உங்க குட்டீஸ்கிட்டே ஸ்மார்ட் போனா? அப்ப குழந்தையோட பேச்சு திறன் பாதிக்கும்! – AanthaiReporter.Com

உங்க குட்டீஸ்கிட்டே ஸ்மார்ட் போனா? அப்ப குழந்தையோட பேச்சு திறன் பாதிக்கும்!

இப்போதெல்லாம் குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே அதிகரித்து வருகிறது. அதிலும் நான்கில் மூன்று பங்கு குழந்தைகள் செல்பேசிகளையும், பாதிப் பேர் தொலைக்காட்சிகளையும், மூன்று சதவீதக் குழந்தைகள் ஸ்மார்ட் போன் மற்றும் டாப்லெட்களையும் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. அத்துடன் ஒரு வயது குழந்தை நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 நிமிடங்கள் டாப்லெட் அல்லது ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறது என்றும் இது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் முன்னரே பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. .

child may 6

இந்நிலையில் எவ்வளவு அதிகமாக குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட் போன்ற கருவிகளை பயன்படுத்துகிறார்களோ, அதற்கேற்றார் போல அவர்கள் பேசும் திறன் தள்ளிப்போகும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.இந்த ஆய்வில், 30 நிமிடங்களுக்கு அதிகமாக கையில் ஸ்மார்ட்ஃபோன் போன்ற கருவிகளை வைத்திருக்கும்போது, அவர்கள் தெளிவாக பேசும் திறன் 49% தள்ளிப்போகிறது என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பேசிய, கனடாவைச் சேர்ந்த குழைந்தைகள் நல மருத்துவர் கேத்தரின் பேர்கென், “இன்று எல்லோரிடமும் கையில் ஒரு கருவி இருக்கிறது. குழந்தைகள் நலனுக்கான புதிய வழிகாட்டுத்தல்களில், குழந்தைகள் மொபைல் போன்ற கருவிகளை பார்க்கும் நேரம் குறைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஸ்மார்ட்ஃபோன் கருவிகளை பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இப்போதுதான் முதல் முறையாக, அவர்கள் மொபைல் பயன்படுத்தும் நேரத்துக்கும், பேசும் திறனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது” என்றார்.

அதே நேரத்தில், குழந்தைகள் மற்றவர்களுடன் பேசுவது, உடல் மொழி, சைகை போன்றவைக்கும், மொபைல் கருவிகள் பயன்பாட்டுக்கும் தொடர்பு இல்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள், சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த குழந்தைகள் நல மருத்துவ கல்வி சங்கங்களின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

6 மாதங்கள் முதல் 2 வயது வரை இருக்கும் 894 குழந்தைகள் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது பெற்றோரிடம் பேசிய போது, 20 சதவித குழந்தைகள், தினமும் சராசரியாக 28 நிமிடங்கள் மொபைல், டாப்லெட் போன்ற கருவிகளை பயன்படுத்தினார்கள் என தெரியவந்துள்ளது. குழந்தை பிறந்து 18 மாதங்களுக்கு, அவர்கள் மொபைல் போன்ற கையடக்க கருவிகளின் திரையை பார்க்கக்கூடாது என அமெரிக்காவில் இருக்கும் குழந்தைகள் நல அகாடமி சமீபத்தில் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.