ஆதார் எண்ணை முக்கிய சேவைகளிலிருந்து திரும்ப பெற்று கொள்ள வாய்ப்பு! – AanthaiReporter.Com

ஆதார் எண்ணை முக்கிய சேவைகளிலிருந்து திரும்ப பெற்று கொள்ள வாய்ப்பு!

ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக மத்தியஅரசு கூறிவந்தாலும் ஆதார் பாது காப்பு குறைபாடு கொண்டது தான் என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் இந்த ஆதார் குறித்து சுப்ரீம் கோர்ட் சில பல நிபந்தனைகளை விதித்திருந்த நிலையில் அனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை முக்கிய சேவைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் கெடு விதித்தது.

இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016ஐ எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் பல் வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனு தாரரர்கள் தரப்பில் கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தனது உத்தரவில்,”அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான். ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது. அதேசமயம், மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரிய முறையில் பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்தது.

மேலும்,”தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஆதார் சட்டத்தின் 57ஆவது பிரிவு ரத்து செய்யப்படுகிறது. அதுபோலவே ஆதார் எண் இல்லை என்பதற்காக தனிநபர்களுக்கு அரசின் சலுகைகள், உதவிகள் கிடைக்காமல் தடுத்து நிறுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வங்கிகள், மொபைல் இணைப்பு பெற ஆதார் தேவை என கட்டாயப்படுத்தக்கூடாது. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் உத்தரவு சரியானதுதான்” எனக் கூறி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து ஆதார் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கி உள்ளன. இதையொட்டி ஆதார் ஆணையம் சில பரிந்துரைகளை கொண்டு வந்தன. அந்த பரிந்துரைகள் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. சட்ட அமைச்சகம் அதை பரிசீலித்து, “அனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை முக்கிய சேவைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்று திருத்தம் செய்துள்ளது.

தற்போது இந்த பரிந்துரை மத்திய அமைச்சரவையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக புதிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சட்ட திருத்தம், ஆதார் கட்டாயம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும். மேலும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்ணை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் வழி வகுக்கும். சட்டத் திருத்தத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வேண்டுமென்றால் ஆதாரை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது.