். சமூக இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்த கூட்டத்தில் பிரதமர் பதில் அளித்து பேசியதன் சாராம்சமிது:

”இந்தியாவில் சமீபத்தில் நடந்த பலாத்கார சம்பவங்கள் நாட்டுக்கு அவமானம். நமது நாட்டின் மகள்கள் சீரழிக்கப்படுவதை நம்மால் எப்படி பொருத்துக் கொள்ள முடியும்? பல்வேறு ஆட்சி காலங்களில் நடந்த பலாத்கார சம்பவங்களின் எண்ணிக்கையை நம்மால் ஒப்பிட முடியுமா? எங்கள் ஆட்சியில் இவ்வளவு பலாத்காரம் நடந்தது, உங்கள் ஆட்சியில் இவ்வளவு பலாத்காரம் நடந்தது என கூற முடியாது. கந்துவா பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்டது 8 வயது சிறுமி. பெண்களை மதிக்க வேண்டும் என மக்கள்தான் தங்கள் மகன்களுக்கு கற்றுத் தர வேண்டும். மகள் தாமதமாக வீட்டுக்கு வந்தால் ஏன் என கேட்கும் நாம், மகன்கள் தாமதமாக வந்தால் இதே கேள்வியை கேட்கிறோமா? இந்த பலாத்காரத்தை செய்த பாவிகள் யாரோ ஒருவருடைய மகன்கள். இது மிகவும் கவலையளிக்கிறது. பலாத்காரம் அவமான செயல். இதை அரசியலாக்க வேண்டாம். பாலியல் வன்முறைகள் ஒட்டுமொத்த சமூகத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தும் விஷயம்.

எனது வாழ்க்கை ரயில் நிலையத்தில் தொடங்கியது. அது பல விஷயங்களை கற்றுக் கொடுத்து. தற்போது 125 கோடி இந்தியர்களின் சேவகனாக லண்டன் அரண்மனைக்கு வந்துள்ளேன். ஏழ்மையை பற்றி அறிய நான் புத்தகத்தை படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை அனுப வித்துள்ளேன். அதனால் ஏழை மக்களின் வாழ்க்கையை மாற்றுவதாக எனது கொள்கைகள் உள்ளன. ஜனநாயக நாட்டில் மக்கள் கடவுள்களுக்கு இணையானவர்கள். அவர்கள் விரும்பினால் டீ விற்பவர் கூட மக்கள் பிரதிநிதியாக மாறி, லண்டன் அரண்மனைக்கு வந்து கை குலுக்க முடியும்

நானும் உங்களை போன்ற ஒரு சாதாரண மனிதன்தான். நான் இருக்கும் பதவி, நான் பார்க்கும் வேலை மட்டும்தான். நான் ஒரு வாழ்நாள் மாணவன். அனைத்து இந்திய மக்களும் எனக்கு ஒன்று தான் நான் முடிவுகளை ஒரு சாரருக்காக எடுக்க மாட்டேன். நான் தவறுகள் செய்யலாம், ஆனால் அது தவறான நோக்கத்துடன் இருந்தது இல்லை.”

“என்னால் மட்டும் இந்தியாவை மாற்றிவிட முடியும் என்று நான் ஒருபோதும் நினைத்ததே இல்லை. ஆனால், லட்சம் பிரச்சனைகள் நமக்கிருந்தாலும் அதனை தீர்க்க கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர் என்பவன் நான். அதுதான் எனக்கு உறுதியளிக்கிறது.”

எனக்கு மூன்றே விஷயங்கள் வேண்டும், மாணவர்களுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலை, முதியவர்களுக்கு மருத்துவம்.”

“18,000 கிராமங்களில் மின்சார வசதியில்லை. பல பெண்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. இதுபோன்ற பிரச்சனைகள் இன்றும் இந்தியாவில் இருப்பதால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. நான் ஒரு உறுதியுடன் இருக்கிறேன், இந்திய ஏழைகளுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அது .

கடந்த 20 ஆண்டுகளாக ஸ்பெஷல் டயட்டில் இருக்கிறேன், தினமும் 2 கிலோ விமர்சனங்களை எடுத்துக் கொள்வதே என் ஆரோக்கியத்தின் ரகசியம்

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

இதனிடையே  அந்நாட்டில் மோடிக்கு எதிராக பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இங்கிலாந்தின் கேஸ்ட் வாட்ச் அமைப்பு மற்றும் தெற்காசிய ஒற்றுமை குழுவை சேர்ந்த சில நூறு பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கதுவா பாலியல் பலாத்காரம் மற்றும் கடந்த ஆண்டு மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய பத்திரிகையாளர் கவுரிலிங்கேஷ் ஆகியோரின் புகைப்படத்தை ஏந்தியபடி அதில் கலந்து கொண்டனர். இதில் இங்கிலாந்தில் உள்ள பல்வேறு பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்களும் வெள்ளை உடை அணிந்து பங்கேற்றனர். அப்போது புலம்பெயர்ந்த இந்தியர்கள் சிலர் இந்தியாவின் வளர்ச்சி குறித்து முழக்கமிட்டபடி பிரதமர் மோடிக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

அதே போல், கதுவா, உன்னாவ் சிறுமிகள் பலாத்கார சம்பவத்தை கண்டித்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாஷிங்டனில் இந்திய தூதரகம் முன் உள்ள காந்தி சிலை அருகே நடந்த இந்த போராட்டத்தில், பெண்கள், குழந்தைகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.