நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு! – AanthaiReporter.Com

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு!

தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

17வது பார்லிமெண்ட் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த நிலையில், தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், தமிழகம் மற்றும் கேரளா. ஆந்திர மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தலைவர் யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு சசிதரூர் உள்பட பலர் ஆர்வம் காட்டிய நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறறது. இதில் 52 மக்களவை எம்.பி.க்களுடன், மாநிலங்களவை உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தியை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த, 12 கோடியே 13 லட்சம் வாக்காளர்களுக்கு, சோனியாகாந்தி நன்றி தெரிவித்துக் கொண்டார்.