தமிழகத்தில் இழுத்து மூடப்படும் இன்ஜினியரிங் காலேஜ்கள் எண்ணிக்கை அதிகரிப்பு! – AanthaiReporter.Com

தமிழகத்தில் இழுத்து மூடப்படும் இன்ஜினியரிங் காலேஜ்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

நம் நாட்டில் ஆண்டு தோறும் பொறியியல் படிப்பை முடித்து வெளியில் வருபவர்களின் எண்ணிக்கை 8 லட்சம் பேர். அறிவியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை 15 லட்சம் பேர். தமிழகத்தில் ஒவ்வொரு வருஷமும்ம் 2 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளியில் வருகின்றனர். 2.5 லட்சம் பேர் கலை, அறிவியல் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இவ்வாறு அரசு மற்றும் அரசு சாரா வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான கல்வி தகுதியை பெற்று வெளியேறுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் அதிகரித்து வருகிறது. இத்தகைய நிலையால் தமிழகத்தில் குறிப்பாக பொறியியல் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டாத நிலை யில் பொறியியல் கலந்தாய்வில் 1 லட்சம் இடங்கள் கூட நிரம்பாததால், முறையான கட்டமைப்பு இல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் முடிவெடுத்து  உள்ளது.

அதாவது இந்தாண்டு 5 சுற்றுகளாக நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் 170,628 காலி இடங்களில், 74,601 இடங்கள் மட்டுமே நிரம்பியது. இதனால், பொறியியல் படிப்பில் 1 லட்சம் காலி இடங்கள் உருவானது. இதில் 47 பொறியியல் கல்லூரிகளில் 10க்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளதாகவும், 81 கல்லூரி களில் 10 சதவீத இடங்கள் கூட நிரம்பவில்லை என தெரிவித்தனர்.

இந்நிலையில், அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் சூரப்பா தலைமை யில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் மாணவர்கள் சேர்க்கை குறைவிற்கான காரணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து, முறையான கட்டமைப்பு, போதிய பேராசிரியர்கள் இல்லாத தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப் பட்டதாகத் துணைவேந்தர் தெரிவித்தார். மேலும், மாணவர் சேர்க்கை இல்லாத தனியார் கல்லூரிகளின் பட்டியல் அகில இந்திய தொழில் நுட்பக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டால், தனியார் கல்லூரி களை மூடத் தயாராக இருப்பதாகவும் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார்.

முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் 550 பொறியியல் கல்லுாரிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மொத்த கல்லுாரி எண்ணிக்கையில் 487 மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் 63 பொறியியல் கல்லுாரிகள் மூடப் பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லுாரிகள் முன்னணி தனியார் கல்லுாரிகள் என 30 கல்லுாரிகளில் தான் அதிகபட்ச இடங்கள் நிரம்பியுள்ளது. 120 பொறியியல் கல்லுாரிகளில 50 முதல் 100 இடங்கள் வரை மட்டுமே நிரம்பியிருக்கின்றது. 47 கல்லுாரிகளில் வெறும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளதால் இந்த கல்லுாரிகளும் இந்த ஆண்டே மூடுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.