மார்ச் 1 முதல் தமிழ் உள்பட தென்னிந்திய திரையுலகமே வேலைநிறுத்தம்!

மார்ச் 1 முதல் தமிழ் உள்பட தென்னிந்திய திரையுலகமே வேலைநிறுத்தம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஜி.எஸ்.டி.க்கு எதிராகவும், தியேட்டர்களின் அடாவடியைக் கண்டும் ஸ்ட்ரைக் என்று அறிவித்ததால் அடி வாங்கிய பல தயாரிப்பளர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் தற்போது திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இம்முறை தென்னிந்திய திரையுலகினை சார்ந்த ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் ஒட்டுமொத்தமாக இம்முடிவை எடுத்துள்ளார்கள்.

தற்போதைய திரையிடல் என்பது டிஜிட்டலாக மாறும் முன்புவரை, பிலிம் படப் பிரதிகளைத் திரையரங்குகளுக்குத் தயாரிப்பாளர்கள் அனுப்பிவந்தார்கள். பட வெளியீட்டின் முதல் நாள் முதல் காட்சிக்குப் படப் பெட்டி பேருந்து அல்லது ரயிலில் வந்திறங்கும். அதை யானை மீது ஏற்றிக்கொண்டு மேள தாளம் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் திரையரங்குக்கு கொண்டுவந்து சேர்ப்பார்கள் ரசிகர்கள். தங்கள் அபிமான நட்சத்திரங்களின் கட்- அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்து பட்டாசு வெடித்தபின் படக்காட்சித் தொடங்கும். இன்று கட் –அவுட் மறைந்து பிளெக்ஸ் பேனர்கள் வந்துவிட்டதுபோலவே, படப் பெட்டிகள் மறைந்து டிஜிட்டல் சினிமா வந்துவிட்டது.

அதாவது மாஸ்டர் சிடியில் பதிவுசெய்யப்பட்ட டிஜிட்டல் திரைப்படம், திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் புரொஜெக்டர்களில் டவுன்லோடு செய்யப்படுகிறது. கம்ப்யூட்டர்களுடன் இணைந்த அதிநவீன டிஜிட்டல் புரொஜெக்டர்களில் டிஜிட்டல் சினிமாவை ஏற்றித் தருவதற்கென்று தனது தொழில்நுட்ப ஊழியரை அனுப்புகிறது டிஜிட்டல் சினிமா நிறுவனம். காட்சி நேரத்துக்குச் சற்று முன்னதாக நிறுவனம் தரும் பாஸ் வேர்டை உள்ளீடு செய்தால் மட்டுமே திரையில் காட்சி விரியும். இந்த முறையில் திரையரங்குகளில் டிஜிட்டல் புரொஜெக்டர்களை நிறுவித் தந்து, டிஜிட்டல் சினிமா சேவையை வழங்கும் பல நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ‘க்யூப்’.

முந்தைய படப் பெட்டிகளின் காலத்தில் படச் சுருளில் ஒரு பிரதி எடுக்க 50 ஆயிரம் ரூபாய்வரை செலவானது. படப் பிரதியின் விலையை மனதில் வைத்துக் குறைந்த அளவே பிரதிகள் போடப்பட்டு, அதற்கு ஏற்ற எண்ணிக்கையில் திரையரங்குகளில் படங்கள் வெளியாகிவந்தன. இருப்பினும் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் அதிகபட்சமாக 250 பிரதிகள் எடுக்கப்படும் நிலை இருந்தது. தற்போது தயாரிப்பாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, “டிஜிட்டல் முறையில் ஒரு படத்தை மாஸ்டரிங் சிடி செய்வதற்கு 500 ரூபாய்வரை செலவாகிறது.போக்குவரத்துச் செலவு, இதர செலவு என மொத்தமாகச் சேர்த்தாலும் 1,500 ரூபாயைக் கண்டிப்பாகத் தாண்டாது என்பது எங்கள் கணக்கு. ஆனால், இதற்கு மாறாக க்யூப் நிறுவனம் பல மடங்கு அதிகமாக வாங்குகிறது. குறிப்பாகத் திரையரங்கில் அவர்கள் நிறுவியிருக்கும் புரொஜெக்டர்களின் விலையையும் சேர்த்தே எங்களிடம் வசூலிக்கும் விதமாகக் கட்டணத்தை நிர்ணயித்து செயல்படுத்திவருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இரண்டு வருஷங்களுக்கு மேலாகவே நிலவி வந்தது.

இந்நிலையில்தான் திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடுவதற்கான ஒளிபரப்புக் கட்டணத்தை அதிகமாக பெற்றுவருவதைக் கண்டித்தும், அந்த நிறுவனங்களின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைத்து திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், திரையுலகினருக்கும் நன்மை செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடும், சிறிய முதலீட்டு படங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிரமத்துக்கும், பொருளாதார இழப்புக்கும் தீர்வு காணும் வகையிலும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் வெளியிட்ட அறிக்கையில், “தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தினை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கொஞ்சமும் செவி சாய்க்காத கண்டுகொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு (Digital Service Providers) எதிராக தென்னிந்திய திரையுலகினை சார்ந்த ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் ஒட்டுமொத்தமாக மார்ச்-1ம் தேதி முதல், எங்களின் இந்த நியாமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள்.

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் இந்த பிரச்சனை சம்பந்தமாக விரிவாக கலந்து பேசி இந்த டிஜிட்டல் சேவை வழக்குனர்களுக்கு (Digital Service Providers) எதிராக தமிழ்த் திரையுலகமும் மேற்கண்ட மாநிலங்களுடன் இணைந்து ஆதரவு தருவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த Digital Service Providers – க்கு பதிலாக மாற்று வழி செய்வது சம்பந்தமாகவும் பேசி முடிவெடுக்கப்பட்டது.

எனவே தொடர்ந்து அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நமது தமிழ்த் திரையு லகமானது மிக மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டு இன்று தயாரிப்பாளர்களின் நிலை ஒரு கேள்விகுறியாகிவிட்டதை நாம் அனைவரும் அறிந்ததே !! இந்த நிலை மாற, நமது நியாமான பல்வேறு கோரிக்கைகளும் நிறைவேறும் பொருட்டு வரும் மார்ச்-1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எந்த ஒரு திரைப்படதினையும் வெளியிடுவதில்லை என்று ஒட்டு மொத்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக நமது தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்

Related Posts

error: Content is protected !!